பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒருநாள் வீதம் ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கர்நாடக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு அறிவித்திருக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் கர்நாடகம் என்பது பாராட்டுக்குரியது.
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடர்பாகப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்தாலும், உலக அளவில் மிகச் சில நாடுகளே மாதவிடாய் விடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் 1992 முதல் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாள்கள் மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ளது.
கேரளத்தில் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மாணவியருக்கும் பேராசிரியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு 2023இல் அறிவிக்கப்பட்டது. ஒடிஷாவில் 55 வயதுக்கு உள்பட்ட அரசு ஊழியர்களுக்கு 2024 முதல் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது.
பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலகக் கட்டமைப்பு தொடங்கி பணிச்சூழல்வரை எல்லாமே ஆண்களை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படும்போது, பெண்கள் அதற்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதாகிறது. மாதவிடாய் விடுப்பு என்பது உழைக்கும் பெண்களின் அடிப்படை உரிமை.
இந்தியாவின் உழைப்பாளர் படையில் 26 சதவீதம் மட்டுமே பெண்கள் பங்கேற்பதற்குப் பெண்களுக்கு உகந்த பணிச்சூழல் இல்லாததும் ஒரு முக்கியமான காரணம். மகப்பேறு, மாதவிடாய் போன்றவை பெண்களின் தகுதிக் குறைபாடு அல்ல; அவை ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்பாக நிகழும் உடலியல் செயல்பாடுகள். ஆனால், கற்பிதங்களும் பிற்போக்குக் கருத்துகளும் நிலவும் நம் நாட்டில், மாதவிடாய் விடுப்பும் மகப்பேறு விடுப்பும் பெண்களுக்கு அளிக்கப்படும் ‘சலுகை’யாகச் சுருக்கப்படுகின்றன.
2024இல் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது அவர்களின் பணி வாய்ப்பைப் பாதிக்கும். இது மாநில அரசுகளின் கொள்கை முடிவு சார்ந்தது’ எனத் தெரிவித்ததோடு, அந்த மனுவைத் தள்ளுபடியும் செய்தது.
இத்தகைய சூழலில், பெண்களுக்கு உகந்த வகையில் பணிச்சூழல் அமைவதை உறுதிப்படுத்துவதோடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் பராமரிக்கப்படுவதை வலியுறுத்துவதும் அரசுகளின் கடமை என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதியம் தொடங்கிப் பல்வேறு படிநிலைகளிலும் பாகுபாடு நிலவும் சூழலில், பெண்களுக்கு அளிக்கப்படும் மாதவிடாய் விடுப்பு எந்த வகையிலும் அவர்களது பணி வாய்ப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அரசின் பொறுப்பு. தேசிய அளவில் தொழிலாளர் படை பங்களிப்பில் கர்நாடகப் பெண்கள் முன்னிலை (31.5%) வகிக்கும் நிலையில் தற்போதைய மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு, அம்மாநிலத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும்.
ஏற்கெனவே, சில மாநிலங்களில் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை வழங்கிவருகின்றன. மாதவிடாய் விடுப்பு என்பது சட்டமாக்கப்படும்போது, பெண் ஊழியர்கள் அனைவரும் பயன்பெறுவர்.
மாதவிடாயைப் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதாமல், மனித குல மறுஉற்பத்திக்கான ஆதாரம் என்பதைக் கருத்தில்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும். அரசு, தனியார் என்கிற பாகுபாடின்றி வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும்படி அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுதான் பெண்களின் பணிப் பங்களிப்பை உயர்த்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்!