மரியா கொரினா மச்சாடோ 
சிறப்புக் கட்டுரைகள்

அமைதிப் பரிசின் அரசியல் | அமைதி - நோபல் 2025 

யமுனா ராஜேந்திரன்

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. “அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் தொடுத்து, அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் தலைமையிலான வெனிசுவேலாவை விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்த மரியாவுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

ஒன்பது போர்களை நிறுத்​தி​யதற்​காகத் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனக் கூறிவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்​புக்கு இந்தப் பரிசு வழங்கப்​ப​டா​விட்​டாலும், இந்தப் பரிசை டிரம்ப்​புக்குச் சமர்ப்​பிப்பதாக மரியா அறிவித்தது இன்னொரு சர்ச்சைக்கு வழிவகுத்தது.

வெனிசுவேலா மீது டிரம்ப் போர் முஸ்தீபுகள் செய்து​வரும் சூழலில், அதனை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம் என நிக்கோலஸ் மதுரோ அறிவித்​துள்ள காலத்தில் இப்பரிசு மரியா​வுக்கு வழங்கப்​பட்​டுள்ளது. இச்சூழலில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர் எவ்வாறு தேர்வுசெய்​யப்​படு​கிறார் என்பது குறித்தும் அடிப்​படையாக ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.

அமைதிப் பரிசின் அடிப்படை: ‘மக்களின் அமைதிக்கும் சகோதரத்து​வத்துக்காகவும் நாடுகளுக்கு இடையேயான சகோதரத்து​வத்​துக்​காகவும் நிரந்​தரமான படைகளை ஒழித்தல், படைபலத்தைக் குறைத்தல், சமாதான மாநாடுகளை நடத்துதல், அத்தகைய அரங்குகளை ஊக்கு​வித்தல் ஆகியவற்றுக்காக அதிகபட்​சமான, சிறந்த பணிகளைச் செய்தவர்​களைக் கௌரவிப்​ப​தற்​காக​’ - அமைதிக்கான நோபல் பரிசை ஆல்பிரட் நோபல் நிறுவி​னார்.

பிற பரிசுகள் அனைத்தும் அந்த முறையில் மேதைமை கொண்ட கல்வி​யாளர்​களால், அறிவாளி​களால், அந்தத் துறையில் அனுபவத்தின் - நடைமுறையின் அடிப்​படையில் நிகழ்ந்த உண்மைக்​காகத் தரப்படு​கின்றன. இப்பரிசுகள் அரசியல்​வா​தி​களின் தலையீடற்ற - துறைசார் வல்லுநர்​களால் தேர்வுசெய்​யப்​படுபவை.

அமைதிப் பரிசின் தேர்வுக் குழு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நார்வே நாட்டின் நாடாளு​மன்​றத்​தினால் இந்தத் தேர்வுக் குழு நியமிக்​கப்​படு​கிறது. சமகால நாடாளுமன்ற உறுப்​பினர்கள் அல்லாத, கடந்தகால நாடாளுமன்ற உறுப்​பினர்களான அரசியல்​வா​தி​களைக் கொண்டதாக இந்தத் தேர்வுக் குழு இயங்கு​கிறது.

ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் வலது - நடுவாந்திர - தாராள​வா​திகளே அதிகம் இடம்பெறுவர். மூன்று தேர்வுக் குழு உறுப்​பினர்​களால் தேர்வுசெய்​யப்​படுபவர் பரிசுக்​குரியவராக அறிவிக்​கப்​படு​வார். இவ்வாறு பிற துறைகள் போலன்றி சமாதானப் பரிசு இயல்பாகவே அரசியல்​வா​தி​களின் அகநிலையில் இருந்து முடிவு செய்யப்​படு​கிறது.

விருதாளர்​களின் பின்னணி: அமைதிக்கான உண்மையான பங்களிப்பு​களைவிட சர்வதேச வியூக அரசியல் காரணங்​களுக்காக இது வழங்கப்​படு​வ​தாகத் தோன்றும்போது விவாதங்கள் எழுகின்றன. 1901 முதல் கடந்த 125 ஆண்டு​களில் சமாதானத்​துக்கான நோபல் பரிசு பெற்றவர்​களில் 25 பேர்தான் ஐரோப்​பியர் அல்லாத ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்​தவர்கள்.

மற்ற அனைவரும் மேற்கு ஐரோப்​பியர்கள், அமெரிக்​கர்கள், கிழக்கு ஐரோப்​பியர்கள். சோவியத் யூனியன் குறித்த மனித உரிமை விமர்​சகர்கள், ஐரோப்​பியர் அல்லாதவர்​களின் மனித உரிமை, பெண் சுதந்​திரம், ஐரோப்பிய வகை ஜனநாயகம் போன்ற​வற்றுக்​காகத் தேர்வுசெய்​யப்​பட்​ட​வர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

இயல்பாகவே ஐரோப்பிய மைய சமாதானம், மனித உரிமை, முன்னேற்றம் போன்ற கருத்​தாக்​கங்கள் குறித்த ஒரு மதிப்​பீட்டுக்கு நாம் வர வேண்டும். அது ராணுவ வலிமை அல்லது போர்களின் வழி சுமத்​தப்பட்ட சமாதானம், பொருளா​தாரச் சமத்துவம் என்பதல்​லாமல் தனியார் செல்வக்கு​விப்பு என்பதன் அடிப்​படையிலான பொருளியல் முன்னேற்றம், உணவு, உடை, இருப்​பிடம், கல்வி​யுரிமை, சமூகப் பாதுகாப்பு, நாடுகளின் இறையாண்மை தவிர்த்த மனித உரிமை என்பதே ஐரோப்​பியத் தர்க்கம்.

நாடுகளுக்கு இடையில் சமாதானம், மக்களுக்கு இடையில் அமைதி என்னும் ஆல்பிரட் நோபலின் கருத்​தாக்​கங்​களுடன் அடிப்​படை​யிலேயே இது முரண்​படு​கிறது. இது குறித்த விமர்சன உணர்வு கொண்ட அரசியல்​வா​திகள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்​போது, ரிகபர்ட்டோ மஞ்சு என்னும் லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடி உரிமைப் போராளி, தென் ஆப்ரிக்க நிறவெறி எதிர்ப்பு விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா போன்ற​வர்கள் நோபல் சமாதானப் பரிசு பெற்றார்கள்.

இது இல்லாத ஐரோப்பிய மையவாதத்தை முன்னெடுப்​பவர்கள், காலனிய, முதலாளிய, போரின் வழி சமாதானம் என்பதை வைத்து முடிவெடுக்​கிறார்கள். பராக் ஒபாமாவின் பதவிக்​காலம் தொடங்கி ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், அவருக்கு 2009ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசு வழங்கப்​பட்டது.

ஏன் அதைப் பெற்றோம் என்பது குறித்துத் தனக்கு உறுதி​யாகத் தெரிய​வில்லை என்று பல ஆண்டு​களுக்குப் பின்னரும் ஒபாமா சொன்னார். அவரது பதவிக்​காலத்தில் அமெரிக்க ராணுவப் படைகள் ஆப்கானிஸ்​தான், ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் தீவிர​மாகச் செயல்​பட்டன.

காலனிய ஆதிக்க மனோபாவம்: உலக வரலாற்றில் இரண்டாம் உலகப் போரும், ஹிட்லரின் முடிவும் இரண்டு செய்திகளை அறிவித்தன. ஒன்று, மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்​படையிலான, சர்வதேச நீதிமன்றம், ஐநா மன்றம் போன்றவை வழங்கும் உலகச் சட்டங்​களின் அடிப்​படையிலான அரசியல். மற்றது, இனக்கொலையை இனி வரலாறு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்னும் தரிசனம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் வியட்​நாம், ஈராக், ஆப்கானிஸ்​தான், கிழக்கு ஐரோப்பா, ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள், பாலஸ்​தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் ராணுவத் தலையீடுகளை நிகழ்த்​தியவை அமெரிக்க அரசும் - மேற்கத்திய அரசுகளும்​தான். சமாதானம் என்பது இரு தரப்பும் மனப்பூர்வமாக ஒப்புக்​கொள்வது. பாலஸ்தீன விஷயத்தில் இன்றும் செயல்​படுவது காலனியக் கட்டமைப்பின் சமாதானம். வலுவற்றவர் மீது சுமத்​தப்​படும் சமாதானம்.

நாடகீயமான போர் அச்சுறுத்தல்கள், யார் அதிகமாக அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்னும் முழக்கங்கள், ஊடகப் பிரச்சாரம் போன்றவற்றின் மூலம் அமைதி அடையப்படுவதில்லை. அது உண்மையான சமாதானம், மனித உரிமைப் பாதுகாப்பு, போரற்ற உலகு, நீண்டகாலச் சமூக மாற்றம் போன்றவை மூலம் அடையப்படுகிறது. இந்த லட்சியங்களை உண்மையிலேயே உள்ளடக்கியவர்களை நோபல் அமைதிப் பரிசு கௌரவிக்கும்போது, அது உலகளாவிய கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறது.

1937ஆம் ஆண்டு முதல் 1948 வரை ஐந்து முறை நோபல் அமைதிப் பரிசுக்கு மகாத்மா காந்தி பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஐந்து முறையும் அந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னிருப்பது காலனிய ஆதிக்க மனோபாவம் என்பதன்றி வேறல்ல. அதிகாரத்தையும் கொள்கை​யையும் சமாதானத்தின் இலக்கையும் குழப்பும்போது நோபல் அமைதிப் பரிசு, தனது நோக்கத்தை இழக்கிறது. ஆக, வெனிசுவேலா மீது போரை விரும்பும் டிரம்ப்பின் ஆசி பெற்ற, தனது சொந்த நாட்டின் மீது இஸ்ரேலிய - அமெரிக்கப் படையெடுப்பைக் கோரும் மரியா​வுக்கு அறிவிக்​கப்பட்ட அமைதிப் பரிசு சர்ச்சைக்​குள்​ளாவது வியப்​புக்​குரிய விஷயம் இல்லை!

- தொடர்புக்கு: rajrosa@gmail.com

SCROLL FOR NEXT