இந்தியாவில் தேசியத் துணை - சுகாதாரத் தொழில்முறையாளர்கள் ஆணையச் சட்டம் 2021இல் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மாநிலத் துணை - சுகாதாரத் தொழில்முறையாளர்கள் ஆணை விதி 2023இல் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்கள், மயக்கவியல் தொழில்நுட்பப் பணியாளர்கள், இயன்முறை மருத்துவம், கதிரியக்கத் தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்பட மருத்துவ உளவியலாளர்களுடன் மருத்துவ சமூகப் பணியாளர்கள் என 10 வகையான துணை - மருத்துவத் தொழில்முறைப் பணியாளர்கள் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒன்பது உறுப்பினர்கள் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் / மருத்துவ நிறுவனங்களிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சமூகப் பராமரிப்பு, நடத்தை சார்ந்த சுகாதார அறிவியல் - இதர சமூகப் பராமரிப்பு தொழில்முறைப் பணியாளர்களுக்கு மட்டும் சென்னை சமூக அறிவியல் கல்லூரி, சமூகப் பணித் துறையின் முன்னாள் துறைத் தலைவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நம் நாட்டில் மருத்துவ சமூகப் பணியானது தொழில்முறையாகத் தொடங்கி 100 ஆண்டுகளைத் தொடவிருக்கும் வேளையில், அதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே. அதேவேளையில், சமூகப் பணி, உளவியலாளர்களுக்கான தொழில்முறைப் பணியாளர்களுக்கு மட்டும் கலை அறிவியல் கல்லூரியிலிருந்து உறுப்பினரை நியமித்தது, அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சமூகப் பணியாளர்கள் இல்லாத நிலையைக் காட்டுகிறது. மக்களின் உடல்நலத்துடன் மனநலன், சமூகநலனை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைச் செய்வதற்கான முன்னெடுப்புகள் முறையாக உள்ளனவா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவில் சமூகப் பணி: மேற்கத்திய நாடுகளில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட தொழில்முறை சமூகப் பணி, பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் 1936இல் மும்பையில் சர் டோராப்ஜி டாடா சமூகப் பணிக் கல்வி நிறுவனத்திலும் தொடங்கப்பட்டது.
இன்று நாடு முழுக்க ஏறக்குறைய 600 கலைக் கல்லூரிகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் 100 கல்லூரிகளிலும் முதுகலை சமூகப் பணிப் படிப்பு வழங்கப்படுகிறது. முழுமையான நலம் அல்லது ஆரோக்கியம் என்பது உடல் நலனை மட்டுமல்ல, மனநலனையும் உள்ளடக்கியது.
தொற்றுநோய்கள், இதய நோய்கள், புற்றுநோய்கள், நரம்பியல் நோய்கள் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளுடன் மனதுக்கு ஆறுதல் அளிப்பதன் மூலமும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டுவதன் மூலமும் நோய் பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
மருத்துவ சமூகப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபர்களையும் குடும்பத்தினரையும் மருத்துவர்களுடன் இணைக்கும் இணைப்புப் பாலமாக உள்ளனர். மனநல ஆலோசனைகள், உளவியல், நடத்தை மாற்றச் சிகிச்சைகள், வாழ்வாதார மேம்பாட்டுக்கான வளங்களுடன் இணைத்தல், சமூக நலத்திட்டங்கள் பெற்றிட இவர்கள் வழிகாட்டுகின்றனர்.
மருத்துவ கவுன்சில் சட்டம் 1956இன்படி, 100 முதல் 300 வரை படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைந்தது 11 மருத்துவ சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்தியப் பொது சுகாதாரம் தர மதிப்பீடு 2007, 2012, 2022 வழிகாட்டுதலின்படி, ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் மருத்துவ சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மருத்துவ சமூகப் பணியாளர்களுக்கு என்று தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை தொடங்கி, தலைமை மருத்துவச் சமூக நல அலுவலர் வரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 51 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதிகபட்சம் 40 பேர்வரை பணி அமர்த்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ - மனநல சமூகப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
தமிழ்நாடு அரசின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்வரை சுமார் 2,500 மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. மருத்துவமனைக்குத் தலா ஒரு மருத்துவ சமூகப் பணியாளர்கள் என்றால்கூட குறைந்தது 2,500 மருத்துவ சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுவரை தமிழக மருத்துவமனைகளில் 135 பணியிடங்களே உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 21 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
முன்னோடி மாநிலம்: மேற்கத்திய நாடுகளில் மருத்துவ சமூகப் பணி கவுன்சிலானது, சமூகப் பணிக்கான தொழில்முறைப் பயிற்சிகளை வரைமுறைப்படுத்துகிறது. மக்களின் உடல்நலனுடன் மனநலன், சமூகநலனை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ சமூகப் பணி தமிழ்நாட்டிலும் 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசியாவிலேயே முதல்முறையாக இரண்டு வருட ஆய்வியல் நிறைஞர் மருத்துவ சமூகப் பணி (MPhil in Clinical Social Work) தொடங்கப்பட்டது. கலைக் கல்லூரிகளில் வழங்கப்பட்ட சமூகப் பணிப் படிப்பு மருத்துவக் கல்லூரிகளில் கொண்டுவரப்பட்ட பின்னர், மாணவர்களும் ஆர்வமாகப் பயிற்சிபெறத் தொடங்கினர். முறையான அரசு உதவித்தொகை, போதிய ஆசிரியர்கள் இன்மை, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
என்ன செய்ய வேண்டும்? - நோயாளிகளின் மனநலன், பேறுகாலத் தாய்மார்களின் மனநலன், தற்கொலைத் தடுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் அரசு சார்பாக வழங்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான். இந்நிலையை மாற்ற வழிமுறைகள் உண்டு. தமிழ்நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பயிற்சியைத் தொடங்கலாம். பயிற்சியாளர்களைப் பணியாளர்களாகப் பயன்படுத்தலாம். மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறை மாணவர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கி, வாரம் இருமுறை ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கலாம். தமிழக அரசும் சமூகப் பணியாளர்கள் அமைப்புகளும் விரைந்து செயல்பட்டால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும்.
- தொடர்புக்கு: mthangam.msw@gmail.com