இந்த ஆண்டு (2025) இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு (László Krasznahorkai) அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி, இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு குறிப்பிடுகிறது. லாஸ்லோ, “பல தசாப்தங்கள், பல்வேறு நிலப்பரப்புகள் தாண்டித் தன் கடுமையான பரிசோதனை முறை சார்ந்த எழுத்தைத் தக்கவைத்துக்கொண்டவர்.
புனைவெழுத்துக்கும் செய்தித்தாள் அறிக்கை எழுத்துக்கு இடையிலும், ஹங்கேரி, கிழக்கு ஆசியா, ஜெர்மனி போன்ற நிலங்களுக்கு இடையிலும் சகஜமாக நகர்ந்தவர்” என்று நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. “அழகியலும் உன்னதமும் இலக்கியத்தில் எவற்றையும் சாராது தன்னளவிலேயே இயங்க முடியும் என்பதையும், இலக்கியம் அல்லாத பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாலும் இன்னமும் இலக்கியம் வாசிக்கப்படுகிறது என்பதையும் இவ்விருது நிரூபித்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் லாஸ்லோ.
ஒற்றை நாவலுக்கான பயணம்: ஹங்கேரியின் க்யூலாவில் 1954இல் பிறந்தார் லாஸ்லோ. கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் கலாச்சாரம் தவழ்ந்த நிலப்பரப்பில் வளர்ந்து, அதன் சமரசமற்ற நாவலாசிரியர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது முதல் நாவலான ‘சாடன்டாங்கோ’ (Satantango - 1985)வில் தொடங்கி, ‘தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டென்ஸ்’, ‘வார் அண்ட் வார்’, ‘செய்போ தேர் பிலோ’, ‘பேரன் வென்கெய்ம்ஸ் ஹோம்கமிங்’, ‘ஹெர்ஷ்ட் 07769’ போன்ற பல நாவல்களை அவர் எழுதியிருக்கிறார்.
பாரிஸ் ரிவ்யூவுக்குக் கொடுத்த நேர்காணலில் லாஸ்லோ இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதுவரை ஆயிரம் முறையாவது குறிப்பிட்டிருப்பேன், நான் எழுத விரும்புவது ஒரே ஒரு நூலை மட்டும்தான். எனது முதல் நூலில் நான் திருப்தி அடையாததால் இரண்டாவதை எழுதினேன். அப்புறம் மூன்றாவது... இப்படியேதான் என் எல்லா நூல்களும் எழுதப்பட்டன.”
ஹங்கேரியத் திரைப்பட இயக்குநர் பெலா தார் (Béla Tarr) உடன் லாஸ்லோ இணைந்து பணியாற்றிய காலத்தில் அவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. ‘சாடன்டாங்கோ’ நாவல் 1994இல் பெலா தாரினால் ஏழு மணி நேரத் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. லாஸ்லோவின் மிக மெதுவான, அடர்த்தியான உரைநடையைத் திரைமொழிக்குக் கொண்டு வந்ததிலும், பேரழிவு என்கிற நிகழ்வை வெறும் காட்சிப்படுத்தலுக்கு மேலாக உயர்த்தியதிலும் தாரின் பங்கு இன்றியமையாதது. லாஸ்லோவை ஆங்கிலத்தில் செறிவாக மொழியாக்கம் செய்தவர்கள் ஜார்ஜ் சைர்ட்ஸ் (George Szirtes), ஆடிலியே மல்செட் (Ottilie Mulzet) உள்ளிட்டோர்.
பரந்து விரிந்த கறுப்பு நதிகள்: லாஸ்லோவின் உரைநடை தனித்துவம் வாய்ந்ததும், உடனடியாக அடையாளம் காணக்கூடியதுமாகும். மிகவும் நீண்டு அகண்ட, திருகிச்செல்லும் சொற்றொடர்கள், முடிவில்லாது நீளும் பத்திகள் வாசகர் மனதை ஒரு விசித்திரமான காலத்துள் உறையவைக்கின்றன. இந்த வகைப் பத்திகளை ‘பரந்து விரிந்த கறுப்பு நதிகள்’ என்று அழைக்கிறார்கள்.
சொற்றொடர்கள் ஓர் எரிமலைக் குழம்புபோல மெல்ல நகர்கின்றன. வாசகரின் இயல்பான விரைவு வாசிப்பைத் தடுத்து, ஆகர்ஷித்துக் கொள்கின்றன. வாசகருக்கு மூச்சுவிடக்கூட அவகாசம் தராத வாக்கிய நீளம், அதனால் பிரதியோடு
ஏற்படும் இன்றியமையாத நெருக்கத்தின் அழுத்தம் ஆகியவை பிரேமை, பிரமிப்பு, அச்சம் ஆகிய உணர்வுகளை இயல்பாக உருவாக்குகின்றன.
லாஸ்லோவின் முதல் நாவலான ‘சாடன்டாங்கோ’வின் தொடக்கத்தில் வரும் மழையில் நனைந்த ஹங்கேரியக் கிராமத்தின் காட்சியும், அதன் தலைவிதி மெல்லமெல்ல அவிழ்க்கப்படுவதும் அவரது புனைவுலகக் கட்டுமானத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள். வெறும் சேற்றையும், ஓரிடத்தில் நிலவும் காலநிலையையும் மீப்பொருண்மை (Metaphysics - பொருளின் தன்மை குறித்த அறிதல்/ஆராய்ச்சி) என உணரவைக்கும் தன்மை கொண்டது அவரது புனைவு உத்தி.
இந்த நாவலின் டாங்கோ வடிவமைப்பு (முன்னோக்கிய ஆறு அத்தியாயங்கள், பின்னோக்கிய ஆறு அத்தியாயங்கள்) சமூகத்தின் சீரழிவைச் சடங்குகளுடன் கூடிய தோல்வியுற்ற நம்பிக்கையின் நடனமாக நிகழ்த்திக்காட்டுகிறது. லாஸ்லோவின் படைப்புகளோடு இணைத்துக் காணும் ஒரு சொல் ‘பேரழிவு’.
லாஸ்லோவின் பேரழிவின் கலை என்பது இறையியலுக்கும் இசைக்கும் மிக அணுக்கமானது. அவரது கதாபாத்திரங்கள் கலைப்படைப்புகளிலும் இசையிலும் மற்ற மீப்பொருண்மை அமைப்புகளிலும் தங்களுடைய எழுச்சியையும், மீறலையும் காண்கின்றன. ‘ஹெர்ஷ்ட் 07769’ நாவலின் நாயகன் ஃப்ளோரியனுக்கு இசைக் கலைஞர் யோஹன் செபாஸ்டியன் பாஹ் மீப்பொருண்மையை நிலைப்படுத்தும் வசிப்பிடமாக மாறுகிறார். பாஹின் இசை அவனுக்குத் தன்னைச் சுற்றி விகாரமாக அவிழ்ந்துகொண்டிருக்கும் தீமையை விரட்டும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது.
புனைவுலகக் கட்டுமானம்: தன் கதாபாத்திரங்களை தஸ்தோயெவ்ஸ்கியின் மிஷ்கினைப் போன்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் லாஸ்லோ. பாதுகாப்பற்றவர்கள், எளிதில் உடைந்துவிடக்கூடியவர்கள், உலகுக்கு எளிதில் இரையாகிவிடக் கூடியவர்கள் இவர்கள்.
இக்கதாபாத்திரங்கள் லாஸ்லோவின் புனைவுலகில் இயங்குவதன் மூலம் வாசகருக்குச் சமூக அமைப்புகள், அதன் அரசியல், பொருளாதார, கருத்தியல் ஆகியவற்றில் நிகழும் கொடுமை விளங்குகிறது. இந்தக் கொடுமைகளுக்கு வாசகரும் உடந்தையாயிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
லாஸ்லோவின் புனைவுலகக் கட்டுமானம் தத்துவத் தளத்தில் நிற்பது. அவரது இலக்கிய இடம் என்பது மீப்பொருண்மை குறித்தான அவரது கவலைகளையும் குழப்பங்களையும் பரிசோதிப்பதற்கான ஓர் ஆய்வகம் போன்றது. ஆங்கில உலகம் லாஸ்லோவை ஒருமனதாக உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது நீண்ட ஒற்றை வாக்கியப் பரிசோதனையும், பேரழிவு குறித்த அவரது சொற்களஞ்சியமும் நிலைத்து நிற்கும் அழகியல் உணர்வை உருவாக்குகின்றனவா என்கிற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
தாராளவாதம் குறித்த அவரது அங்கதங்கள் ‘பரிதாபத்துக்கு உரியவனின் வெற்றுப் புலம்பல்’ என்பதைத் தாண்டி, ஏதேனும் அர்த்தத்தைத் தருகின்றனவா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் லாஸ்லோ பக்கம் நிற்கின்றனர். அவரது உரைநடையின் அழுத்தமும் திரிபும் வரலாற்றின் அழுத்தத்தையும் திரிபையும் குறிப்பதாகக் கூறுகின்றனர்.
அவரது நாவல்களின் நீளமும் தொனியின் தீவிரமும், நாவல் கேட்கும் கேள்விகளுக்கான விடையறியும் சரியான ஊடகம் என்றே அவர்கள் கருதுகின்றனர். அவரது நூல்களில் இழையோடும் அறத்தின் கற்பனைகள், வன்முறையையும் மென்மைத் தன்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாங்கு, கதாபாத்திரங்களின் ஆன்மிகப்பசி போன்றவை வாசகர்களை எதிர்பாராத எல்லை
களுக்குத் தள்ளுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
மீப்பொருண்மையின் விசாரணை: லாஸ்லோ, வாசகருக்கு எளிய ஆறுதல்களை அளித்து ஆற்றுப்படுத்தும் நாவலாசிரியர் அல்லர். பொறுமையைக் கோரும் வாக்கியங்களாலும், மீட்பின் மொழியை அதிசிக்கலாக்கும் தரிசனங்களாலும், வாசகரின் இரட்டைநிலையைப் பரிசீலனை செய்யக் கோரும் கதாபாத்திரங்களாலும் நிறைந்தவை அவரது நாவல்கள். சொற்றொடர்களைத் தத்துவ அலசலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் நுட்பத்துக்காகவும், அறத்தின் மீதான அவரது லட்சியத்துக்கான அங்கீகாரமாகவும் இந்த நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.
லாஸ்லோவை வாசிப்பது என்பது அவருக்கே உரிய உரைநடையின் தர்க்கத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதாகும். மிகப்பொறுமையாகக் கவனம் கொடுத்து வாசிப்பவருக்கு அவரது நூல்கள் அளிக்கும் வெகுமதி அளப்பரியது. அறத்தின், மீப்பொருண்மையின் விசாரணையை மேற்கொள்பவை அவரது நூல்கள். புனைவின் சாத்தியங்களுக்கும் அறத்தின் அழகியலுக்கான மறுமலர்ச்சிக்கும் உதாரணம் அவரது படைப்புகள்.
- தொடர்புக்கு: writerjegadeeshkumar@gmail.com