சிறப்புக் கட்டுரைகள்

கொள்கைக் கவிஞர் கருணானந்தம்

வெற்றிச்செல்வன்

‘பெற்றுவிட்ட பிள்ளைகளோ எட்டுப் பேராம் / பெற்றோர்க்கும் தள்ளாத முதுமைக் காலம் / வற்றாத வறுமையின்றி என்ன வாழும்?’ என்று 60 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்திக் கவிதை பாடியவர் கவிஞர் கருணானந்தம். பெரியாரின் கொள்கைவழி நடந்து, பாரதிதாசன் பாட்டுப் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராகப் பரிணமித்தவர். மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு எனப் பல்வேறு பாடுபொருள்களில் கவிதைகளை இயற்றியவர்.

மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கு... தஞ்சையில் உள்ள சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் இடத்தில் 15.10.1925 அன்று பிறந்தவர் கருணானந்தம். கரந்தைத் தமிழ்ச் சங்கம், குடந்தை அரசினர் கல்லூரி உள்ளிட்ட கல்விக்கூடங்களில் பயின்றவர். தமிழாசிரியர் ஆவதில் விருப்பம் கொண்டிருந்த கருணானந்தம், இளமையிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். என்றாலும் அரசு அதிகாரியான அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, 1946இல் மத்திய அரசுப் பணியில் இணைந்தார்.

1960இல் அனைத்திந்திய ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது, வேலைநிறுத்தத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியில் இருந்து விலகினார். பின்னர், மாநில அரசுப் பணியில், செய்தி – மக்கள் தொடர்புத் துறையில் பிரச்சார அலுவலராக நியமிக்கப்பட்ட கருணானந்தம், துணை இயக்குநர் பதவிவரை உயர்ந்தார்.

பெரியாரின் மீது கொண்டிருந்த பற்றின் காரணத்தால் இளமையிலேயே அவருடன் இணைந்து தொண்டாற்றிய கருணானந்தம், 1943இல் கும்பகோணத்தில் தவமணிராசனுடன் இணைந்து திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தார். திராவிட மாணவர் மாநாடு, கறுப்புச்சட்டை மாநாடு ஆகியவற்றை இளம் வயதிலேயே திராவிடர் கழகத் தோழர்களுடன் இணைந்து நடத்தினார்.

‘ஆனந்தம் அவர்கள் கவி இயற்றுவதில் மாத்திரம் அல்லாமல், அரும் கருத்துகள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர்’ என்று இவருடைய நூலுக்குப் பாராட்டுரை வழங்கினார் பெரியார். தான் அமைத்த கருஞ்சட்டைப் படையின் அமைப்பாளராக இவரை நியமித்தது, பெரியாருக்கு இவர் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும். பெரியாருடைய முழுமையான வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் கருணானந்தம்தான். பெரியார் குறித்து அவர் எழுதிய ‘செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ கவிதை பிரபலம்.

மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்: அண்ணாவிடம் 27 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய பெருமை கவிஞர் கருணானந்தத்துக்கு உண்டு. தன்னுடைய தந்தையார் எதிரில் அமர்ந்துகூடப் பேசாத அளவு மரியாதை கொண்டவர் கருணானந்தம். ஆனால், கவிஞருக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்ட விவரத்தைக் கடிதம் மூலமாக அவரது தந்தையார் தெரிவித்தபோது, ‘சுயமரியாதைத் திருமணம் நடத்த வேண்டும்; பெரியாரும் அண்ணாவும் வருவார்கள் என்று பெண் வீட்டாரிடம் சொல்லிவிடவும்’ என்று பதில் எழுதினார்.

இது அண்ணா, பெரியார் மீது கவிஞர் கொண்டிருந்த பெருமதிப்பினை வெளிப்படுத்தும். கருணானந்தத்தின் ‘பூக்காடு’ கவிதை நூலை வெளியிட ஊக்கப்படுத்தியவர் அண்ணா. அதனோடு நில்லாது, அதனைத் திமுக மாநாடுகளிலும் விற்பனை செய்யச் சொல்லி அக்கறை செலுத்தியவர் அண்ணாதான்.

திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளான சமத்துவம், பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றைக் கவிஞரின் கவிதைகளில் காண முடியும். ஜாதகப் பொருத்தத்தை மட்டும் பார்த்துத் திருமணம் செய்பவர்கள், மற்ற அம்சங்களைத் தவறவிடுவதால் ஏற்படும் இழப்பினை அவருடைய ‘சாதகப் பொருத்தம்’ கவிதையில் காணலாம்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் அல்லவா? அவருடைய சொந்த அனுபவத்தையும் கவிதையில் வடித்துள்ளார். ‘அன்றாடம் பாடுபட்டும், பசியால் வாடி /அணுஅணுவாய்ச் சாவதினும், அல்லல் தீர்க்க / ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து மகிழ்ச்சி யோடும் / உரிமைக்குப் போராடி மடிவோம்’ என்று ‘வேலைநிறுத்தம்’ என்ற தலைப்பிலேயே எழுதியுள்ளார்.

குறள் மீது மதிப்பு: திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் பெருமதிப்புக் கொண்டவர் கவிஞர் கருணானந்தம். அண்ணாவின் குறள் குறித்த உரையில் மனதைப் பறிகொடுத்ததாக அவருடைய ‘அண்ணா – சில நினைவுகள்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

‘ஈராயிரம் ஆண்டு இழிந்த பின்னரும் / சீராய் இன்றும் சேர்ந்திடும் வண்ணமாய் / தந்து சிறந்த எந்தை மூதாதை / செந்தமிழ்ப் பெரியோன் சீர் வள்ளுவன்’ என்று வள்ளுவரைப் பாடியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட இரண்டாவது மாநாடு நடைபெற்றபோது, கவிஞருக்கு அண்ணா அறிவுரை ஒன்றை வழங்கினார்.

நூறு திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒரே அளவிலான அட்டைகளில் எழுதி, மாநாட்டின் பந்தல் கால்கள் ஒவ்வொன்றிலும் ஒரு அட்டை வீதம் மாட்டிவிட வேண்டும்; மாநாட்டுக்கு வருகின்ற மக்கள், மணிக்கணக்காக மாநாட்டுப் பந்தலுக்குள் உட்கார்ந்து இருக்கும்போது, அட்டைகளில் எழுதப்பட்டுள்ள குறள்களை மீண்டும் மீண்டும் படித்து அவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும் என்பது அண்ணா தந்த யோசனை. இப்பணியைத் தன்னந்தனியாக மேற்கொண்டு நள்ளிரவுவரை எழுதி முடித்தவர் கவிஞர்.

பின்னாட்களில், மு.கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பேருந்துகளில் குறளை எழுதிவைப்பதற்காக, 200 குறள்களைத் தேர்ந்தெடுக்கும் பணியினைக் கவிஞரிடம்தான் ஒப்படைத்தார். முதல்வராக இருந்த அண்ணாவிடம் ஓவியர் வேணுகோபால் சர்மாவை அறிமுகப்படுத்தியவர் கவிஞர்.

சாமானிய மக்களிடம் திருக்குறளைக் கொண்டுசேர்த்த இயக்கத்தின் சில வரலாற்றுச் சான்றுகள் இவை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கொள்கைகளில் உறுதியுடன் வாழ்ந்து, 27.09.1989இல் மறைந்த கவிஞர் கருணானந்தம் விட்டுச் சென்ற வழித்தடம் அனைவரும் பின்பற்றுவதற்கு உரியது.

கவிஞர் கருணானந்தம் நூற்றாண்டு நிறைவு: 15.10.2025

- தொடர்புக்கு: vetriblackshirt@gmail.com

SCROLL FOR NEXT