சென்னையில் பலர் வீடின்றி நடைபாதைகளில் வசிக்கும் அவலம் தொடர்வதை ஒரு தன்னார்வ அமைப்பின் புதிய தரவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. வெயில், மழை, கடுங்குளிர், நோய்த் தொற்று உள்ளிட்ட சூழல்களை ஒரு பெருங்கூட்டம் நிராயுதபாணிகளாகவே எதிர்கொள்ளும் நிலை ஆரோக்கியமானதல்ல.
ஐஆர்சிடியுசி (Information and Resource Centre for the Deprived Urban Communities) என்கிற அமைப்பு, வீடு அற்றவர்கள் குறித்து சென்னையில் 18 இடங்களில் அண்மையில் ஆய்வு நடத்தியது. சென்னையில் 256 குடும்பங்களுக்கும் 1,200 தனி நபர்களுக்கும் மேற்பட்டோர் வீடு இன்றி இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அவர்களில் ஏறக்குறைய 48% பேர், நடைபாதைகளில் மறைப்பு எதுவுமின்றி வெட்டவெளியில் வசிக்கின்றனர்; 17% பேர் பாலங்களுக்கும் மேம்பாலங்களுக்கும் அடியில் வசிக்கின்றனர்; 3% பேர் பேருந்து முனையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வசிக்கின்றனர். வெவ்வேறு வகையிலான குடியேற்றங்களை சென்னை நெடுங்காலமாகவே எதிர்கொண்டுவருகிறது.
குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் வாடகை வீட்டில் வசிக்க முடியாத அளவுக்கு வறியவர்களுக்கும் பொதுஇடங்கள் புகலிடம் ஆகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோர் இவர்களில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பது, பிரச்சினையை மேலும் சிக்கல் ஆக்குகிறது.
வீடு அற்றோருக்குக் காப்பகம் அமைக்கும் தீர்வை நோக்கி தமிழகம் 1992லேயே நகர்ந்தது. காலப்போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், திருநர்கள், அரசு மருத்துவமனையில் பயனாளியோடு உடன் இருப்பவர்கள் எனக் காப்பகங்கள் திறக்கப்பட்டு, இப்போது எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. பயனாளி ஆறு மாதங்கள் இங்கு தங்க முடியும்.
அவரைக் குடும்பத்தோடு சேர்க்கவும் காப்பகம் முயல்கிறது. காப்பகங்களைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சென்னை மாநகராட்சி நிர்வகிக்கிறது. பணியாளருக்கான ஊதியம், காப்பகத்துக்கான இடம், மின்சார சேவை, ஒரு வேளை உணவு ஆகியவை மாநகராட்சி மூலம் அளிக்கப்படுகின்றன. மீதம் உள்ள இரு வேளை உணவுக்கான நிதிக்குத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்களையே சார்ந்துள்ளன.
குடும்பத்தோடு இருப்பவர்கள், ஆதரவற்றவர்கள் என்கிற தெளிவான வகைப்பாடு இன்மை இதில் முக்கியமான பிரச்சினை. சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் பல தலைமுறைகளாக வசித்துவந்தவர்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் மறுகுடியேற்றம் செய்யப்படுகையில், அவர்களில் சிலர் புதிய பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. இவர்கள் குடும்பத்தோடு பொதுஇடங்களில் தஞ்சம் புகுகின்றனர்.
இவர்களுக்கு வீடு மட்டுமே பிரச்சினை. இவர்களுக்குக் குடிசை மாற்று வாரியம் மூலம் தீர்வு அளிக்க முடியும். ஆதரவற்றோருக்கு வீடு உள்பட எல்லாமே பிரச்சினை. நரிக்குறவர் போன்ற நாடோடி மக்களின் வாழ்க்கைமுறை குறித்த புரிதலும் இதில் தேவை. காப்பகங்களில் சுதந்திரமாக வாழ முடியாது என்கிற மனநிலையும் அரசுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. வீடு அற்றோரில் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டிருப்பதும் முக்கியமான தடை எனச் சில காப்பக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள் ஆகியோரைப் போதுமான எண்ணிக்கையில் சேர்ப்பதற்கேற்ற உள்கட்டமைப்பு காப்பகங்களில் இல்லை எனவும் கூறப்படுகிறது. சமத்துவத்துடன் கூடிய சமூக வளர்ச்சிக்குத் தமிழ்நாடுதான் முன்மாதிரி. அதன் தலைநகரில் மக்கள் திறந்த வெளியில் வசிக்கும் நிலைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.