சிறப்புக் கட்டுரைகள்

காசாவுக்கான டிரம்ப்பின் திட்டம்

எஸ்.வி.ராஜதுரை

காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக இஸ்ரேல் நடத்திவரும் இனக்கொலைப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லப்படும் டொனால்டு டிரம்ப்பின் ‘இருபது அம்சத் திட்ட’த்தை ரஷ்யா, சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், எட்டு அரபு நாடுகள், மூன்று முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன. பிரதமர் மோடியும்கூட மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

திட்டத்தின் முதல் பகுதிக்கான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் விவாதித்து ஒரு முடிவை எட்டியுள்ளதாக ஹமாஸின் அரசியல் தலைவர் கலில்-அல்-ஹாயா ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்: “போரையும் காசா மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.”

​திட்​டத்தின் நோக்கம்: தன் சமாதானத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்​கொள்​ளா​விட்​டால், முன்னு​தாரணம் அற்ற வகையில் காட்டு வெள்ளமாய் ரத்தம் ஓடும் என்று டிரம்ப் எச்சரித்​ததையும் நினைவுகூர வேண்டி​யிருக்​கிறது. இஸ்ரேலின் இனப்படு​கொலைகளைக் கண்டித்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்​டங்கள், அண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளை​யும்கூட பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நிர்ப்​பந்​தத்தை உருவாக்கி​யுள்ள சூழலில், டிரம்ப்பின் திட்டம் வெளியிடப்​பட்டது.

காசா மக்கள் அனுபவித்து​வரும் துயரங்​களைப் போக்கு​வதும், இஸ்ரேலியப் படைகளைத் திரும்​பிச்​செல்ல வைப்பதும், பாதுகாப்பு, ஸ்திரத்​தன்மையை நிலைநாட்டு​வதும் ‘இஸ்ரேல்’, ‘பாலஸ்​தீனம்’ என்ற இரு அரசுகளை ஏற்படுத்துவதை நோக்கிய நீதியான, முழுமையான சமாதானத்தை ஏற்படுத்து​வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்​ளவைப்​பதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று செளதி அரேபிய அரசாங்கம் கூறுகிறது.

உண்மை​யில், பாலஸ்​தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இத்திட்டம் உறுதிப்​படுத்​தும்; நாளொன்​றுக்கு 600 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் செல்வதை இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்கும் என்று இத்திட்டம் கூற, தொடக்​கத்தில் 400 லாரிகளை மட்டும் அனுமதிக்​கப்​போவ​தாகவும் பின்னர், அவற்றின் எண்ணிகையை அதிகரிக்​கப்​போவ​தாகவும் இஸ்ரேல் கூறிவிட்டது.

10,000 குழந்தைகளை உள்ளடக்கிய 67,000 பாலஸ்​தீனர்​களைக் கொன்று குவித்து, அவர்களது வாழ்விடங்களை இடிபாடு​களாக்கி, அங்கு உணவு செல்ல​வி​டாமல் தடுத்து, ‘பட்டினி போடுவதன் மூலம் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தல்’ என்ற புதிய உத்தியைப் பயன்படுத்திய இஸ்ரேலுக்கு வழங்கப்​பட்​டு உள்ள பரிசுதான் டிரம்ப்பின் திட்டம்.

இஸ்ரேலின் தந்திரம்: இஸ்ரேலும் ஹமாஸும் செய்து​கொண்ட உடன்படிக்கையின் பகுதியாக காசாவின் 58% நிலப்​பகுதி இஸ்ரேலின் கட்டுப்​பாட்டில் இருக்​கும்; பிறகு, அது படிப்​படி​யாகக் குறைந்து (அதற்குக் காலக்கெடு ஏதுமில்லை) கடைசி​யில், இஸ்ரேலும் அதன் பகை சக்தி​களும் மோதிக்​கொள்​ளாமல் இருக்கும் ஒரு பகுதி (buffer zone) இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்​பாட்டில் நிரந்​தரமாக இருக்​கும்.

ஹமாஸால் பிணைக்கை​தி​களாகக் கொண்டு​செல்​லப்பட்ட இஸ்ரேலியர்களை உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைப்பர்; பதிலாக, ஹமாஸ் முன்வைத்த பட்டியலில் உள்ள பாலஸ்​தீனர்களை இஸ்ரேல் ஒப்படைக்​கும். ஆனால், ஒப்பந்​தத்தின் மை காய்வதற்கு முன்பே, அந்தப் பட்டியலிலிருந்து சில முக்கிய பாலஸ்தீன அரசியல் தலைவர்​களின் பெயர்​களைச் சத்தமில்​லாமல் நீக்கி​விட்டது இஸ்ரேல்.

உண்மையில் இந்த ஒப்பந்தம், காசாவில் ஆதிக்கம் செலுத்​தவும் பாலஸ்தீன தேசிய சுயநிர்ணய உரிமையை அடியோடு மறுக்​க​வும், இஸ்ரேலும் அமெரிக்காவும் கொண்டுள்ள குறிக்கோளை அடைவதற்கான இன்னொரு நகர்த்​தல்​தான். அதாவது, பாலஸ்​தீனத் தலையாட்​டிகளையும் இஸ்ரேலியப் பிரதி​நி​தி​களையும் உள்ளடக்கி, அமெரிக்​காவால் மேற்பார்​வை​யிடப்​படும் குழுவால் நிர்வகிக்​கப்​படும் ஒரு காலனியாக காசாவின் பெரும் பகுதி மாற்றப்​படும் என்பதை டிரம்ப் கூறியுள்​ளார்.

இந்தக் குழுவில் ஹமாஸின் பிரதி​நி​தி​களுக்கு மட்டுமல்ல, மேற்குக் கரையை நிர்வகிக்கும் ‘பாலஸ்தீன அதிகாரம்’ என்கிற அமைப்பின் பிரதி​நி​தி​களுக்கும் இடமில்லை. மாறாக, ஒரு காலத்தில் பாலஸ்​தீனத்தைத் தன் காலனி நாடாக வைத்திருந்த பிரிட்​டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேய்ர் அதில் இடம்பெறு​வார்.

கவிதாஞ்சலி: இந்த நேரத்​தில், நம்மால் செய்யக்​கூடியது எல்லாம் இனக்கொலைக்குப் பலியானவர்​களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே. காசாவின் கான்யூனிஸில் இருந்த மருத்துவ வளாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குழந்தை மருத்​துவர் அலா அல்-நஜ்ஜார் (Ala’ Al-Najjar). அவருடைய ஒன்பது குழந்தைகள் யாஹியா, ரக்கா, ரஸ்லான், ஜுப்ரான், ஈவ், ரேவன், சதீன், லுக்மன், சிட்ரா கொல்லப்​பட்டு​விட்​டனர்.

அவருடைய மூத்த மகளுக்கு 12 வயது; கடைசிப் பச்சிளம் குழந்தைக்கு 6 மாதம். ஒன்பது நாள்களுக்குப் பிறகு அவருடைய கணவரும் மருத்​துவருமான ஹம்தி அல்-நஜ்ஜார் கடுங்​கா​யங்​களால் மரணமடைந்​தார். அலா அல்-நஜ்ஜாருக்கு ஒரே ஒரு குழந்​தைதான் உயிரோடு விட்டு வைக்கப்​பட்​டிருந்தது.

புகழ்​பெற்ற பாலஸ்​தீனக் கவிஞர் இப்ராஹிம் நஸ்ருல்லா அவருக்காக எழுதிய அலா அல்-நஜ்ஜாரின் பறவைகள் என்ற நெடுங்​க​விதை. அதன் ஒரு பகுதி இது (அரபு மொழியி​லிருந்து ஆங்கிலத்​துக்கு மொழிபெயர்த்தவர் மருத்​துவர் அல் கரிமி):

எங்கள் படுக்கைகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் பொம்மைகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் கனவுகள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் பெயர்கள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் உடல்களின் எச்சங்கள்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தன
எங்கள் அண்டைவீட்டார்
எங்களுக்கு முன்பே
கடவுளை அடைந்தனர்
எங்கள் தெரு,
எங்கள் அண்டைப்பகுதி,
எங்கள் வகுப்பறை,
எங்கள் ஆசிரியர்
ஆம்! நாங்கள் எஞ்சியிருக்கிறோம்
உங்கள் இதயத்தைச் சுற்றிலும்
சிலவேளை வாழ்க்கையின்
அர்த்தம் பற்றிச் சந்தேகித்தும்
வேறு சமயங்களில்
அதன் நிச்சயத்தன்மையைக்
கேள்விக்கு உட்படுத்தியும்
உங்கள் மிக இளம் குழந்தை
மேகமாகிவிடும்போது
உங்கள் நடுக்குழந்தை
தணலின் துணுக்காகும்போது
உங்கள் மூத்த குழந்தை
பிசைந்த மாவின் துண்டாகும்போது
உங்களைத் தழுவுவது
எவ்வளவு கடினம் என்பதை
நாங்கள் அறிந்திருப்பதால்
உங்கள் இதயத்தைத் திறங்கள் இப்போது
நான் ஏன் பிறந்தேன்?
பிரசவிப்பது ஏன்?
அவர்களின் ஆன்மாக்களுக்கு
விடை கொடுத்தனுப்புவதற்காக,
அடிவானத்தில் பறவைகள்
ஒன்றுசேராமல்
பிய்த்தெடுக்கப்படுவது போல்
அவர்கள் சிதறி மறைந்து
போவதைக் காண்பதற்காகவா?
ஓ! விடியல் காலையே
எங்களை உற்றுப்பார்.
இந்த இனப்படுகொலையிலிருந்து
எங்களைப் பிடுங்கி எடு
அதிசயிக்கத்தக்க விதத்தில்
அல்லது உன் கதிரவனின்
ஞானத்தைக் கொண்டு
ஓநாய்கள் ஒரு தாயின்
இதயத்தின் மீது கூடியுள்ளன
கொடுமனம் படைத்த போர் வீரர்கள்,
மிருகங்கள்,
தளபதிகள்.
அவர்களுக்குப் பின்னால்,
இருளில்,
ரத்தமும் கொலையும் கொண்டு
செழித்தோங்கும்
ஒடுக்குமுறையாளர்கள்.
இளம் வயதினரையும் முதியவர்களையும்
எரித்துக்கொண்டிருக்கிறார்கள்:
இது இனப்படுகொலையின் பாதியா?
அல்லது கால் பங்கா?
அல்லது பத்தில் ஒன்பதா?
என விவாதித்துக்கொண்டு
கடை கண்ணிக்குப்
போய்வருவதுபோல்
மீன் பிடிப்பதுபோல்
பனிச்சறுக்கும் கோல்ஃபும்
விளையாடுவதுபோல் ஒரு பழக்கம்!

- தொடர்புக்கு: sagumano@gmail.com

SCROLL FOR NEXT