சிறப்புக் கட்டுரைகள்

நீதிமன்றத்தையும் ஏமாற்ற முடியுமா...?

ஏமாற்றிவிட்டு தப்பிப்பவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் நிவாரணம் கேட்டு, நீதிமன்ற கதவுகளைத் தட்டுவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால், இந்த இரண்டு வகையினராகவும் இல்லாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு இருக்குமானால், அது மனித கபடத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஒருவர் நடத்திய வழக்கு பற்றிதான் இங்கு சொல்லப் போகிறேன்.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவன், இரண்டாவது திருமணத்துக்கு முயற்சி செய்கிறான். அதற்காக ஒரு பெண் வீட்டாரை அணுகுகிறான். தான் விவாகரத்துப் பெற்றவன் என்று கூறி, அதற்கான நீதிமன்ற ஆணையைக் காட்டுகிறான்.

அந்தக் காகிதத்தைப் படித்துப் பார்த்த பெண்ணின் பெற்றோர், ‘நீதிமன்றத் தீர்ப்பைவிட நம்பகமான ஆதாரம் வேறு என்ன இருக்க முடியும்?’ என்ற நம்பிக்கையில், அந்த ஆணுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் தம்பதியருக்கு சில ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவன் கொடுமைகள் செய்யத் தொடங்குகிறான்.

இந்தக்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வேறு வழியின்றி அவனுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது என்று பெண் முடிவு செய்கிறாள். இதற்காக தனது வழக்கறிஞரை நாடிய அந்தப் பெண், விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றம் செல்கிறாள். நீதிமன்றத்தில் அவளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

“சட்டப்படியான திருமணம் செய்த முதல் மனைவி இதோ இருக்கிறார். முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்தது செல்லாது. ஆகவே, வழக்குத் தொடர்ந்த பெண் சட்டப்படியான மனைவி இல்லை என்பதால், அவரால் ஜீவனாம்சம் கோர முடியாது” என்று கணவன் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது.

“நீங்கள்தானே நீதிமன்றத்தின் விவாகரத்து ஆணையை காட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “அந்த விவாகரத்து ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது” என்று அவன் தரப்பில் பதில் கூறியிருக்கிறார்கள். அதாவது, நீதிமன்றம் வழங்கிய ஒரு விவாகரத்து ஆணையைக் காட்டி, இரண்டாவதாக ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்திருக்கிறான்.

ஆனால், ஏற்கெனவே பெற்ற விவாகரத்து ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இரண்டாவது திருமணம் செல்லாது என்றும், அதனால் இரண்டாவதாக திருமணம் செய்த பெண் தன்னுடைய மனைவியே அல்ல என்றும் அவன் கூறுகிறான். மோசடிப் பேர்வழியான இந்த ஆண், ஒரு பெண்ணை மட்டும் ஏமாற்றவில்லை. அவன் நீதிமன்றத்தையும் ஏமாற்றி இருக்கிறான்.

முதல் மனைவிக்கு தெரியாமல் நீதிமன்றத்தை அணுகி ஒரு தலைபட்சமாக விவாகரத்து ஆணை பெற்று இருக்கிறான். பிறகு அவனே மனைவியிடம், “இந்த விவாகரத்து ஆணையையே ரத்து செய்து விடலாம். உனக்கு நான் வாழ்வு தருகிறேன்” என்று கூறி இருக்கிறான்.

விவாகரத்து ஆணையை ரத்து செய்ய ஆட்சேபனை இல்லை என்ற மனைவியின் மேற்குறிப்புடன் மீண்டும் நீதிமன்றத்தை நாடி இருக்கிறான். ‘ஆட்சேபனை இல்லை’ என்ற அந்த சொல், நீதிமன்றத்துக்கு வழக்கமாக சுமையற்ற சொல் என்பதால், விசாரணையே இல்லாமல் நீதிமன்றமும் விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டது.

அந்த பெண் தப்பித்தது எப்படி? - கணவன் தரப்பு முன்வைத்த வாதத்தால் அதிர்ச்சியிலும், மிரட்சியிலும், விரக்தியிலும் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு இந்திய சாட்சியச் சட்டத்தின் 44வது பிரிவு கை கொடுத்து, காப்பாற்றியது.

ஒரு வழக்கில் ஆதாரமாக முன்வைக்கப்படும் ஒரு நீதிமன்ற உத்தரவு அல்லது தீர்ப்பு என்பது, மோசடி அல்லது சதியால் பெற்றது என நிரூபிக்கப்பட்டால், அதனை சாட்சியாக ஏற்பதை இந்திய சாட்சியச் சட்டத்தின் 44-வது பிரிவு தடை செய்கிறது. இந்த வழக்கில், விவாகரத்து ஆணையை ரத்து செய்த முந்தைய தீர்ப்பு, சதியின் மூலம் பெறப்பட்டது என்பது நிரூபணமான
தால், அந்த ரத்து உத்தரவு இங்கே சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆகவே, இரண்டாவது திருமணம் செல்லும் என்றும், அந்தப் பெண் சட்டப்படியான மனைவி என்றும் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. அந்தப் பெண்ணும், அவளது குழந்தையும் ஜீவனாம்சம் பெற முழு உரிமை உடையவர்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் காட்டப்பட்ட நீதிமன்ற உத்தரவு கவனமாகக் கையாளப்பட்டிருந்தால், இந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, இந்த திருமணத்தையே இரண்டாவது மனைவியான அந்தப் பெண் தவிர்த்து இருக்கலாம். இத்தகைய இரண்டாவது திருமண விவகாரங்களில் இன்னும் அதிக விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்தும் பாடமாக இந்த வழக்கு திகழ்கிறது.

- jusvimala57@gmail.com

SCROLL FOR NEXT