சிறப்புக் கட்டுரைகள்

அடிதடி வழக்கில் ‘சமரசம்’ ஏற்பட்டால்...? | சட்டமும் வழிகாட்டுதலும்

செய்திப்பிரிவு

இரண்டு தரப்புகளுக்கு இடையேயான அடிதடி சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து நலமுடன் திரும்புகிறார். இது தொடர்பான குற்ற வழக்கில் எதிர்த் தரப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறையில் இருந்து, பிணையில் வெளிவருகின்றனர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, சமாதானம் ஆகி விடுகிறார்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்ற வழக்கின் விசாரணையில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியுமா? - அகிலேஷ், திருநெல்வேலி

இரண்டு தரப்புக்கும் இடையே அடிதடி சம்பவம் ஏற்பட்டு அதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் 307, 325, 326, 506(2), 120பி (தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 109, 118(2), 118 (3), 351, 61) பிரிவுகள் படி, கொலை முயற்சி, அடிதடி, குற்றமுறு மிரட்டல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கூட்டுச்சதி் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். இந்த குற்ற வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் வரையோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனையோ விதிக்க முடியும்.

ஆனால் இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் படுகாயமடைந்த நபர் நீண்ட நாட்களுக்குப்பிறகு அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்து வி்ட்டார். எதிர்த் தரப்பினர் பிணையில் வந்த பிறகு இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முடியுமா என்று கேட்டால், சட்ட ரீதியாக முந்தைய குற்றவியல் நடைமுறைச்சட்டம் ( தற்போதைய பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா) பிரிவு 320-படி வழக்கை சமரசம் செய்துகொள்ள முடியாது. எனவே இருதரப்பினரும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதன் மூலமாக நிவாரணம் பெறலாம். இருதரப்பும் சமரசமடைந்து வி்ட்டார்கள் என்பதற்காக குற்ற வழக்கை பாதியில் கைவிட முடியாது.

எங்களுக்கு பூர்வீகக் குடும்பச் சொத்தாக 2 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. மூலப் பத்திரம் எதுவும் இல்லை. எனினும் எங்கள் குடும்ப சொத்துதான் என்பதற்கு சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஆவணங்கள் இருக்கின்றன. எனது தாத்தா பெயரில் பட்டா இருந்தது. தாத்தா இறந்த பிறகு, பாட்டியின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், எனது அப்பாவுடன் பிறந்த 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேர் இருக்கும் நிலையில், தனது மூத்த மகனான எங்கள் பெரியப்பாவுக்கு மட்டும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை எங்கள் பாட்டி தான செட்டில்மென்ட் செய்து வைத்திருக்கிறார். மற்றவர்களுக்கு அப்போது இது தெரியாது; சமீபத்தில்தான் தெரியவந்தது. இதற்கிடையே, எனது பாட்டியும் இறந்துவிட்டார். இந்நிலையில், எங்களுக்குரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று எனது அப்பா விரும்புகிறார். எங்களால் சட்டப்படி உரிமை கோர முடியுமா? - பவானி மஞ்சுளா, மதுராந்தகம்

இந்த விவகாரத்தில், பாட்டி அந்த 2 ஏக்கர் முழு சொத்தையும் அவருடைய 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 பேருக்கும் சரிசமமாக பங்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் உயிருடன் உள்ள நிலையில், மூத்த மகனான பவானி மஞ்சுளாவின் பெரியப்பாவுக்கு மட்டும் முழு சொத்தையும் தானசெட்டில்மெண்ட் ஆவணம் மூலமாக உரிமை மாற்றம் செய்திருப்பது சட்டப்படி செல்லாது.

இந்நிகழ்வில் பவானி மஞ்சுளாவின் தந்தையார், 2 ஏக்கர் சொத்தில் அவருக்குண்டான பிரிபடாத பங்கான ஐந்தில் ஒரு பங்கு சொத்தை சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியும். அந்த உரிமையை அவர், தங்களது ஆளுகைக்குட்பட்ட சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்து நிலைநாட்ட முடியும். மேலும், பெரியப்பாவுக்கு பாட்டி சட்டவிரோதமாக வழங்கியுள்ள தான செட்டில்மெண்டையும் ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரலாம்.

டி.எஸ்.பார்த்தசாரதி,
வழக்கறிஞர்,
சென்னை உயர் நீதிமன்றம்.
partha1978adv@gmail.com

SCROLL FOR NEXT