புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை ஆறு மாதங்களுக்குள் உருவாக்கும்படி அனைத்து மாநில அரசுகள், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் தரவுகளின்படி இந்தியாவில் 2023இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 35,221 பேர் பாதசாரிகள். 2016இல் 10.44% இருந்த பாதசாரிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை, 2023இல் 20.4% அதிகரித்துள்ளது.
அதாவது, 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதேபோல தலைக்கவசம் அணியாததால் 54,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் / உடன் பயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாததால் 16,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தச் சூழலில், கோவையைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ராஜசேகரன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு அண்மையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில்தான், புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதசாரிகளின் பாதுகாப்பு, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 138(1A), 210D பிரிவுகளின்படி மோட்டார் பொருத்தப்படாத சைக்கிள், சாலைக் கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பது எனப் பல முக்கியமான அம்சங்கள் சார்ந்து நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நாட்டில் சாலைகளில் பாதசாரிகளுக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், பயன்படுத்த முடியாத அளவுக்கு அது ஆக்கிரமிக்கப்படுவதையும், அரசுகள் / உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை அலட்சியமாகக் கையாள்வதையும் மறுக்க முடியாது. சென்னை போன்ற நகரங்களின் சில பாதைகளில் சைக்கிள்கள் இயக்கத்துக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், அதில் சைக்கிள் மட்டுமே செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.
விதிகள் இருந்தாலும், அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வது, எதிர்திசையில் பயணிப்பது எனப் போக்குவரத்து விதிகளை மக்கள் அலட்சியப்படுத்துவதும் சாலை விபத்துகளுக்குக் காரணமாகிறது. இந்தச் சூழலில் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் இதுவரை இயற்றப்படவில்லை எனில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் அனைத்து மாநில, மத்திய ஆட்சிப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு விதிகளை ஆறு மாதங்களில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளில் பின்பற்றப்படும் விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கவும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை ஏற்றுப் புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குவதற்கு எல்லா மாநில அரசுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக விபத்துகள் நேரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. எனவே, புதிய விதிகளை உருவாக்குவதில் தமிழக அரசு துரிதம் காட்ட வேண்டும். தொடரும் சாலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவை!