ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி, மேரி இ. ப்ருன்கோவ் 
சிறப்புக் கட்டுரைகள்

தடுப்பாற்றலில் புதிய தடம் | நோபல் 2025 - மருத்துவம்

கு.கணேசன்

உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவது தடுப்பாற்றல் மண்டலம் (Immune system). அது தன்னிச்சையானது; அதை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த அமைப்பும் இல்லை என்றுதான் மருத்துவ உலகம் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தது. அப்படியல்ல, தடுப்பாற்றல் மண்டலத்தை ஒழுங்குபடுத்தவும் ஓர் அமைப்பு இருக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. ப்ருன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூன்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக 2025க்கான நோபல் பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “உடலின் சக்திவாய்ந்த தடுப்பாற்றல் மண்டலம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அது நம் உடல் உறுப்புகளையே தாக்கிவிடும். இதைத் தடுப்பதற்கு ஒரு தடம் உள்ளது” என்கிறார்கள் இவர்கள். இதைப் புரிந்துகொள்ள, தடுப்பாற்றல் மண்டலத்தின் அரிச்சுவடியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘தைமஸ்’ என்னும் பாடசாலை: உடலில் நோய்க்கிருமிகள் நுழையும்போது அவற்றை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் தடுப்பாற்றல் மண்டலத்துக்கே உண்டு. தடுப்பாற்றல் மண்டலம் ராணுவம் என்றால், ரத்த வெள்ளணுக்கள் (White blood cells) அதன் சிப்பாய்கள். இவற்றில் ‘டி’ செல்கள் (T–Cells) அதிரடி சிப்பாய்கள்.

நம் மேல் நெஞ்சின் பின்புறம் இருக்கிற தைமஸ் சுரப்பிதான் தடுப்பாற்றலுக்கான ‘சிறப்புப் பாடசாலை’. அங்கேதான் தடுப்பாற்றல் சிப்பாய்களுக்கு ‘மனித உடலுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார்?’, ‘எந்த ரூபத்தில் அந்நியர்கள் வருவார்கள்?’, ‘எப்படி அப்புறப்படுத்துவது?’ ‘எந்த மாதிரி அவர்களை நினைவில் வைத்துக்கொள்வது?’ என்பது போன்ற பாடங்கள் நடத்தப்படும். இதில் தேர்வானதும், ரத்த நதிக்கும் நிணநீர்க் கால்வாய்க்கும் வந்து தடுப்புப்பணியை இவர்கள் ஆரம்பிப்பார்கள்.

‘தன்னுடல் தாக்குதல்’ ஏன்? - பிரச்சினை என்னவென்றால், ‘டி’ செல் சிப்பாய்கள் வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவர்கள். சில நேரம், உடலுக்குள் நுழைகிற எதிராளிகளை மட்டுமல்லாமல், உடலின் சொந்தத் திசுக்களையும் எதிராளிகளாக நினைத்துத் தாக்கிவிடுவார்கள். இதைத் ‘தன்னுடல் தாக்குதல்’ (Auto immune) என்போம். இதனால் ஏற்படுகிற நோய்களைத் ‘தன்னுடல் தாக்கு நோய்கள்’(Auto immune diseases) என்போம்.

குறை தைராய்டு (Hypothyroidism), முடக்குவாத மூட்டுவலி (Rheumatoid arthritis), முதலாம் வகைச் சர்க்கரை நோய், SLE, சில வகைப் புற்றுநோய்கள் போன்றவை இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டவை.

அதேவேளை, தன்னுடல் தாக்கு நோய்கள் ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுகின்றன. என்ன காரணம்? இந்தக் கேள்விக்கு இதுவரை சொன்ன பதில் இதுதான்: “அந்த நோய்களை ஏற்படுத்துகிற ‘டி’ செல் சிப்பாய்களை நம் தடுப்பாற்றல் மண்டலம் அகற்றிவிடுகிறது”.

1980இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தடுப்பாற்றல் ரகசியத்தை ‘மத்தியத் தடுப்பாற்றல் சகிப்புத்தன்மை’ (Central immune tolerance) என்கிறோம். ஆனால், இதையும் தாண்டி ஒரு புதிய தடம் தடுப்பாற்றலில் இருக்கிறது என்பதை இந்த ஆண்டின் நோபல் வெற்றியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

சகாகுச்சியின் கண்டுபிடிப்பு: தடுப்பாற்றல் மண்டலத்தில் ‘ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்கள்’ (Regulatory T cells) என்னும் சிப்பாய்கள் இருப்பதை 1995இல் ஷிமோன் சகாகுச்சி கண்டுபிடித்தார். ஒரு போக்குவரத்துக் காவலர்போல் தன்னுடல் தாக்கும் ‘டி’ செல்களை ஒழுங்குபடுத்தி, தன்னுடல் தாக்கு நோய்கள் ஏற்படாமல் இவை பார்த்துக்கொள்கின்றன என்றார் சகாகுச்சி. இதை ஒரு சோதனை மூலம் உறுதிப்படுத்தினார்.

மூன்று மாத எலியின் தைமஸை அகற்றினார். இதனால் அந்த எலிக்குத் தடுப்பாற்றல் இல்லாமல் போனது; தன்னுடல் தாக்கு நோய் ஏற்பட்டது. மரபணு மாற்றப்பட்ட மற்றோர் எலியிடமிருந்து ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்களைச் சேகரித்து, தைமஸ் அகற்றப்பட்ட மற்றோர் எலிக்குச் செலுத்தினார்.

அந்த எலிக்குத் தன்னுடல் தாக்கு நோய் ஏற்படவில்லை. இதைப் ‘புறத் தடுப்பாற்றல் சகிப்புத்தன்மை’ (Peripheral immune tolerance) என்றார். உடலில் எந்தவோர் இயக்கத்துக்கும் ஒரு மரபணு காரணமாக இருக்கும். அப்படி ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்களுக்குக் கட்டளையை இடுகிற மரபணுவை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

அரிய மரபணு கண்டுபிடிப்பு: இந்தச் சூழலில், அமெரிக்காவில் மேரி இ. ப்ருன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் இருவரும் சேர்ந்து, தன்னுடல் தாக்கு நோய்க்குத் தொடர்புடைய புதிய மரபணுவைக் கண்டறிந்திருந்தனர். ‘ஸ்கர்ஃபி’ (Scurfy) இனத்தைச் சேர்ந்த எலிகளுக்கு மட்டும் தன்னுடல் தாக்கு நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று இவர்கள் ஆராய்ந்தனர். அப்போது, இவ்வகை எலிகளின் மரபணுக்களில் 20 வகைப்பட்ட ஆற்றல்மிக்க மரபணுக்களைப் (Potential genes) பிரித்துப் பரிசோதித்தனர்.

அவற்றில் ‘Foxp3’ என்னும் மரபணுவில் பிறழ்வுகள் (Mutation) ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இந்த மரபணுப் பிறழ்வுதான் IPEX நோய் உள்ளிட்ட பலதரப்பட்ட தன்னுடல் தாக்கு நோய்களுக்குக் காரணகர்த்தா என்பதை 2001இல் உறுதிப்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, ஷிமோன் சகாகுச்சி தன்னுடைய ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கினார். தான் ஏற்கெனவே கண்டுபிடித்த ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்களுக்கும் ‘Foxp3’ மரபணுவுக்கும் உள்ள தொடர்பைப் புதிய ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டார்.

அதாவது, “Foxp3 மரபணுப் பிறழ்வு இருப்பவர்களுக்கு ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்களை Foxp3 மரபணு கட்டுப்படுத்திவிடுவதால், காவலாளியைக் கட்டிப்போட்டுவிட்டு வீட்டுக்குள் திருடன் நுழைவதைப்போல, தன்னுடல் தாக்கு நோய்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அதேவேளை, Foxp3 மரபணுப் பிறழ்வு இல்லாதவர்களுக்குச் சொந்தத் திசுக்களைத் தாக்குகிற ‘டி’ செல்களை ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்கள் நெருங்கிச்சென்று, ‘உடலுறுப்புகள் அனைத்தும் நம் சொந்தங்கள். அவற்றைத் தொந்தரவு செய்யக் கூடாது’ என்று எச்சரித்துவிடுகின்றன. இதனால், அவர்களுக்குத் தன்னுடல் தாக்கு நோய்கள் ஏற்படுவதில்லை” என்று விளக்கினார்.

என்ன பலன்கள்? - தடுப்​பாற்றல் தன்மை​யில் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்ள இந்தப் புதிய தடம், மனிதகுல ஆரோக்​கி​யத்​துக்​குப் பெரிதும் உதவும் என்னும் நம்பிக்கையை விதைத்​திருக்​கிறது. இனி, தன்னுடல் தாக்கு நோய்கள் உள்ளவரின் ரத்தத்​திலிருந்து ஒழுங்குபடுத்​தும் ‘டி’ செல்​களைச் சேகரித்து, அவற்​றைச் சோதனைச்​சாலை​யில் அதிகமாக உற்பத்​தி​செய்து, பயனாளிக்கு மறுபடி​யும் கொடுப்​பதன் மூலம், பலதரப்​பட்ட தன்னுடல் தாக்கு நோய்​களுக்கு நிரந்​தரத் தீர்வு காணலாம். தற்போது உறுப்பு மாற்றுச் சிகிச்சை​களின்​போது பயனாளி​யின் உடலானது மாற்று உறுப்புகளை நிராகரிக்​கும் போக்கு இருந்து​வரு​கிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வழித்தடத்தில் இதற்கு மாற்று ஏற்பாடு கிடைக்கலாம். உதாரணமாக, ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்களை மாற்றி அமைத்து, எதிரணுக்களை (Antibodies) அவற்றில் உட்காரவைத்து, மாற்று உறுப்புகளில் அவற்றைப் பதித்துவிட்டால், ‘டி’ செல்கள் தவறாக அவற்றைத் தாக்க வரும்போது எதிரணுக்கள் அவற்றோடு போராடி உறுப்புகளைப் பாதுகாத்துவிடும். இனி, ஸ்டெம் செல் சிகிச்சையிலும் புதிய முன்னேற்றங்கள் வரலாம். வருங்காலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் பல புதுமைகள் புகுத்தப்படலாம்.

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT