சோமனின் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி, சிவராம காரந்த் தனது நாவலில் இப்படி எழுதியிருக்கிறார். ``சமையல் என்ற பெரிய பெயர் அதற்குத் தேவையில்லை. கஞ்சி காய்ச்சும் வேலைதான் அது. கல் அடுப்பில் நெருப்பு பற்ற வைத்து மண்பானையை வைத்தார்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொண்டுவந்த அரிசியிலே இரண்டு மூன்று பிடிகளை எடுத்துப் போட்டு வேக வைத்தார்கள். அங்கேயிருந்த இன்னொரு கல்லின் மீது நான்கு உப்புக்கல்லையும் இரண்டு உலர்ந்த மிளகாயையும் வைத்து அரைத்தார்கள். துவையல் தயாரானது. இன்னும் என்ன, அரிசி வெந்தவுடன் சாப்பிட வேண்டியது தான்.
``சோமனின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கு, மேற்சொன்ன வரிகளே சாட்சியம். கன்னட இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளராகக் கொண்டாடப்படும் சிவராம காரந்த் ஞானபீடவிருது பெற்றவர். நாட்டுப்புறக்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1931இல் ‘சோமனின் உடுக்கை’ நாவலை எழுதியிருக்கிறார். தலித் இலக்கியங்களின் முன்னோடி படைப்பாக இந்த நாவல் கருதப்படுகிறது. தி.சு.சதாசிவம் இந்நாவலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.சோமனின் உடுக்கையொலி நாவலின் மையப் படிமமாகிறது. தனது மனத்துயரை, கஷ்டங்களை உடுக்கையொலியின் மூலம் சோமன் வெளிப்படுத்துகிறான். அவன் பூசாரியோ, குறிசொல்பவனோ இல்லை. மாறாகத் தனது கடந்தகாலத்தைப் போலவே எதிர்காலமும் இருண்டிருக்கிறது என உணர்ந்தவன். அவன் எழுப்பும் இசை அவனது இருப்பின் அடையாளம்.
“இருட்டென்றால் இருட்டு, அப்படியான இருட்டு” என்ற நாவலின் தொடக்க வரி சோமனின் வாழ்க்கை நிலையினையும் அடையாளப்படுத்துகிறது. போகனஹள்ளி என்ற கிராமத்தில் சோமன் வசிக்கிறான். சங்கப்பையா என்ற பண்ணையாரிடம் விவசாயக் கூலியாகப் பணியாற்றுகிறான்.
அவனுக்குச் சொந்தமாக இரண்டு மாடுகள் இருக்கின்றன. ‘இன்றைக்கோ நாளைக்கோ, என்றாவது ஒருநாள் தானொரு நிலம் படைத்த விவசாயி ஆவேன்’ என்னும் கனவு மயக்கத்தில் இருக்கிறான். போகனஹள்ளியில் ஐம்பது அறுபது வீடுகளே இருக்கின்றன. சோமன் ஒரு குடிசை வீட்டில் வசிக்கிறான். அவனது மனைவி இறந்துவிட்டாள். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். சனியா, குருவா, காளா, நீலா என்று நான்கு பையன்கள். பெள்ளி என்ற மகள் வீட்டினைப் பராமரிக்கிறாள்.
சோமனுக்குத் தன்னுடைய வயது எவ்வளவு என்று தெரியாது. நாவலின் ஒரு இடத்தில் “நான்இன்னும் நூறு வருஷம் பொழச்சிருக்க மாட்டேனா?” என்று கேட்கிறான். “அவனுக்கு நூறு என்றால் எவ்வளவு என்று கூடத் தெரியாது” என்றே காரந்த் குறிப்பிடுகிறார். அந்தக் கால கிராமத்தில் யார் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். பலருக்கும் பிறந்த நாள், வருஷம் தெரியாது. உத்தேசமாக வயதைச் சொல்வார்கள். சோமனும் அப்படியே இருக்கிறான். போகனஹள்ளியின் பக்கத்துக் கிராமத்தில் கோவில் திருவிழா நடக்கிறது. ஊரே திரண்டு திருவிழா காணச் செல்கிறார்கள். அது வேடிக்கை பார்ப்பதற்காக மட்டுமில்லை. அங்கே இலவசமாக உணவு வழங்கப்படும் என்பதே முக்கியக் காரணம் திருவிழா நடக்கும் நாளில் மதிய உணவு இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இரவு உணவு கிடைக்காது. ஆடல் பாடல் குடியெனப் பலரும் கொண்டாட்டத்தில் இருப்பதால் பசியை மறந்துவிடுவார்கள். ஆனால் உழைப்பாளியான சோமனுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் பசித்த வயிற்றோடு கொண்டாட்டங்களைக் காண்கிறார்கள். எந்தக் கொண்டாட்டமும் சோமனின் மனதை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.
சோமனின் குடும்பத்தில் நீலனும் காளனும் சவலைப் பிள்ளைகள். அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. பெள்ளி காட்டிற்குள் சென்று புல்வெட்டுகிறாள்; வீட்டில் சமையல் செய்கிறாள். தனக்கெனச் சொந்தமாகத் துண்டு நிலமாவது வேண்டும் என நினைக்கும் சோமன், எஜமான் சங்கப்பய்யாவிற்கு எதற்காக ஒடியோடி வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறான். அந்த எண்ணத்திலே உடுக்கை அடிக்கிறான். குடிசையிலிருந்து சற்றுத் தொலைவில் நின்று அவனது எஜமான் கூப்பிடுகிறார். சோமனின் மகள் பெள்ளி, ‘தகப்பனுக்குக் காய்ச்சல்’ என்று எஜமானிடம் சொல்லி வைத்திருந்தாள்.
தான் குத்தகைக்கு நிலம் கொடுக்க மறுத்ததால் சோமன் வேலை செய்ய மறுக்கிறான் என்று அவருக்குச் சந்தேகம் இருந்தது. சோமனின் உடுக்கையின் ஆர்ப்பாட்டம் அவரது சந்தேகத்தை உறுதியாக்குகிறது. அவன் குடிசையிலிருந்து வெளியே முகத்தை நீட்டுவதற்குள்ளாகவே, ''காச்சலடிக்கிறவன் கை இவ்வளவு ஜோரா வாசிக்குமாடா?'' என்று கோபத்துடன் கேட்கிறார். அந்தக் கேள்வி அவனை நிலைகுலைய வைக்கிறது. சோமனின் மனதில் தோன்றிய ஆசைகள் யாவும் அக்குரலைக் கேட்டவுடன் மொத்தமாக அடங்கிப் போய்விடுகிறது. சோமனின் உணர்ச்சிகளை காரந்த் மிகவும் துல்லியமாக எழுதியிருக்கிறார். கங்காணி ஒருவனிடம் சோமன் எப்போதோ வாங்கிய ஐந்து ரூபாய்க் கடன் வளர்ந்து இருபது ரூபாயாகிறது. அந்தக் கடனைக் கட்டச் சொல்லி கங்காணி வீடு தேடிவந்து மிரட்டுகிறான். வாங்கிய கடனுக்கு வேலை செய்வதற்குக் காபி எஸ்டேட்டுக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான்.
குடும்பத்தைப் பிரிய மனதில்லாமல், சோமன் எப்படியாவது அவனது கடனை அடைத்துவிடுவதாக வாக்களிக்கிறான் ஆனால் கங்காணி அதனை ஏற்கவில்லை. சோமனின் இரண்டு மகன்களையும் எஸ்டேட் வேலைக்கு அழைத்துக்கொண்டு போகிறான். பிள்ளைகளின் பிரிவை கூடச் சோமன் எளிதாகவே எடுத்துக் கொள்கிறான்.
அந்தக் காலத்தில் காபி எஸ்டேட் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதைக் காரந்த் விரிவாக எழுதியிருக்கிறார். எஸ்டேட்டில் நடைபெறும் ஒடுக்குமுறைகள், நோய் பாதிப்பு, கிறிஸ்துவ மத மாற்றம். கங்காணியின் பேராசை குறித்து உண்மையாகச் சித்தரித்துள்ளார். துண்டுநிலத்தை அவனுக்குத் தருவதற்குச் சங்கப்பையா விரும்பும்போது, அவரது அம்மா சோமனின் சாதியைச் சொல்லி அதனை தடுத்துவிடுகிறாள். தனது மகள் பெள்ளி கங்காணியோடு நெருங்கிப் பழகுவதைக் கண்ட சோமன் கோபத்தில் கங்காணியைத் தாக்குகிறான். மகளைத் தண்டிக்க முடியாமல். அவளது கழுத்தை இறுக்கிப்பிடித்து ஆவேசமாக அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சிரிக்கிறான். அந்த முத்தம் அவனது இயலாமையின் அடையாளம்.
மகளை வீட்டைவிட்டு துரத்திய பின்பு சோமன் ஆவேசமாகப் பண்ணையாரின் நிலத்தை உழுகிறான்; ஆத்திரம் தீராமல் கலப்பையை உடைத்துச் சுக்கு நூறாக்குகிறான்; தீவைக்கிறான். நாவலில் ஒன்றன் பின் ஒன்றாகச் சோமனின் குடும்ப உறுப்பினர்கள் பிரிந்து போகிறார்கள். அவன் மிகவும் நேசித்த மகளும் அவனது விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்கிறாள். இனி தனக்கு யாரும் தேவையில்லை என மனம் கசந்து போய் உடுக்கையை அடிக்கத் துவங்குகிறான். நாவலின் தொடக்கத்தில் கேட்ட அதே உடுக்கை ஒலிதான் முடிவிலும் கேட்கிறது. அது கைவிடப்பட்ட சோமனின் துயரை, ஏமாற்றத்தை நிர்கதியை வெளிப்படுத்துகிறது. இந்நாவல், ‘சோமனதுடி’ திரைப்படமாக வெளிவந்து தேசிய விருதினைப் பெற்றுள்ளது. இசை எப்போதும் மகிழ்ச்சியின் அடையாளம் மட்டுமில்லை; இதுபோலத் துயரின் அடையாளமும்தான்.