இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ’நீலன்’ என்கிற பெயரை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவன் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வசிக்கும் ஆதிவாசிச் சிறுவன். அவனுக்குக் காடு குறித்தும் அங்கு வாழும் உயிரினங்கள் குறித்தும் அனுபவ அறிவு ஏராளம். அவனிடம் அனுபவப் பாடங்களைப் படிப்பதற்காகக் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருவார்கள். வன உயிரினங்களால் பிரச்சினை என்று உதவி கேட்டு வன அதிகாரிகளும் அவனைத் தேடி வருவார்கள். இப்படிக் கற்றோருக்குப் பாடம் எடுக்கும் அளவுக்கு கள அனுபவம் கொண்ட நீலனைப் போலவே, நீலன் கதாபாத்திரத்தை உருவாக்கிய கொ.மா.கோதண்டமும் அதிகம் படித்தவரில்லை. ஆனால், கற்றோரிடமிருந்து இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்றுக்கொண்டு, தன்னை மிகச் சிறந்த எழுத்தாளராக வளர்த்துக்கொண்டவர்.
கதை, நாவல், கவிதை, அறிவியல் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும் கொ.மா.கோதண்டம் என்றதும் நினைவுக்கு வருவது நீலன் கதைகளே. நீலனை வைத்து மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் படைத்திருக்கிறார். இந்தக் கதைகளைப் படித்தாலே, காடுகளைப் பற்றியும் கானுயிர்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். கதையாக இருந்தாலும் கதைகளில் வரும் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் உண்மையே. கதைதானே என்று போகிற போக்கில் ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியமாக அவர் கையாண்டதில்லை.
கதைகளில் வரும் தகவல்கள் மட்டுமல்லாது, நகரத்திலிருந்து காட்டுக்குள் வரும் சிறுவர்களுக்குக் காடு குறித்த புரிதல் குறைவாக இருக்கும் என்பதால், நீலன் அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருப்பான். ஏதாவது தவறு செய்தால் சுட்டிக் காட்டுவான்; ஆபத்து என்றால் அவர்களைக் காப்பாற்றுவான். இப்படிக் காடும் கானுயிர்கள் குறித்தும் ஏராளமான கதைகளை எழுதிய இன்னொருவர் தமிழில் இல்லை. அதனால்தான் கொ.மா.கோதண்டத்துக்குக் ‘குறிஞ்சிச் செல்வர்’ என்கிற பொருத்தமான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது!
அதீத கற்பனை உலகத்தில் உலவிய காட்டையும் அங்கு வாழும் உயிர்களையும் மனிதர்களையும் யதார்த்த உலகத்துக்குக் கொண்டு வந்த சூழலியல் எழுத்தாளரும் இவரே! நீலன் கதைகளை ‘இந்து தமிழ் திசை’யின் மாயாபஜாரில்கூட 2019ஆம் ஆண்டு வரை எழுதியிருக்கிறார். சரி, காடு குறித்து இவ்வளவு விஷயங்களை இவர் எவ்வாறு அறிந்தார்? காட்டிலும் மலையிலும் சில காலம் தங்கி, ஆராய்ச்சி செய்து, தகவல்களைச் சேகரித்து, புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார் இவர்.
ராஜபாளையத்தில் செண்பகத் தோப்புப் பகுதியில் வசித்த 32 ஆதிவாசிக் குடும்பங்களுக்கு, அப்போதிருந்த ஆட்சியரிடம் வலியுறுத்தி 32 வீடுகளைக் கட்டிக் கொடுக்கக் காரணமாக இருந்தவர், கொ.மா. கோதண்டம். எழுதுவதோடு சிறார்களை வைத்து சிறுவர் சங்கத்தையும் நடத்தியிருக்கிறார். 68 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலை மன்றத்தை நிறுவி,தன் வாழ்நாள் வரை தலைவராகவும் இருந்து,சிறப்பாக இலக்கியப் பணியாற்றி வந்திருக்கிறார். தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மீது அதீதப் பற்றுகொண்டவர். அதனால்தான் தன் மகன்களுக்குக் குறளமுதன், இளங்கோ என்று பெயர் சூட்டியிருக்கிறார். பல மொழிகளை அறிந்தவர். மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவரின் நூல்கள் அயல்நாட்டு மொழிகள் உள்பட, இந்தியமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆரண்ய காண்டம் என்கிற இவரின் முதல் நூலுக்குக் குடியரசுத் தலைவர் விருது, சாகித்ய அகாடமி வழங்கிய பாலபுரஸ்கார் விருது, லண்டன் தமிழ்ச் சங்க விருது உள்பட ஏராளமான விருதுகளையும் பட்டங்களையும் கவுரவங்களையும் பெற்றவர் கொ.மா.கோதண்டம். சிறந்த எழுத்தாளராகவும் சூழலியலாளராகவும் களப்பணியாளராகவும் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்த சிறந்த மனிதராகவும் என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார் கொ.மா. கோதண்டம்.