திருச்சி மாவட்டம் குமாரவயலூருக்கு அருகே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் கண்டறியப்பட்டு, 1984 பிப்ரவரி 19ஆம் நாள் சீரமைப்பிற்கு உள்ளான முள்ளிக்கரும்பூர் சிவன்கோயில் முன்னுள்ள பெருவெளியில்தான் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை பொறுப்பு இயக்குநராக இருந்த நடன. காசிநாதனை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
முதல் சந்திப்பே அவர் மிக எளிமையான மனிதர், அனைவரையும் தழுவிச்செல்லும் பண்பினர் என்பதை உணர்த்தியது. நடன. காசிநாதனுடன் தொல்லியல்துறைக் கருத்தரங்குகளிலும், அரசுசார் அமைப்புகளிலும் பல ஆண்டுகள் இணைந்து பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புகள் அவருடனான நட்பை வளர்த்தன. பழகுதற்கு இனியவராகவும் அணுகுவதற்கு எளியவராகவும் விளங்கிய அப்பெருந்தகையின் தொடர்பால் எங்கள் மைய ஆய்வர்கள் பெரும் பயன் பெற்றனர். அவரது தொல்லியல் பட்டறிவும் ஆய்வுப் புலமையும் நிகரற்றன.
தமிழி, வட்டெழுத்து, தமிழ், கிரந்தம் உள்ளிட்ட பல வரிவடிவக் கல்வெட்டுகளைப் படிப்பதில் வல்லமை பெற்றிருந்தவர் என்றாலும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் காண்பதில் அவருக்கு இணை அவர்தான். கல்வெட்டியலுக்கு ஓர் அறிமுகம் போல், அவர் எழுதிய ‘கல்லெழுத்துக்கலை’ எனும் நூல், கல்வெட்டுத் துறையில் நுழைவோருக்கு உற்ற நண்பனாய் அமைந்த வழிகாட்டு நூலாகும். அது போலவே காசியலிலும் அளவற்ற தெளிவு கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டளவில் நிகழ்ந்த காசியல் கருத்தரங்குகளில் அவர் படித்தளித்த கட்டுரைகள் சிறப்பானவை. ‘தமிழகக் காசு இயல்’ எனும் அவரது காசியல் நூல் அத்துறைசார் ஆய்வாளர்களுக்கு இன்றளவும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்ததுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அருகிலுள்ள தொப்பளிக்குப்பத்தில் பிறந்தவரான நடன. காசிநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலையில் தொன்மை வரலாறு, தொல்லியல் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1967இல் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறையின் கல்வெட்டாய்வாளராகப் பணியில் சேர்ந்தவர், 1989இல் இயக்குநராக உயர்வு பெற்று, 1998இல் ஓய்வு பெற்றார்.
தாம் பணியிலிருந்த காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகள் செய்து பல புதிய கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்துள்ளார். திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில் அவர் கண்டறிந்த இரண்டு அரிய செப்பேடுகள் பல்லவர் வரலாற்றிலிருந்த குழப்பத்தைக் களையப் பேருதவியாக அமைந்தன. சென்னையில் அவர் அமைத்த பூம்புகார்க் கடல் அகழாய்வுக் கருத்தரங்கு, கடல் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் குறித்த பல தெளிவுகளை வெளிக்கொணர்ந்தது.
தஞ்சாவூரில் 1994இல் நடைபெற்ற 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டின்போது பழைமை மாறாமல் அவரால் புதுப்பிக்கப் பெற்ற பழங்கட்டுமானங்கள் பலவாகும். அவற்றுள், தஞ்சாவூர் மராத்தியர் அரண்மனை, மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் ஆகியன குறிப்பிடத்தக்கன. பணி ஓய்வுக்குப் பிறகு ‘தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்’ என்ற ஓர் அமைப்பை நிறுவிப் பல கருத்தரங்குகளை நிகழ்த்தி, நூல்களை வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.
தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்நிலைக் குழு உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. பல்லவர், பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு முதலிய அரசு வெளியீடுகள் அவராலும் அவர் துறை சார்ந்த ஆய்வாளர்களின் துணையாலும் வெளியானவை.
அவரால் எழுதப்பெற்ற எண்ணற்ற நூல்களுள் ‘காலச்சுவடுகள்’, ‘களப்பிரர்’, ‘தமிழகச் சிற்பிகள் வரலாறு’, ‘தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்’, ‘சோழர் செப்பேடுகள்’ முதலியன அவரது பல்லாண்டுக் காலத் தொல்லியல் பட்டறிவைப் பறைசாற்றுவன. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக்காக அவர் பதிப்பித்த கல்வெட்டுத் தொகுதிகளும், கருத்தரங்கக் கட்டுரைகளும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்றென்றும் வழிகாட்டும். அவரது ஆங்கில நூல்கள், அகழாய்வு வெளிப்பாடுகளை முன்னிருத்திப் பேசுவன. அழகன்குளம், படவேடு அகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.
சிறந்த ஆய்வாளராகவும், எல்லோருக்கும் விளங்குமாறு எழுதும் எழுத்தாளராகவும், இளம் ஆய்வாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் விளங்கிய நடன. காசிநாதன் மறைந்தார். எனினும், வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தம் கண்டுபிடிப்புகளாலும் அவற்றை வெளிப்படுத்திய நேர்த்தியான நூல்களாலும் நடன. காசிநாதன் நீக்கமற நிறைந்திருப்பார்.