உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம், கடும் கண்டனத்துக்கு உரியது. இது இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் மாண்பையே அவமதிக்கும் வகையிலான செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக 2025 மே மாதம் பொறுப்பேற்றார்.
நீதிபதிக்கான வழக்கமான செயல்பாடுகளோடு, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சக நீதிபதிகளோடு சென்று மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியது, உச்ச நீதிமன்றப் பணிகளில் பட்டியல் சாதி, பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு முறையை முதன்முதலாக அமல்படுத்தியது என்பன போன்ற இவரது நடவடிக்கைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன.
உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 6 அன்று, வழக்கு விசாரணைக்காக கவாய் தலைமையிலான அமர்வு கூடியபோது ராகேஷ் கிஷோர் (71) என்கிற வழக்கறிஞர், கவாயை நோக்கித் தனது காலணியை வீச முயன்றார்; ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றும் கோஷம் எழுப்பினார்.
இந்தச் சூழலில் கவாய், “இது என்னைப் பாதிக்கவில்லை. யாரும் கவனத்தைச் சிதறவிடாதீர்கள்” எனக் கூறி, இயல்புநிலை பாதிக்காதபடி நடந்துகொண்டது கவனிக்கத்தகுந்தது. இந்தத் தாக்குதல் முயற்சி குறித்து அவர் புகாரும் செய்யவில்லை. காவல் துறை விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட ராகேஷ் கிஷோர், பார் கவுன்சிலிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில், சேதமடைந்துள்ள விஷ்ணு சிலை ஒன்றை மறுநிர்மாணம் செய்ய அரசுக்கு உத்தரவிடும்படி ராகேஷ் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இது யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற கஜுராஹோ தொல்லியல் சின்னங்களின் தொகுப்பைச் சேர்ந்த கோயில்.
இந்த வழக்கை விசாரித்த கவாய், “இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் சிலை மறுநிர்மாணம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. இது முற்றிலும் விளம்பரத்துக்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு. சிலை மறுநிர்மாணம் குறித்து அந்தத் தெய்வத்திடமே கேளுங்கள்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே காலணி வீச முயன்றதாகவும் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் ராகேஷ் கூறியுள்ளார்.
மனுதாரர்களுக்குச் சில தீர்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். தீர்ப்பில் இடம்பெறும் சில வார்த்தைகள் அவர்களுக்கு நெருடலாக இருக்கலாம். அதற்காக நீதிபதியை அவமதிப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. இதனை நீதித் துறை மீதான அவமரியாதையாகவே கருத முடியும். பாஜக முன்னிறுத்தும் சனாதனக் கோட்பாடுகளின் விளைவு என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இச்செயலை விமர்சித்துள்ளன.
அதேவேளையில், கவாயிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இச்சம்பவம் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருப்பதாகவும் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளதோடு, இதை கவாய் முதிர்ச்சியோடு எதிர்கொண்டதைப் பாராட்டியும் இருக்கிறார். பிரதமரின் தலையீட்டுக்குப் பிறகாவது சர்ச்சைக்குரிய பேச்சுகளை ராகேஷ் தவிர்க்க வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தோடு அரசமைப்புச் சட்டத்தின் தலைமைப் பாதுகாவலராகத் திகழ்பவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. அவரை அவமதிக்க முயல்பவர்கள் மீது சமரசமற்ற நடவடிக்கை கட்டாயம் தேவை. மத்திய அரசின் உறுதியான எதிர்வினையே, இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும்.