ஓய்வுபெற்ற முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன், மொஹாலி அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், பேச்சாளர், அறிவியல் பரப்புரையாளர் எனத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் வெங்கடேஸ்வரன், சமகால அறிவியல் நிகழ்வுகள் தொடர்பாகத் தமிழ் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதிவருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்குள் ‘ஏன்’, ‘எதற்கு’, ‘எப்படி’ என்கிற கேள்விகள் எப்போது தோன்றின?
ஆரம்பப் பள்ளியில் என்னுடன் படித்த வள்ளி திடீரென்று காய்ச்சலில் இறந்துவிட்டார். முருக பக்தரான அவரது அப்பா துயரத்தில் கண்ணாடிச் சட்டம்போட்ட முருகன் படங்களை உடைத்துக்கொண்டிருந்தார். கடவுள் ஏன் தன் பக்தரைக் காப்பாற்றவில்லை என்கிற கேள்வி எழுந்தது. அடுத்து, என்னுடன் படித்த பார்த்திபன் முதல் மதிப்பெண் வாங்குபவன். நான் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது, ஒருநாள் அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
மிகச் சிறந்த மாணவனால் ஏன் கல்வியைத் தொடர முடியவில்லை என்று யோசித்தேன். அடுத்து, கணவனை இழந்த பெண்கள் அப்பளம் தயாரிக்கும் கம்பெனியிடம் கூலி உயர்வு கேட்டு சென்னை மயிலாப்பூரில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இந்த மூன்று சம்பவங்களும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் நம்மால் விடை கண்டறிய முடியாது என்கிற தெளிவைக் கொடுத்தன.
மிக இளம் வயதிலேயே ரயில்வே வேலையை விட்டுவிட்டு, சமூகப் பணியில் ஈடுபடக் காரணம் என்ன?
ரயில்வேயில் வேலை பார்த்தபோது, சென்னையில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து குடிசைப் பகுதிகளில் அறிவியல் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரிய முன்னெடுப்பைச் செய்தது. போபால் விஷ வாயுக் கசிவை ஒட்டி 1987இல் தேசிய அளவில் அறிவியல் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியிலிருந்து டாக்டர் டி.சுந்தரராமன், சமூக அறிவியல் பணியில் பங்கெடுக்க விருப்பமா என்று கேட்டார். ஊதியம் இல்லாத விடுப்பில் அந்தப் பயணத்தில் பங்கேற்றேன். ‘துளிர்’ அறிவியல் இதழ் ஆரம்பித்தபோது, என்னை அதற்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். மிகக் குறைவான சம்பளம்தான். ஆனால், பிடித்த வேலை என்பதால் ரயில்வே வேலையை விட்டுவிட்டு அறிவியல் இயக்கத்தில் இணைந்தேன்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றது குறித்து?
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, திருவனந்தபுரத்தில் இருக்கும் படிமவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தின் (Centre for Development of Imaging Technology) அழைப்பின்பேரில் மூத்த விரிவுரையாளராகச் சேர்ந்து 6 ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு, அகில இந்திய அளவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தால், விஞ்ஞான் பிரசாரில் சேர்ந்தேன். பல்வேறு மாநிலங்களில் அறிவியல் கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியது நல்ல அனுபவத்தைத் தந்தது.
இந்தியர்களின் அறிவியல் ஆர்வம் எப்படி இருக்கிறது?
இந்தியர்களுக்கு அறிவியல் மீது பெரிய ஆர்வம் இருக்கிறது. பலரும் தங்கள் வாழ்க்கையில் அறிவியல் வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது என்கிறார்கள். 1990களில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. பாதுகாப்பாக கிரகணத்தைப் பார்க்க அறிவியல் இயக்கம் மக்களை ஊக்குவித்தது. ஆனால், கண் குருடாகிவிடும் என்று எதிர் பிரச்சாரமும் நடந்தது. படித்தவர்கள்கூட வீட்டுக்குள் முடங்கிக்கொண்டார்கள்.
ஆனால் தொழிலாளர்கள், வியாபாரிகள் வழக்கம்போல் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், ‘ஆடு, மாடுகள் எல்லாம் வெளியில் நிற்கிறதே, அதுங்களுக்குக் கண் கெடாதா?’ என்று கேட்டதாகச் சொன்னார்கள். இந்த மாதிரியான நேரடி அவதானிப்பு, தர்க்கம் படித்தவர்களைவிடவும் சாதாரண மக்களிடம்தான் நிறைய இருக்கிறது.
தமிழில் அறிவியலை எழுதும்போது உள்ள சவால்கள் என்னென்ன?
பலரும் ‘கலைச்சொற்கள் இல்லை’ என்கிறார்கள். ஆனால், அது சிறிய சவால்தான். சொற்கள் மெதுவாக உருவாகும். தொல்காப்பியத்தில் இருந்த சொற்களை மட்டுமேவா இன்றைக்கும் வைத்திருக்கிறோம்? காலப்போக்கில் பல புதிய தொழில்நுட்பங்கள் வருகின்றன. அந்தத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நாம் புதிய சொற்களைப் படைக்கிறோம்.
சொற்களுக்கு ஒரு கலைச்சொல் அடிப்படையைக் கொடுக்கிறோம். இது காலம்தோறும் நடக்கும். அறிவியல் தமிழ்ச் சொற்களும் தமிழில் பெருகும். இன்றைக்கு அறிவியல் துறை எங்கோ போய்விட்டது. குவாண்டம் பிசிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் மாதிரி நமக்குத் தெரியாத நவீன அறிவியல் பிரிவுகளைத் தமிழில் எப்படிச் சொல்வது என்பதுதான் இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். இதற்கு ஆராய்ச்சிகள் தேவை.
அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் அறிவியலுக்குப் புறம்பான கூற்றுகளைச் சொல்லும்போது அது மக்களைப் பாதிக்கிறதா?
அறிவியலுக்குப் புறம்பான கூற்றுகளை ஒரு சமூகவியல் பிரச்சினையாகப் பார்க்கிறேன். வரலாற்றுபூர்வமாகவே இந்திய சமூக அமைப்பு இந்த சவால்களை எதிர்கொண்டுவருகிறது. அந்த அமைப்பின் மேல்தட்டில் இருந்தவர்கள் தங்கள் பிடியை மீண்டும் நிலைநாட்ட முயல்கிறார்கள். தங்கள் பழக்கவழக்கங்களைப் ‘புனிதமாக்கி’, அதன் மூலமாக ஒரு படிநிலைச் சமூக அமைப்பை மீண்டும் உருவாக்க முயல்கிறார்கள். இதுபோன்ற பொய்யான கூற்றுகளை எதிர்ப்பது வெறும் அறிவியல் கண்ணோட்டத்தைக் காப்பதற்காக மட்டும் அல்ல, சமூக நீதிக்காகவும்தான்.
குழந்தை பெறும் காலக்கட்டத்தில் பெண்களின் தொழில்முறைப் பங்களிப்பு அறிவியல் துறையில் இயல்பாகவே குறைகிறது. ஆனால், அதன் பிறகு மீண்டும் முன்னேற உதவும் ஆதரவான அமைப்புகள் இல்லை. இதனால், பெண்களின் பங்களிப்பு ஆரம்ப நிலையில் அதிகமாக இருந்தாலும், பெரிய பதவிகளில் குறைந்துவிடுகிறது. இந்தியாவின் சமூகச் சூழலுக்கு ஏற்ற தீர்வுகளை இதற்குக் கண்டறிய வேண்டும்.
ஒரு குழந்தைக்கு அறிவியலை எந்த வயதில் அறிமுகம் செய்யலாம்?
குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் பிறவியிலேயே அறிவியல் மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு குழந்தை புதிய பொம்மையை உடைத்துப் பார்ப்பது, அது எப்படி வேலைசெய்கிறது என்று தெரிந்துகொள்ளத்தான். இதுதான் அறிவியல் முறை. நாம் செய்ய வேண்டியது அந்த ஆர்வத்திற்குத் தடை போடாமல் இருப்பதுதான்.
விண்வெளித் துறையில் இந்தியா இவ்வளவு செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இந்தியா தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.6% மட்டுமே அறிவியலுக்குச் செலவிடுகிறது. சீனா 2.6% செலவிடுகிறது, அதுவும் இந்தியாவைவிட மிக அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன். அறிவியல் செலவு என்பது செலவு அல்ல; முதலீடு. நாம் அறிவியலுக்குப் பணம் செலவிடும்போது, தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்கவில்லை, மனித வளத்தையும் சேர்த்தே உருவாக்குகிறோம்.
- தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in