தலையங்கம்

குழந்தைகளைக் கொல்லும் மருந்துகளுக்கு முடிவுகட்டுவோம்!

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருமல் மருந்து காரணமாக உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நோய் பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டிய மருந்தே, உயிர் குடிக்கும் விஷமாக மாறியிருப்பது தாள முடியாத கொடுமை. அலட்சியம், முறைகேடு, விழிப்புணர்வின்மை எனப் பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருப்பது, பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள், மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல் மருந்தை அருந்தியதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சில குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது.

மத்தியப் பிரதேச அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், காஞ்சிபுரத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’ என்கிற இருமல் மருந்து இதன் பின்னணியில் இருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், குழந்தைகளுக்கு உகந்த மருந்துகளே அவர்களுக்குக் கிடைப்பதாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, இப்போது ஆட்டம் கண்டிருக்கிறது. உதாரணமாக, ராஜஸ்தானில் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் மூலப்பொருள் அடங்கிய இருமல் மருந்தை அருந்திய இரண்டு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது தொடர்பான விசாரணையில், அந்த மருந்து குழந்தைகளுக்கானது அல்ல எனத் தெரியவந்திருக்கிறது.

ராஜஸ்தானில், தந்தைக்குப் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை அவரது குழந்தைக்கு வழங்கியதில் அக்குழந்தை உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது. பொதுவாகவே, இருமல் மருந்தால் குழந்தைகளுக்குப் பலன்களோடு பாதிப்புகளும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மருத்துவர்களின் உரிய பரிந்துரை இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்கப்படும் மருந்துகளும் குழந்தைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனி உடலமைப்பைக் கொண்டது என்பதால், ஒரே மாதிரியான மருந்தை எல்லாக் குழந்தைகளுக்கும் அளிக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2023இல் காம்பியா நாட்டில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற இருமல் மருந்தே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியது. உஸ்பெகிஸ்தானில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சிங் ராகவேந்திர பிரதாப் என்னும் இந்தியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி குழந்தைகளுக்கான மருந்துகள் விவகாரத்தில் ஏற்கெனவே சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் எதிர்மறையாகப் பதிவாகியிருக்கிறது.

‘மருந்துகள் - அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940’இன்படி, மருந்து தயாரிப்பு, விற்பனை, விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கும் அதைக் கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. இந்த விவகாரத்தில் மருந்தில் பிரச்சினை இருப்பது தெரிந்தவுடன், விரைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற தமிழக அரசு, இனி வரும் காலத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி தரமற்ற மருந்து உபயோகத்தை முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

தரப் பரிசோதனைகளில் தோல்வியுறும் நிறுவனங்களின் பெயர்களைப் பொது வெளியில் அறிவித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் முக்கியம். அரசுகளின் உரிய சட்ட நடவடிக்கைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டால்தான் இதுபோன்ற அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும்!

SCROLL FOR NEXT