சிறப்புக் கட்டுரைகள்

சிம்பன்சிகளுடன் உறவாடிய அரிய அறிவியலாளர் | ஜேன் குடால் (1934 - 2025) அஞ்சலி

சு.தியடோர் பாஸ்கரன்

உலக வரலாற்றில் அவ்வப்போது சில மேதைகள் தோன்றி மானுட குலம் பற்றிய நம் புரிதலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர், சார்லஸ் டார்வினைப் போல. அப்படிப்பட்ட ஓர் அறிவியலாளர்தான் அண்மையில் காலமான ஜேன் குடால் (Jane Goodall).

விலங்குகள் புலன் உணர்ச்சிகள் கொண்டவை. பயம், மகிழ்ச்சி, துயரம் போன்ற உணர்வுகள் அவற்றுக்கும் உண்டு என்று சொன்னவர். அந்த விழிப்பு அவருக்குத் தோன்றியவுடன் மரக்கறி உணவுக்கு மாறினார். இவரது அவதானிப்புகள் விலங்குகள் பற்றி நாம் கொண்டிருந்த பார்வையைப் பெருமளவு மாற்றின.

ஆப்​ரிக்கா​வுக்குப் பயணம்: முதனியல்​/குரங்​கியல் (primatology) துறை அதாவது, குரங்குகளை ஆராயும் தளம் கடந்த நூற்றாண்டின் பிற்பா​தியில் பிரபலமான ஒன்று. இந்த உயிரினங்கள் பற்றி ஏன் ஆய்வுசெய்ய வேண்டும்? பரிணாம ஏணியின் மேல்தட்டில் இருக்கும் ஒரு குரங்கு வகையை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், மனிதர் வாழ்வு பற்றிய புதிய புரிதல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தளத்தில்தான் ஜேன் குடால் 65 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்​டிருந்​தார்.

லண்டனில் பிறந்து வளர்ந்த ஜேனுக்குச் சிறுவயது முதலே காட்டுயிர் மீதும் அவை செழித்​திருக்கும் ஆப்ரிக்கா மீதும் ஆர்வம் டார்சான் கதைகளைப் படித்​ததும் இந்த ஈடுபாட்டுக்கு ஒரு காரணம். ஜேனின் தாயாரும் அவரது ஆப்ரிக்கக் கனவை ஊக்கு​வித்​தார். உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி, சிறிது பணம் சேர்ந்​ததும், ஒற்றை வழிப் பயணச்​சீட்டு வாங்கிக்​கொண்டு, ஒரு கப்பலைப் பிடித்து, கென்யா நாட்டுக்குச் சென்றார் ஜேன்.

அங்கு ஓல்டுவாய் பள்ளத்​தாக்கில் மனிதரின் மூதாதையர் சார்ந்த புதைபடிவத் தொல் எச்சங்களை ஆய்வுசெய்து பிரபலமடைந்​திருந்த பிரிட்டிஷ் மானுட​விய​லாளர் லூயிஸ் லீக்கி​யிடம் (Louis Leakey) உதவியாள​ராகச் சேர்ந்​தார். காட்டு​யிர்​களிடம் ஜேன் கொண்டுள்ள ஈடுபாட்டைக் கவனித்த லூயிஸ், அண்டை நாடான தான்சானி​யாவில் உள்ள கோம்பே தேசியப் பூங்காவில் உள்ள சிம்பன்​சிகளை அவதானிக்க அவரை அனுப்​பி ​வைத்​தார். அங்கே 10 ஆண்டுகள் தங்கிச் சிறப்பான ஆய்வை நடத்தினார் ஜேன்.

‘அம்மா சிம்பன்சி’ - கல்விப் புல மரபுகளைக் கண்டு​கொள்​ளாமல், தனது ஆய்வைத் தொடர்ந்த ஜேன், பல புதிய உண்மை​களைக் கண்டறிந்​தார். ஆய்வுக்​காகத் தான் தெரிந்து​கொண்ட சிம்பன்​சிகளுக்குப் பெயர் சூட்டி​னார். அதற்கு முன் அந்த வழக்கம் பரவலாக இல்லை. தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒரு சிம்பன்சியை ‘வெள்​ளைத்தாடி டேவிட்’ என்று அழைத்​தார்.

வாலில்லாக் குரங்குகள் பற்றி நாம் அறிந்ததை, அவற்றுக்கும் நமக்கும் உள்ள உறவை அவரது களஆய்வு விரிவாக்​கியது. ஒரு நாள், ஒரு சிம்பன்சி சிறு கிளை ஒன்றை முறித்து, அதில் உள்ள இலைகளைப் பிய்த்து நீக்கி​விட்டு, அந்தக் குச்சியை ஒரு மரப்பொந்தில் விட்டு எடுத்து, அதில் ஒட்டிவரும் கறையான்​களைத் தின்ற காட்சியைக் கண்டு வியந்​தார்.

சிம்பன்​சிகள் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்து​கின்றன என்பதைக் கண்டறிந்​தார். இது மரத்தினின்று கீழே விழுந்த ஆப்பிள் பழத்தை நியூட்டன் கவனித்தது போன்ற வரலாற்றைத் திருப்பிய நிகழ்வு. அது மட்டுமல்ல... சிம்பன்​சிகளுக்கு உணர்வுகள் உண்டு, ஆளுமையும் உண்டு என்று இவர் ஆதாரத்​துடன் காட்டியது அறிவியல் உலகை உலுக்​கியது. பட்டப்​படிப்பு இல்லாமலேயே இவருக்கு முனைவர் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்​கழகம் வழங்கியது.

சிம்பன்​சிகள் ஒரு சமூக வாழ்க்கையை நடத்து​கின்றன என்பதைப் புரிந்து​கொண்​டார். மனிதர்​-​விலங்கு என்கிற வேறுபாட்டை இந்தப் புரிதல்கள் மழுங்​க​வைத்தன. இவ்வுலக வாழ்க்கையில் சகல உயிரினங்​களுக்கும் பங்குண்டு என்றார். மனிதரின் நெருங்கிய உறவினரான சிம்பன்​சியின் வருங்​காலத்தைக் காப்பாற்றப் பாடுபடும் இவரைச் சக ஆய்வாளர்கள் ‘அம்மா சிம்பன்சி’ என்று குறிப்​பிட்​டனர்.

விலங்கு​களுக்கான குரல்... 1986ஆம் ஆண்டு சிம்பன்சி ஆய்வாளர்​களுக்கு என ஒரு மாநாட்டைக் கூட்டி​னார். ஆப்ரிக்​காவில் சிம்பன்​சிகள் வாழும் காடுகள் அழிக்​கப்​பட்டு, அவற்றின் வாழிடம் சுருங்​கி வரு​கிறது என்ற உண்மை புலப்​பட்டது. இது சார்ந்து செயல்பட ஜேன் குடால் இன்ஸ்​டி டியூட் (Jane Goodall Institute) என்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்​கி​னார்.

இதன் கிளை மும்பை​யிலும் செயல்​பட்டு​வரு​கின்றது. உலகெங்கும் வாலில்லாக் குரங்கு​களின் உறைவிடங்கள் காடழிப்​பினால் மறைந்து​வரு​கின்றன. மிசோரமிலும் நாகாலாந்​திலும் வாழும் இந்தியாவின் ஒரே வாலில்லாக் குரங்​கினமான ஹுலக் கிப்பனுக்கும் (Hoolock Gibbon) இதே நிலைதான்.

விலங்குரிமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஜேன். பீட்டர் சிங்கர் எழுதிய விலங்கின விடுதலை (Animal Liberation) நூல் தன்னை மிகவும் பாதித்​த​தாகக் கூறுவார். இந்தப் புவி சகல உயிரினங்​களுக்கும் உரியது என்பதை அடிக்கடி சுட்டிக்​காட்​டி​னார். ‘வாய் பேச முடியாத விலங்கு​களுக்காக நாம் பேச வேண்டும்’ என்றார்.

நாய்கள் என்றால் ஜேனுக்கு உயிர். ‘எனக்குப் பிடித்த விலங்கு நாய்தான். நிபந்தனை அற்ற அன்பை நாய் மாதிரி எந்தப் பிராணியும் தர முடியாது’என்றார். சென்னைக்கு 2006இல் வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தெருநாய்ப் பிரச்சினை பற்றிக்கேட்டேன். ஒரு நாட்டின் பண்பாட்டுக்கு ஏற்ற தீர்ப்பைத் தேட வேண்டும் என்றார்.

ஜேனின் கரிசனம் காட்டு​யிர்கள் மேல் மட்டுமல்ல... ஆதிக்​குடி​யினரின் வாழ்விலும் அவர் அக்கறை காட்டியவர். அவர்களின் நல்லெண்ணம் இல்லையென்றால், காட்டு​யிர்கள் அழிந்து​விடும்; அதிலும் பெண்களின் ஆதரவு முக்கிய​மானது என்றார். அவர்கள் உதவி இல்லாமல் உயிர்ப் பன்மையைப் பாதுகாக்க முடியாது என்று நம்பி​னார்.

அண்மை ஆண்டு​களில் காலநிலை மாற்றத்தைப் பற்றி அவர் பேசினார். காலம் கடந்து​விட​வில்லை; இன்னும் நம்பிக்கை இருக்கிறது; இதைக் குழந்தை​களுக்குப் புரிய​வைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ‘வேர்​களும் துளிர்​களும்’ (Roots and shoots) என்கிற அமைப்பை நிறுவி, உலகெங்​கிலும் அதற்குக் கிளைகள் அமைத்​தார்.

நமக்கு இருக்கும் ஒரே வீடான இப்பூவுலகைக் காப்பாற்றுவதே அவருடைய நோக்கம். இதற்காகத் தன் வாழ்வின் கடைசி நாள்கள்வரை நாடு நாடாகச் சென்று உரையாற்றினார். அம்மா​திரியான ஒரு பயணத்​தின்​போது​தான், கலிபோர்​னி​யாவில் தூக்கத்​திலேயே நம்மிடமிருந்து விடை பெற்​றிருக்​கிறார் ஜேன்.

- தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

SCROLL FOR NEXT