சிறப்புக் கட்டுரைகள்

நிலநடுக்க நிவாரணம்: விலகுமா தாலிபானின் தயக்கம்?

ஜி.எஸ்.எஸ்

இந்தியக் கண்டத் தட்டும் (tectonic plate) யூரேசியக் கண்டத் தட்டும் சேரும் இடத்தில் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்களுக்குக் குறைவில்லை. குறிப்பாக, இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகளில் நிலநடுக்கங்கள் நிகழ்வது வழக்கம். 2025 ஆகஸ்ட் இறுதியில் நிகழ்ந்த 6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம், கிழக்கு ஆப்கானிஸ்தானைப் பெரிதும் பாதித்தது. ஏறக்குறைய 2,200 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.

நிலநடுக்​கங்கள் காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு, அது சாலைகளில் போக்கு​வரத்தை முடக்கி​ உள்ளது. மீட்புப் பணியும் தாமதமானது. ஹெலிகாப்​டர்​களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்​டுள்ளது. இப்போதைய தாலிபான் அரசுக்கு இந்த நிலநடுக்​கங்கள் ஒரு சவால்​தான். இயற்கைப் பேரிடர்களை தாலிபான் அரசு சமாளிக்க முடியாமல் திணறுவதாக விமர்​சனங்கள் எழுந்​திருக்​கின்றன.

தூதரகச் சிக்கல்: நிலநடுக்க விளைவு​களி​லிருந்து உடனே மீண்டுவர முடியாததால் அரசின் திறனின்மை, மோசமான உள்கட்​டமைப்பு வசதிகள், நிவாரண சாதனங்கள் போதிய அளவு இல்லாமை, மருத்துவ உதவி போதிய அளவு கிடைக்​காதது போன்றவை அரசின் பலவீனத்தைச் சுட்டிக்​காட்டு​வ​தாகக் கணிசமான ஆப்கானியர்கள் கருதுகிறார்கள். உள்ளூரில் உள்ள அரசுசாரா இயக்கங்களை அவர்கள் நம்பத் தொடங்கி​விட்​டனர்.

‘வெளி​நாடு​களின் உதவி எதுவும் இல்லாமல் தனியாகவே எங்களால் ஆட்சிசெய்ய முடியும்’ என்று கூறிவந்த தாலிபான் அரசு, தற்போது இறங்கிவர வேண்டிய நிலை. வேறுவழி​யின்றி ஐக்கிய நாடுகள் அவையிடமும் அண்டை நாடுகளிடமும் பொருளாதார உதவியைக் கேட்டிருக்​கிறது. அதேவேளை, இதில் தூதரகச் சிக்கலும் உள்ளது.

தாலிபான் அரசுக்குப் பிற நாடுகள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற விருப்பம் ஒருபுறம். அதேவேளை, அதிக அளவு வெளிநாட்டுப் பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதித்தால் நாட்டின் கட்டுப்பாடு தங்கள் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற அச்சம் மறுபுறம். ஹமீது கர்ஸாய், அஷ்ரஃப் கனி போன்றவர்களின் ஆட்சியின்போதும் ஆப்கானிஸ்தானில் பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவர்களுக்குப் பிற நாடுகளிடம் உதவியை நாடுவதில் அரசியல்ரீதியான பெரிய தடைகள் இருக்கவில்லை.

இப்போது நிலவரம் வேறு. தாலிபான் ஆட்சியை இன்னமும் பல நாடுகள் ஏற்கவில்லை. ஐ.நா. அமைப்பும் அங்கீகரிக்கவில்லை. தனது முகமைகள் மூலம் ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்தாலும், வெளிப்படையான அங்கீகாரத்தை ஐ.நா. வழங்கவில்லை. ‘மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம், மகளிர் பங்களிப்பு போன்றவற்றுக்கு மரியாதை அளிக்காத தாலிபான் அரசையும் அதன் அதிகாரிகளையும் அங்கீகரிக்க முடியாது’ என்று 2022இல் ஐ.நா.கூறியது.

2025 ஜூலையில் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்தது. இதைச் செய்த முதல் ஐ.நா. அவை உறுப்​பினர் நாடு அதுதான். இந்நிலை​யில், தாலிபான் அரசுக்கு ஆதரவு அளிக்க​வில்லை என்கிற​போ​திலும் மனிதாபி​மானக் கண்ணோட்​டத்தில் நிலநடுக்க நிவாரணப் பணிகள் தொடர்பாக ஐ.நா. வேண்டுகோள் விடுத்​திருக்​கிறது. பொருளா​தாரத் தடைகள், அரசியல்
​ரீ​தியான கட்டுப்​பாடுகள் போன்ற காரணிகள் சீரமைப்புப் பணிகளைத் தாமதப்​படுத்து​கின்றன.

தயங்கும் தாலிபான்: தாலிபான் ஆட்சி அமைந்த 2021இலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்​தானுக்கு அனுப்​பிவந்த உதவிகளை நிறுத்​தி​விட்டன அல்லது குறைத்து​விட்டன. தாலிபான் ஆட்சியின் கொள்கைகள் பெண்களின் வேலைவாய்ப்பு, பிற சுதந்​திரத்தைப் பெரிதும் குறைக்​கின்றன.

நிலநடுக்​கத்தால் பாதிக்​கப்பட்ட பகுதி​களுக்குத் தங்கள் பெண் ஊழியர்களை அனுப்பு​வதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என ஐ.நா.வும் பல அரசுசாரா நிறுவனங்​களும் மீண்டும் மீண்டும் கூறிக்​கொண்​டிருக்​கின்றன. தாலிபான் அரசோ தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஆப்கானிய சமூகங்​களில் பெண்கள் மட்டும்தான் வீடுகளுக்குள் நுழைந்து, அங்குள்ள பெண்களிடம் நேரடி​யாகப் பேசி விவரங்​களைத் தெரிந்து​கொள்ள முடியும். ஆண்கள் மட்டுமே அடங்கிய குழுக்கள் பெண்கள் இருக்கும் பகுதி​களுக்குள் நுழைய அனுமதிக்​கப்​படு​வ​தில்லை. எனவே, போதிய உதவிகள் சென்று சேர்​வதில் சிக்கல் நீடிக்​கிறது.

காபூலில் உள்ள ஐ.நா. அலுவலக வளாகத்​துக்குள் ஆப்கானிய மகளிர், ஒப்பந்​த​தா​ரர்களை நுழைய​ வி​டாமல் ஆப்கன் ராணுவம் சமீபத்தில் தடுத்​து​நிறுத்​தியது நினைவிருக்​கலாம். தட்பவெப்​பநிலையும் சதிசெய்​கிறது. இப்போது குளிர்​காலம் என்பதால் நிலநடுக்​கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடம் கிடைப்​ப​தாகத் தெரிய​வில்லை. இதனால்தான் காலத்​துக்கு எதிரான போட்டி (race against time) இது என்று ஐ.நா. கூறுகிறது.

செயற்​கைக்​கோள்​களின் மூலம் கிடைத்த தகவலின்படி 40,500 லாரிகள் அளவுக்கு இடிபாடு​களைச் சுமந்து நிற்கிறது ஆப்கன். அதை அகற்ற 140 மில்லியன் அமெரிக்க டாலராவது தேவை என்கிறது ஐ.நா. இந்தியாவும் தாலிபானைக் கொஞ்சம் சந்தேகத்​துடன் பார்க்​கிறது. காரணம், கடந்த காலத்தில் பாகிஸ்​தானுடன் நெருங்கிய உறவுகொண்​டிருந்தது தாலிபான் அமைப்பு. காஷ்மீர் பயங்கர​வாதத்​துக்கும் நீர் வார்த்​துக்
​கொண்​டிருந்தது.

தாஜிக் சமூகத்தைச் சேர்ந்த பலரும் ஆப்கானிஸ்​தானில் வசிக்​கிறார்கள். அவர்களை தாலிபான் அரசு எதிரி​யாகப் பார்ப்​பதால் தாஜிகிஸ்தான் அரசும் தாலிபானை வெளிப்​படையாக விமர்​சித்து​வரு​கிறது. அதேபோல, ஷியா பிரிவைச் சேர்ந்த ஹஸாராக்களை தாலிபான் அதிகம் ‘வேட்​டை​யாடு​வ​தால்’ ஈரானும் தாலிபானிடம் பகைமை பாராட்டு​கிறது.

ஆப்கானிஸ்​தானுக்கு உதவுமாறு அவசரநிலை வேண்டுகோள் ஒன்றைப் பல நாடுகளுக்கு ஐ.நா. விடுத்தது. கூடவே, ‘பல கொடையாளர்கள் மனதில் ஆப்கானிஸ்​தானின் தற்போதைய ஆட்சிக்கு உதவுவதில் ஒரு அயர்ச்சி ஏற்பட்​டிருக்​கிறது’ என்றும் கருத்து கூறியது. ஆக, வழக்கம் அல்லாத கோணங்​களிலும் ஆப்கானிஸ்​தானுக்கு இயற்கைப் பேரிடர் சோதனையை ஏற்படுத்​திவருகிறது.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT