சிறப்புக் கட்டுரைகள்

கடலை ஆக்கிரமிக்கும் ஞெகிழிக் குப்பை | சொல்... பொருள்... தெளிவு

ம.சுசித்ரா

2050க்குள் மீன்களைவிட அதிகமாக ஞெகிழியே கடலில் மிதக்கக்கூடும் அதிவேகமாக அதிகரித்துவரும் ஞெகிழி மாசு உலகளாவிய பெரும் சுற்றுச்சூழல் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. சூழலியல் தொகுதிகள், நிலைத்த வளர்ச்சி, மனித இனத்தின் சமூகப் பொருளாதார ஆரோக்கியப் பரிமாணங்கள் என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக்கூடிய தீவிரமான பிரச்சினை இது. பொருளாதாரச் சந்தைகளின் மோசமான வளர்ச்சியே ஞெகிழியின் மிதமிஞ்சிய பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்கிறது பொருளாதார ஒத்துழைப்பு - மேம்பாட்டுக்கான அமைப்பின் ‘உலகளாவிய ஞெகிழிக் கண்ணோட்டம்’ அறிக்கை.

குப்பைக் கிடங்​காகும் ஏழை நாடுகள்: கடந்த காலத்​துடன் ஒப்பிடு​கையில் 2000 - 2019 காலக்​கட்​டத்தில் ஞெகிழி உற்பத்தி இரட்டிப்​பானது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 46 கோடி டன் ஞெகிழிப் பொருள்கள் தயாரிக்​கப்பட்ட நிலையில், அவற்றி​லிருந்து வெளியேறிய கழிவின் அளவு மட்டும் 35.3 கோடி டன். ஞெகிழிப் பொருட்களில் மூன்றில் இரண்டு மடங்கு தயாரிக்​கப்​பட்ட ஐந்து ஆண்டு​களுக்குள் கழிவாகி​விடுபவை. பொருட்​களைச் சேமித்து​வைத்து விற்பனை செய்ய அல்லது விநியோகிப்ப​தற்கு ஏற்ப ‘பேக்​கேஜிங்’ செய்வதில் மட்டும் 40% ஞெகிழிக் கழிவு வெளியேற்றப்​படு​கிறது.

இது தவிர, நுகர்​பொருட்​களி​லிருந்து 12%, ஆடை - ஜவுளி உற்பத்​தி​களி​லிருந்து 11% ஞெகிழிக் குப்பை வெளியேற்​றப்​படு​கிறது. இவற்றில் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்​பப்​படு​கிறது. மீதமுள்ள ஞெகிழிக் கழிவில் 19% எரித்துச் சாம்பலாக்​கப்​படு​கிறது. 50% குப்பைக் கிடங்கு​களில் கொட்டப்​படு​கிறது.

இதைவிட மோசம் என்னவென்​றால், 22% ஞெகிழிக் குப்பைகள், மேலாண்மை அமைப்பு​களின் கண்காணிப்புக்​குள்ளேயே வருவதில்லை. புறம்​போக்கு நிலப்​பரப்பு​களில் கொட்டப்​படுவது, கேட்பாரற்ற பகுதிகளில் வைத்து எரிக்​கப்​படுவது அல்லது நீர்நிலைகளில் கொட்டப்​படுவது முதலிய சட்டவிரோதமான முறைகளில் அவை அப்பு​றப்​படுத்தப்​படு​கின்றன. முக்கியமாக, ஏழை நாடுகள் ஞெகிழிக் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்​படு​கின்றன.

ஞெகிழி மாசு தொடர்பான அரசுகளுக்கு இடையேயான பேச்சு​வார்த்தைக் குழு வெளியிட்ட ஆய்வு முடிவு​களின்படி, கடந்த 2024இல் மட்டும் 50 கோடி டன் ஞெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்​பட்டன அல்லது பயன்படுத்​தப்​பட்டன. அவற்றின் மூலம் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவு வெளியேற்​றப்​பட்டது. இந்தப் போக்கு தொடரு​மே​யா​னால், 2060​வாக்கில் ஞெகிழிக் குப்பையின் அளவு மும்மடங்காக அதிகரித்து, 120 கோடி டன்னாகப் பெருகி​விடும் அபாயம் உள்ளது.

அதிலும் ஆண்டுக்கு ஆண்டு 1 கோடியே 10 லட்சம் டன் ஞெகிழிக் கழிவு கடலில் கொட்டப்​பட்டு, கடற்பரப்பை ஆக்கிரமிக்​கின்றன. இதுபோக, கப்பல்கள், மீன்பிடித்தல் போன்ற​வற்றின் மூலமாகவே 20 கோடி டன் ஞெகிழிக் குப்பை கடலில் கலப்பது தெரிய​வந்துள்ளது. இப்படியே போனால், 2050க்குள் மீன்களைக் காட்டிலும் பன்மடங்கு ஞெகிழிக் குப்பை கடலில் மிதக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்​சூழல் திட்ட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்​துள்ளனர்.

காரணம் என்ன? - மட்காத குப்பை என்பதாலேயே ஞெகிழி தீவிரமான ஒரு சிக்கல். நாளடைவில் நுண்துகள்​களாகச் சிதையக்​கூடியது ஞெகிழி. இதனால் நுண்ணிய, நானோ அளவிலான ஞெகிழிக் கழிவு எவரெஸ்ட் சிகரம் தொட்டு ஆழ்கடல் வரை நீக்கமறப் புவி முழுவதையும் மாசுபடுத்தி​விடும் ஆபத்தைக் கொண்டிருக்​கிறது.

பசுங்குடில் வாயு வெளியேற்​றத்​துக்கு 3.4% காரணம் ஞெகிழியே. ஆண்டு​தோறும் கார்பன் பட்ஜெட்டுக்கு உலகளவில் ஒதுக்கீடு செய்யப்​படும் நிதியில் 19 சதவீதத்தை ஞெகிழி உற்பத்தி, பயன்பாடு / அகற்றலுக்கு 2040 வாக்கில் ஒதுக்க​ வேண்டிய நிலை வரும் என ஐ.நா. சுற்றுச்​சூழல் திட்டம் தெரிவித்​துள்ளது.

பின்விளைவுகள்: ஞெகிழி​யினுடைய வாழ்க்கைச் சுழற்​சியின் ஒவ்வொரு கட்டத்​திலும் பலவிதமான தாக்கங்களை அது ஏற்படுத்துகிறது. முதலா​வதாக, புற்றுநோய் விளைவிக்கும் காரணியான கார்சினோஜென்கள், நரம்பியல் நச்சுகள், நாளமில்லாச் சுரப்​பிகளைச் சீர்குலைக்கும் வேதிப்​பொருள்கள் முதலிய தீங்கு விளைவிக்​கக்​கூடிய ஆயிரக்​கணக்கான சேர்க்கைப் பொருள்​களின் கூட்டுக்​கலவையே ஞெகிழி. இத்தகைய நச்சுப்​பொருள்கள் நமது சுற்றுச்​சூழலை ஆக்கிரமித்து, மனித இனத்தையும் சூழலியலையும் ஆட்டிப்​படைத்துக் கொண்டிருக்​கின்றன. விலங்கு​களின் இனப்பெருக்க ஆற்றலையும் ஞெகிழி பாதிப்பதை ஆய்வுகள் உறுதிப்​படுத்​தி​யுள்ளன.

தீர்வு உண்டா? - ஐ.நா. சுற்றுச்​சூழல் திட்டத்தின் (2022) ஐந்தாவது பொது அவைக்​கூட்​டத்தில் ஞெகிழி மாசுக்கு முடிவு கட்டப்​படும் என்னும் உறுதிமொழி சட்டபூர்வமாக ஏற்கப்​பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்​றப்பட்ட சர்வதேச உடன்படிக்கை​யில், ஒருமனதாக 193 உறுப்பு நாடுகளும் கையெழுத்​திட்டன. காலநிலை மாற்றத்​துக்கான எதிர்​வினைகள், நிலையான நுகர்வு - உற்பத்தி, கடல்சார் பாதுகாப்பு, சூழலியல் தொகுதிகள், பல்லுயிர் மீட்பு உள்ளிட்ட ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இது வழிவகுக்கும் என நம்பப்​படு​கிறது.

அதேநேரம், அடுத்த இரண்டு தசாப்​தங்​களில் ஞெகிழிக் கழிவை 80% வரை குறைக்க வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகள் சுற்றுச்​சூழல் திட்டத்தின் மாபெரும் கனவு மெய்ப்படப் பல்லடுக்கு நடவடிக்கைகள் அவசியம்.

இதற்குச் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு, சீரிய செயல்​திட்​டங்கள், புத்தாக்க நடவடிக்கைகள், சிறப்பான மாற்றுப் பொருள்​களின் வடிவமைப்பு, சுற்றுச்​சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் உள்ளிட்டவை காலத்தின் கட்டாயம். இதுபோகக் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி செய்யப்​படும் விகிதமும் முறையும் மேம்படுத்​தப்பட வேண்டும்.

முதலா​வதாக, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஞெகிழியை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும். சட்ட விதிமுறை​களுக்கு உள்பட்ட ஞெகிழி உற்பத்திக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என அரசுகள் திட்ட​வட்டமாக முடிவெடுக்க வேண்டும். இன்றைய நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட ஞெகிழி 6% மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

ஆகையால், மறுசுழற்சித் தொழில்​நுட்​பத்தைச் செம்மைப்​படுத்தி, மறுசுழற்சி செய்யப்பட்ட ஞெகிழிக்கான சந்தையை லாபகர​மானதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஞெகிழியைக் கிடங்கு​களில் கொட்டு​பவர்​களுக்கு வரி விதிப்பது, ஞெகிழிக் குப்பையை வெளியேற்றும் தொழிற்​சாலைகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் மறுசுழற்சியை நோக்கி அவர்களை நகர்த்த வைக்கலாம்.

SCROLL FOR NEXT