சென்னை எண்ணூர் அருகே புதிய அனல் மின் நிலையங்களுக்கான கட்டுமானப் பணியில் விபத்து ஏற்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது, அவர்களின் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் இத்தகைய வளர்ச்சிப் பணிகள் குறித்த அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக்கூடும். அத்தகைய சூழல் ஏற்பட்டுவிடாமல் தடுப்பது அவசியம்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே வாயலூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி இதன் இலக்கு. புலம்பெயர் தொழிலாளர்களும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) மூலம் மேற்கொள்ளப்படும் இப்பணியில் பல்வேறு தனியார் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு நிலக்கரி சேமிப்புக்கிடங்கு கட்டும் பணியின்போது, செப்டம்பர் 30 அன்று மேற்கூரைக்கான சாரக்கட்டு சரிந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
அரசோ, தனியார் நிறுவனங்களோ மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாகவே இருப்பது தொடர்கதையாகவே நீடிக்கிறது. சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டுமானத் துறையில் ஒரு நாளைக்கு 10 மணி நேரமும், சேவைத் துறையில் 12 மணி நேரமும் வேலை செய்ய வைக்கப்படுவதாகத் தமிழக அரசின் திட்டக்குழு 2025 ஏப்ரலில் தெரிவித்தது. சென்னையில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் சராசரி மாத வருமானம் ரூ.15,902 எனவும் திட்டக்குழு கூறுகிறது.
கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய கட்டுமான விதிமுறைகளில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம் காட்டுவது, விபத்துக்கு வழிவகுத்ததைக் கடந்த காலத்தில் நிகழ்ந்த பல துயரங்கள் உணர்த்துகின்றன. கட்டுமானப் பணியின்போது அதிக உயரமான இடத்தில் இருந்து வேலை செய்வதற்கும் சாரக்கட்டு அமைத்து வேலை செய்வதற்கும் பிரத்யேக வழிகாட்டுதல்கள் மத்திய அரசின் ‘கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996’இல் வழங்கப்பட்டுள்ளன.
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள விபத்தைப் பொறுத்தவரை, அதிக உயரத்தில் அமைந்த சாரக்கட்டில் ஒரே நேரத்தில் ஏழெட்டுப் பேர் ஏற அனுமதிக்கப்படுகிற அலட்சியம் நிகழ்ந்ததா, தொழிலாளர்கள் கீழே விழ நேர்ந்தாலும் அவர்களைக் கயிற்றில் இணைக்கிற பாதுகாப்புக் கச்சைகள் அளிக்கப்பட்டனவா, அவர்களைத் தாங்கிப் பிடிக்கப் பாதுகாப்பு வலை கட்டப்பட்டிருந்ததா என்பன போன்றவை உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அமைப்புசாராத் தொழிலாளர் உரிமை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடாக மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும் தமிழக அரசு தலா ரூ.10 லட்சமும் அறிவித்துள்ளன. காயமடைந்தவருக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு மிகக் குறைவான தொகை என்கிற விமர்சனங்கள் ஒலிக்கின்றன. தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர், திட்ட மேலாளர் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இத்தகைய நிவாரண நடவடிக்கைகள் தற்காலிகத் தீர்வுகளே. விபத்துக்கான காரணிகள் கண்டறியப்பட்டு இனிவரும் காலத்தில் அனைத்துப் பணியிடங்களிலும் அவை களையப்படுவதுதான் உண்மையான தீர்வாக இருக்கும்.