சிறப்புக் கட்டுரைகள்

ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல்: விரைவான தீர்வு தேவை

சு.மூர்த்தி

செப்டம்பர் 1, 2025ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் அமர்வு அளித்த தீர்ப்பு, அனைத்து மாநிலங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் இருப்பதை அனுமதிக்க முடியாது; ஐந்து ஆண்டு​களுக்குக் குறைவான பணிக்​காலம் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம்’ எனப் பல கட்டுப்​பாடுகள் தீர்ப்பில் உள்ளன.

ஓர் ஆசிரியரின் பணிக்கால அளவை (length of service) ஆசிரியர் பணியைத் தொடர்​வதற்கும் பதவிஉயர்வு பெறுவதற்கும் உரிய தகுதியாக ஏற்றுக்​கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் சொல்லப்​பட்​டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வுகள் / சம்பள உயர்வுகள், பணிக்​காலம் அல்லது பணி மூப்பு (seniority) அடிப்​படைக்கு மாறாகப் பணி மதிப்​பீட்டின் அடிப்​படையில் மட்டுமே பின்பற்​றப்​படும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020இல் கூறப்​பட்​டுள்ளதை இத்தீர்ப்பு வழிமொழிந்துள்ளது.

தொழில்முறை நெறிகளுக்கு எதிரானது: கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டு​களுக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்​பட்​டிருக்​கிறது. இந்நிலை​யில், ஆசிரியர் இயக்கங்கள் முன்வைக்கும் தீர்ப்பு மறுசீ​ராய்​வுக்கான சட்டப்​படியான நியாயங்​களைப் பொதுச் சமூகம் பகுப்​பாய்வு செய்வது அவசியம். ஒருவர் ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதி​களுடன் நியமனம் பெற்று 20 அல்லது 30 ஆண்டு​களுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருந்​தா​லும், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் நீடிக்க முடியாத நிலை இத்தீர்ப்​பினால் ஏற்பட்​டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியை அனைத்து ஆசிரியர்​களின் பதவி உயர்வுக்கான கட்டாயத் தகுதி​களில் ஒன்றாக எடுத்​துக்​கொள்வது ஆசிரியர் பணிக்கான தொழில் நெறிக்குப் (Professional Ethics) பொருந்துவதாக அமையவில்லை. 25 ஆண்டு​களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்​களும் இரண்டு ஆண்டு​களுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், ஆசிரியர்​களின் கற்பித்தல் பணிகளில் பாதிப்புகள் உருவாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏழு ஆண்டு​களுக்கு மட்டும் செல்லுபடி​யாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) பிப்ரவரி 11, 2011ஆம் நாள் வெளியிட்ட வழிகாட்டு​தலில் அறிவிக்​கப்​பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்​களின் வேலைவாய்ப்பைக் கவனத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சி வாழ்நாள் முழுவதும் செல்லத்​தக்கது என்கிற நீட்டிப்பு பத்தாண்​டு​களுக்குப் பின்னர் முன்தே​தி​யிட்டு வழங்கப்​பட்டது.

எனவே, தர்க்க நியாயங்​களின் அடிப்​படையில் பார்க்​கும்போது 25 ஆண்டு​களுக்கு மேல் உரிய கல்வித் தகுதி​களுடன் பணியில் உள்ள ஆசிரியர்​களுக்கும் பதவி உயர்வுக்கான தகுதி​களில் ஒன்றாக ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியைக் கட்டாயப்​படுத்துவது இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது.

கவனிக்​கப்படாத அம்சங்கள்: 2010 ஏப்ரல் 1 அன்று கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, மத்திய அரசின் அறிவிப்​பின்படி தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) ஆசிரியர் பணி நியமனத்​துக்கான குறைந்த​பட்சத் தகுதி​களைச் சட்டத்தின் பிரிவு 23 (1)இன் அடிப்​படையில் 2010 ஆகஸ்ட் 23இல் அறிவித்தது. இந்த அறிவிப்பாணை மூலம் ஆசிரியர் பணி நியமனத்​துக்கான குறைந்த​பட்சத் தகுதி​களில் ஒன்றாக, ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியும் புதிதாகச் சேர்க்​கப்​பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பாணை வெளியிடப்​படும் நாளுக்கு முன்னர் உரிய கல்வித் தகுதி​களுடன் பணியில் நியமிக்​கப்​பட்​டுள்ள ஆசிரியர்கள் எவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறத் தேவையில்லை என்று அறிவிப்​பாணையில் சொல்லப்​பட்டது. தற்போதுவரை இதில் எந்தத் திருத்​தமும் செய்யப்​பட​வில்லை. கல்வி அதிகார அமைப்பு ஆசிரியர்​களுக்கு வழங்கி​யுள்ள சட்டப்​படியான பணிப் பாதுகாப்பை உச்ச நீதிமன்ற அமர்வு ஆய்வுக்கு எடுத்​துக்​கொள்ள​வில்லை.

தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு வகுத்​துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விலக்​கு அளிக்​கப்பட்ட விதிகளுக்கு இத்தீர்ப்பு முரணாக உள்ளது. எனவே, தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு சார்பிலும் நீதிமன்​றத்தில் மறுசீ​ராய்வு மனு முன்வைக்​கப்பட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளுக்கு முன்னர் கல்வி அதிகார அமைப்பு வகுத்த குறைந்தபட்சத் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்றவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று இன்றுவரை தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பும் மத்திய, மாநிலக் கல்வித் துறைகளும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கவில்லை.

ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கல்வித் தகுதித் தளர்வு நீட்டிப்புக்காக 2017 கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவசியமில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கும் நிபந்தனை இடம்பெறவில்லை என்பதையும் நீதிமன்றத்தின் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

விரைவான தீர்வு அவசியம்: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், ஆசிரியர் நியமனத்​துக்காக உருவாக்​கப்​பட்​டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பணியில் நியமிக்​கப்பட்ட ஆசிரியர்​களும் பதவி உயர்வுக்கு இதே தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது முரணானது.

ஆசிரியர் இயக்கங்கள் மட்டுமல்​லாமல், தமிழ்நாடு அரசு உள்ளிட்ட வேறு சில மாநில அரசுகளும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து சட்டப்​படியான விலக்கு அளிக்​கப்பட்ட ஆசிரியர்​களின் பணிப் பாதுகாப்பை உறுதி​ செய்ய, தீர்ப்பை மறு சீராய்வு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்​டுள்ளன. நீதிமன்​றத்தின் மூலம் விரைவான தீர்வு கிடைப்பதே ஆசிரியர் சமூகத்​துக்கு ஏற்பட்​டுள்ள நெருக்​கடிகள் நீங்கு​வதற்கும் ஆரோக்​கியமான கல்விச் சூழலுக்கும் வழிவகுக்​கும்.

- தொடர்புக்கு: moorthy.teach@gmail.com

SCROLL FOR NEXT