தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அண்மையில் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவில் பதிவான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 7.2% அதிகரித்திருப்பது, தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், சிறார், பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்பட்ட தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டுவருகிறது. அண்மையில் வெளியான அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2023இல் 62,41,569 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 37,63,102 குற்றங்களும், சிறப்புச் சட்டம் - உள்ளூர்ச் சட்டங்களின் கீழ் 24,78,467 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
இதில் தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 4.5 லட்சம். சராசரியாக 77.6% குற்றங்கள் மட்டுமே சட்டத்தின் பார்வைக்கு வருகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதில் 2021, 2022 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 0.7% அதிகரித்திருக்கிறது. அதிலும் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 66,381 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானவை கணவர் அல்லது உறவினர்கள் இழைத்த கொடுமைகள் தொடர்பானவை. வரதட்சிணைக் கொடுமை மரணங்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 6,156 ஆகப் பதிவாகி இருப்பது நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில் தீவிர கவனம் கோரும் விஷயம்.
பாலியல் வன்கொடுமை சார்ந்த குற்றங்களில் பிற மாநிலங்களைக் காட்டிலும் குறைவான விழுக்காட்டையே தமிழ்நாடு பெற்றுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டிலும் 365 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2022இல் 6,580லிருந்து 2023இல் 6,968ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தலைநகர் சென்னையில் மட்டும், சிறாருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் எண்ணிக்கை 514லிருந்து 573ஆக அதிகரித்திருக்கின்றது. அது மட்டுமின்றிப் பட்டியல் சாதிகள் - பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1,921 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.1% கூடுதல். 2019லிருந்து 2023வரை பதிவான வழக்குகளைக் கணக்கிட்டால் 68% அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் செய்தியாகும். பெண்கள், சிறார், முதியோர், பட்டியல் சாதியினர் - பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான கொலைக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், ஊழல் குற்றங்கள், விபத்துகள் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான குற்றங்கள் தமிழ்நாட்டில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதைப் பிற மாநிலங்களுடனான ஒப்பிடும்போது உணர முடிகிறது. இருந்தபோதும், முன்னேறிய மாநிலமாக அடையாளப்படுத்திக்கொள்ள முயலும் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள், பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் இன்றளவும் நிகழ்வது பெருங்கொடுமை. இதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட வேண்டும்.