சிறப்புக் கட்டுரைகள்

ரோபாட்டிக் சிகிச்சை தரும் நம்பிக்கை ஒளி!

கு.கணேசன்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள பிரீத்தி சிறுநீரகச் சிறப்புச் சிகிச்சை மருத்துவமனையில், 16 மாதக் குழந்தை அவசரச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குச் சிறுநீரை வடிக்கும் ‘சிறுநீர் வடிகுழாய்’ (Ureter) பிறவியிலேயே அடைத்துக்கொண்டிருந்தது. சிறுநீர் பிரிய வழியில்லாமல் சிறுநீரகம் வீங்கியிருந்தது.

அதனால், அந்தக் குழந்தை ஆபத்தான நிலைமையில் இருந்தது. உடனடியாக அந்த அடைப்பை அகற்ற வேண்டிய கட்டாயச் சூழல். மேலும், மற்றவர்​களுக்கு ஏற்படுகிற மாதிரி இல்லாமல் அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்தை ஒட்டிய சில அமைப்புகள் மாறியிருந்தன. ஆகவே, வழக்கமான அறுவைச்சிகிச்​சையில் அந்தக் குழந்​தையின் சிக்கலைத் தீர்க்க முடியாது; சிகிச்​சையில் சில துல்லி​யங்கள் தேவைப்​பட்டன.

துல்லியமான, அவசரநிலை அறுவைச்சிகிச்சைக்கு நவீன மருத்​துவம் கொடுத்​துள்ள கொடை ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ (Robotic Telesurgery). இந்தியா​விலேயே ‘ரோபாட்டிக் டெலிசர்​ஜரி’யில் முன்னோடி​யாகத் திகழும் மருத்​துவர் சந்திரமோகன் வாடி அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முன்வந்​தார்.

சிகிச்சைக்கு ஹைதரா​பாத்தில் இருந்து 1,550 கி.மீ. தொலைவில் உள்ள குருகிராம் மருத்​துவ​மனையின் மிக நவீன ரோபாட்டிக் இயந்திரத்தைப் (Mantra 3 surgical robotic system) பயன்படுத்த முடிவுசெய்​தார். இது இந்தியா​விலேயே தயாரிக்​கப்பட்ட ரோபாட்டிக் இயந்திரம்.

‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ என்பது என்ன? - அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் ரோபாட் இயந்திரத்தின் கைகளை இயக்கி மேற்கொள்​ளப்​படும் சிகிச்சைக்கு ‘ரோபாட்டிக் அறுவைச்சிகிச்சை’ (Robotic surgery) என்று பெயர். பயனாளிக்கு அருகில் ரோபாட் இயந்திரம் இருக்​கும். மற்றொரு இயந்திரத்​திலிருந்து அறுவைச்சிகிச்சை வல்லுநர் அதை இயக்கு​வார். மருத்​துவரின் கைகளுக்குப் பதிலாக ரோபாட் இயந்திரத்தின் கைகள் அறுவைச்சிகிச்சையை மேற்கொள்​ளும்.

சிகிச்​சை​யின்போது உடலில் கீறப்​படுகிற அளவு குறைவாக இருக்​கும். மிகச் சிறிய உறுப்பு​களில்கூட மிகத் துல்லியமாக அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, பாதிப்புள்ள உறுப்​புக்கு அருகில் இருக்கிற உறுப்பு​களைத் தொடாமல் மேற்கொள்​ளப்​படும் அறுவைச்சிகிச்சை இது. ரத்த இழப்பு அவ்வளவாக இருக்​காது. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு வலியும் குறைவாக இருக்​கும். தழும்பு தெரியாது. அதிக நாள்களுக்கு மருத்​துவ​மனையில் தங்க வேண்டி​யிருக்​காது.

அடுத்து, ‘டெலிசர்ஜரி’ என்பது தொலைதூர அறுவைச்சிகிச்சை. வழக்கத்தில் அறுவைச்சிகிச்சை வல்லுநர் ரோபாடிக் இயந்திரத்தைப் பயனாளியின் அருகில் இருந்து இயக்கு​வார். அப்படி​யில்​லாமல், அந்த இயந்திரத்தைத் தொலைதூரத்தில் இருக்கிற ஒரு ரோபாட்டிக் கட்டுப்பாடு மையத்தில் (Robotic console) இருந்து​கொண்டு அவர் இயக்கு​வார். Digital control and Teleoperation என்னும் செயல்​முறையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்​ளப்​படு​கிறது.

ஆழ்கடல் ஆய்வுக்குப் பயன்படுத்​தப்​படும் தொழில்​நுட்​பத்தின் மூலம் இது வேலை செய்கிறது. இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட அறுவைச்சிகிச்சைகள் இந்த முறையில் மேற்கொள்​ளப்​பட்​டிருக்​கின்றன. ஆனாலும், மேற்கண்ட சிகிச்சை தனித்து​வ​மானது. உலகிலேயே முதன்​முறையாக ‘ரோபாட்டிக் டெலிசர்​ஜரி’யில் குழந்தைக்கு மிகவும் குறுகிய இடத்தில் இருந்த சிறுநீரக வடிகுழாய் அடைப்பை அவர் நீக்கி​யுள்​ளார். இது உலக மருத்துவ வரலாற்றில் இடம்பிடித்து, இந்தியா​வுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

சிகிச்சை செயல்முறை என்ன? - பிரீத்தி மருத்​துவமனை மருத்​துவர்கள் ரோபாட்டிக் இயந்திரத்தின் கைகளையும் கேமராவையும் அறுவைச்சிகிச்சைக்குத் தயாராக இருந்த குழந்​தையின் வயிற்றில் துளை போட்டுப் பொருத்​தினர். இந்த இயந்திரத்தை 5ஜி இணைய இணைப்பின் உதவியுடன் குருகிராம் மருத்​துவ​மனையின் ரோபாட்டிக் கட்டுப்​பாட்டு மைய இயந்திரத்தோடு இணைத்து​விட்​டனர். அங்கு இருந்த மானிட்​டரில் குழந்​தையின் சிறுநீரகப் பகுதிகள் முப்பரிமாண (3டி) படங்களாக மிகப் பெரிய அளவில் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

அவற்றைத் திரையில் பார்த்​துக்​கொண்டே குழந்​தையின் சிறுநீர் வடிகுழாயைப் பிரிக்​க​வும், அடைப்பை அகற்ற​வும், ஆரோக்​கியமாக இருந்த வடிகுழாயைச் சிறுநீரகத்​துடன் இணைக்​கவும் ரோபாட்டிக் இயந்திர ரிமோட் மூலம் பிரீத்தி மருத்​துவ​மனையில் இருந்த ரோபாட்டிக் இயந்திரத்தின் கைகளுக்கு ஆணைகளாகப் பிறப்​பிக்க, அதன்படி அந்த இயந்திரம் செயல்​பட்டுச் சிகிச்சையை (Robotic pyeloplasty) வெற்றிகரமாக முடித்தது. குழந்​தையின் சிறுநீரகம் சிறுநீரை வடித்துச் சிறுநீரகப்​பைக்கு அனுப்பத் தொடங்​கியது. குழந்​தையின் வயிற்றில் போடப்பட்ட துளையைப் பிரீத்தி மருத்​துவமனை மருத்​துவர்கள் தையலிட்டு மூடிவிட்டனர். குழந்தை நலம்பெற்றது.

உலக அரங்கில் இந்தியா: பொதுவாக, குழந்தை​களுக்கான சிக்கலான அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஒப்பற்ற துல்லி​யங்கள் தேவைப்​படு​கின்றன. அதற்கு ரோபாட்டிக் அறுவைச்சிகிச்சை பயன்படு​கிறது. ஹைதரா​பாத்தில் அனுமதிக்​கப்பட்ட குழந்​தைபோல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்​ளப்பட வேண்டிய அவசர நிலைகளில் பயனாளியை இடம் மாற்றுவது அல்லது மருத்​துவரைப் பயனாளி இருக்கிற இடத்துக்கு வரவழைப்பது காலதாமதத்தை உருவாக்கி ஆபத்தை அதிகப்​படுத்​தி​விடலாம். இந்தத் தடையை ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ அகற்றி​யுள்ளது.

மேலும், குழந்தைகள் அறுவைச்சிகிச்சை​களைத் தொலைவிலிருந்து மேற்கொள்ளும் திறனையும் உள்நாட்டின் ரோபாட்டிக் அமைப்புகள், இணைப்பு உள்கட்​டமைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்​டுள்ள மிகப் பெரிய முன்னேற்​றங்​களையும் இது வெளிப்​படுத்​தி​யிருக்​கிறது. இந்தியா எவ்வாறு மருத்​துவப் புதுமைகளை உருவாக்கு​கிறது என்பதற்கான சான்றாகவும் இது திகழ்​கிறது.

சுடர்​விடும் நம்பிக்கை: பெண்களுக்கான அறுவைச்சிகிச்சைகள், இதய அறுவைச்சிகிச்சைகள், பல்வேறு வயிற்று உறுப்புகள், புற்றுநோய் போன்ற​வற்றுக்கான அறுவைச்சிகிச்சை​களையும் ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ மூலம் மேற்கொள்ள முடியும். உடல் உறுப்பு​களில் அமைப்பு மாறுதல் இருக்​கிற​போதும், சில சிக்கலான அறுவைச்சிகிச்சை​களின்​போதும் கத்தியால் கீறி மேற்கொள்​ளப்​படும் வழக்கமான சிகிச்சை​களுக்கு மருத்​துவர்களே யோசிப்​பார்கள். இத்தகைய இடையூறுகளை இந்த நவீன சிகிச்சை முறை தகர்த்​தெறிந்து மருத்​துவர்​களுக்குமே நம்பிக்கை அளித்​திருக்​கிறது.

தொழில்​நுட்ப ரீதியில் இது இன்னும் மேம்படும்​போது, குறுகிய அளவிலான ரோபாட்டிக் கருவிகள் உருவாக்​கப்​படும். இரண்டாம் நிலை மருத்​துவ​மனை​களிலும் இந்த மேம்பட்ட வசதி கிடைக்​கும். சிறப்பு மருத்​துவர்களை மெய்நிகர் வடிவில் (Virtual) இந்த மருத்​துவ​மனை​களுக்குக் கொண்டுவர முடியும். சிறப்புச் சிகிச்சை​களுக்கான மருத்​துவப் பணியாளர் பற்றாக்குறை நீங்கும்.

மேம்பட்ட சிகிச்சை​களுக்காக வரும் வெளிநாட்டுப் பயனாளி​களுக்கு விசா, போக்கு​வரத்து போன்ற​வற்றில் ஏற்படுகிற பயணத் தடைகள் விலகும். அந்தந்த நாடுகளில் இருந்து​கொண்டே சிகிச்சை​களைப் பெற்றுக்​கொள்ள முடியும். இதன் மூலம் உள்நாட்டின் பொருளா​தாரம் மேம்படும்.

இனிமேல், சிறப்பு மருத்​துவர்களை நோக்கிப் பயனாளிகள் பயணப்​படுவது குறையும். மேம்பட்ட மருத்​துவப் படிப்பைப் படித்த மருத்​துவர்​களும் அனுபவம் கூடிய மருத்​துவர்​களும் தொலைவில் இருந்​தாலும் அவர்களுடைய மருத்​துவத் திறன் எங்கு இருக்கிற பயனாளிக்கும் உடனடி​யாகப் பயன்படும். ஏழைக் குழந்தை​களுக்​கும்​கூடச் சிக்கலான அறுவைச்சிகிச்சைகள் எளிதில் கிடைக்கச் செய்து, உலகத் தரமுள்ள சுகாதாரம் அனைவருக்கும் சமமாக வழங்கவும் வாய்ப்பு உருவாகும்!

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT