லைட்டை ஆஃப் பண்ணி, டோரை லாக் பண்ணி, பைக்கை ஸ்டார்ட் பண்ணி, ஸ்பாட்டை ரீச் பண்ணி, கெஸ்ட்டை மீட் பண்ணி, இப்படியே பண்ணிப் பண்ணித் தமிழர்கள் தற்காலத் தமிழை ‘பண்ணி’ மொழி ஆக்கிவிட்டதாகச் சற்று முந்தைய மேடைகளில் பேசப்பட்ட பேச்சு, விரவலான பேச்சு. நல்லது; தமிழ் ‘பண்ணி’ மொழிதான். தற்காலத் தமிழ் மட்டுமல்லாது, முற்காலத் தமிழும்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்புஎன்ன நின்ற நெடுமாலே... - (திருப்பாவை 25)
என்று திருமாலைப் பாடுகிறாள் ஆண்டாள். நெடுமாலே, உன்னைப் பெறும் பேறுபெற்ற ஒருத்தியான தேவகியின் மகனாய்ப் பிறந்தாய்; பிறந்த அன்று இரவே உன்னைத் தூக்கிப்போய் நந்தகோபனிடம் ஒப்படைக்க, உன்னை வளர்க்கும் பேறுபெற்ற ஒருத்தியான யசோதையின் மகனாக வளர்ந்தாய்.
உன்னை மறைத்து வளர்க்கத் தலைப்பட்டதனால், மாடுகள் வீடு அடையும் அந்தி மாலையில் நீ வெளியில் நின்றால், ‘வானவெளித் தெய்வங்கள் பார்த்துவிடும், உள்ளே வா’ என்றார்கள். மாடு மேய்க்கப் போனால், ‘அசுரர்கள் பார்த்துவிடுவார்கள், போகாதே, வா’ என்றார்கள். கன்று விரட்டிப் போனால், ‘போகாதே, வேண்டியதைச் செய்துகொண்டு வீட்டிலேயே இரு’ என்றார்கள்.
நீ யாருக்கும் வெளிப்பட்டுவிடாதபடி உன்னைப் பதுக்கி வைக்கப் பல்வேறு முயற்சிகள் செய்தார்கள். ஆனால், எங்கள் சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே, கூடையைக் கவிழ்த்து உன்னை மறைத்துவிட முடியுமா? உன் இருப்பைத் தெரிந்துகொண்ட கம்சன், தீங்கினால் உன்னை ஒழித்துவிட்டுப் பின் ‘ஐயோ மருமகனே, போனாயே’ என்று பொய்யழுகை அழுது சமாளித்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவன் கருத்தைப் பொய்யாக்கி, அவன் வயிற்றில் நெருப்பாக வளர்ந்து நின்றாய். தேவகி வயிற்றின் இருப்பே, கம்சன் வயிற்றில் நெருப்பே, நெடுமாலே! - என்று ஆண்டாள் இதைப் பாடும் அழகு ஒன்று என்றால், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் அதற்கு உரைகூட்டும் அழகு இன்னொன்று.
எப்படி வந்தது? - அது இருக்க, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் நிறைவேற்றத்துக்காக விண்ணிலிருந்து இறங்கி, ஒருத்தி மகனாகப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாக வளர்ந்து, நெருப்பென நின்ற நெடுமாலைப் போலச் சடுதியில் பிறந்து, சடுதியில் வளர்ந்த மொழி இல்லை தமிழ்.
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் அன்பொடு நித்தம் வளர்த்தார் (பாரதியார் பாடல்கள், ‘தமிழ்த் தாய்’)
- என்று தமிழின் பிறப்பையும் வளர்ப்பையும் குறித்து பாரதி பாடுகிறான். தொன்மங்கள் வழியாகத் தமிழ் மொழிக்குத் தெய்வத்தன்மை ஏற்றும் கருத்தில் பாரதி அப்படிப் பாடியிருக்கலாம்.
மொழிக் கருதுகோள்: மொழி என்பது ஒருவர், இருவரால் உருவாக்கப்படுவது இல்லை. பலரும் பண்ணிப் பண்ணி வைத்ததால் வருவது. ஒலி எழுப்பி, ஒலியைச் சொல்லாக்கி, கருத்தாக்கி, அதன்வழித் திட்டமாகச் சமைத்த அறிவை எல்லோருக்கும் பரிமாறுவது. உடனடி உருவாக்கம் இல்லை.
சிகெரு மியகாவா (Shigeru Miyagawa) என்னும் அமெரிக்க, மசாசூசெட்ஸ் நுட்பியல் நிறுவன, மொழியியல்-மெய்யியல் பேராசிரியர் மொழியின் தோற்றம் குறித்து ‘ஒருங்கிணைப்புக் கருதுகோள்’ (Integration Hypothesis) என்று ஒன்றை முன்வைக்கிறார். அதன்படி, மனித மூதாதைகளின் தொடர்பாடலில் இரண்டு முறைகள் இருந்திருக்கக்கூடும்.
பிற விலங்குகளால் கெடுதல் வரும் காலத்தில் ‘சிறுத்தை’, ‘பாம்பு’, ‘தீ’ என்று எச்சரிக்கைக்காக எழுப்பும் தனிக் குறிப்பு ஒலிகள் ஒன்று. உணர்வைக் கடத்துவதற்காகப் பறவையின் பாட்டைப் போல எழுப்பும் வெளிப்பாட்டு ஒலிகள் மற்றொன்று.
இந்தத் தனிச் சொற்குறிப்பு முறையும் இசைந்தெழுந்த உணர்வுக் குறிப்பு முறையும் ஒருங்கிணையும்போது மொழி தோன்றியிருக்கலாம் என்பதும், இந்த வகையில் மொழிகள் தொடங்கியது 1,35,000 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்பதும், அவற்றின் பயன்பாடு சமூகப் பயன்பாடாக ஆனது 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்பதும் சிகெரு மியகாவாவின் கருதுகோள்.
பண்படுத்தும் சொல் அல்லவா? - ஏதாக இருந்தாலும், மொழி பலரும் பண்ணி வந்ததுதான். பண்ணுதல் என்பதற்கு இன்றைய தமிழில் ஒரே பொருள்: ஏதோ ஒன்றைச் செய்தல். அந்த ஒரே பொருளில்தான் ஆங்கிலத்தோடு கொஞ்சம்போலத் தமிழை ஒட்டிப் பல்வேறு தொடர்களைப் பண்ணி கம்யூனிகேட் பண்ணுகிறார்கள்; கன்வே பண்ணுகிறார்கள்; தமிழை அலங்கோலம் பண்ணுகிறார்கள். பண்ணுதல் என்பதற்குச் செய்தல் என்பது மட்டுமே பொருள் அல்ல. திருத்தல், சீராக்கல், செம்மையாக்கல் என்றெல்லாமும் பொருள். பண்ணுதல் என்பது பண்படுத்தல்.
வேளாண்மை பண்ணுவது என்பது வெறும் வினை அல்ல; அது காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலம் திருத்தல். பண்ணிசை என்பது செம்மையாக்கம் செய்யப்பட்ட இசை. ‘பண்ணார்ந்த மொழி மங்கை பங்கா’ என்று திருவேசறவில் மாணிக்கவாசகர் பாடும்போது குறிப்பது, நீர்மையும் சீர்மையும் நிறைந்த மொழியை, இசைக் குறிப்பைப் போலப் பேசுகிற தன்மையை.
நன்கு பண்ணப்பட்ட இனிப்புப் பண்டம் பண்ணிகாரம் எனும் பணியாரம். நன்கு பண்ணப்பட்ட நிலம் பண்ணை. கருத்தியல் நிலையில் நன்கு பண்ணப்பட்டுச் செம்மையாக்கித் தனிமுதல் நிலைக்கு உயர்த்தப்பட்டவர் பண்ணவர்; அதாவது இறைவன். அதற்குப் பெண்பால் பண்ணவி; அதாவது இறைவி. ஆகவே, தமிழ் பண்ணி மொழிதான். மனிதர்கள் பண்ணி வைத்த மொழி. தமிழர்களைப் பண்ணி வைக்கும் மொழி.
மேற்சொன்ன திருப்பாவைப் பாட்டின் இறுதியில் ஆண்டாள் நெடுமாலை வேண்டுகிறாள்: ‘எப்படியோ பிறந்தாய், எப்படியோ வளர்ந்தாய், கம்சனைக் கொளுத்தும் நெருப்பாக நின்றாய். இவ்வளவும் செய்த உன்னிடத்தில் உன்னையே வேண்டி வந்தோம். கொடு, போதும்.’ ஆண்டாள் நெருப்பென்ன நின்ற நெடுமாலுக்குப் பாடியதையே தமிழுக்கும் பாடலாம்.
- தொடர்புக்கு: arumugatamilan@gmail.com