தலையங்கம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு: வரவேற்கத்தக்க மாற்றம்

செய்திப்பிரிவு

வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியான தரவுகள் பதிவு செய்யப்படும் என ஏப்ரல் 30இல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பல தரப்பினரின் நெடுங்காலக் கோரிக்கையாக இருந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

ஒருவரின் வயது, பாலினம், ஊர், மதம், மொழி, தொழில், வருமானம் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுசெய்யப்படுகின்றன. சமூக, பண்பாட்டு, பொருளாதார நோக்கில் இந்தியாவைப் புரிந்துகொள்ள ஆங்கிலேயர்களுக்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பயன்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னரும், இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக ஆனது.

1881-1931 வரைக்கும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் அனைத்துச் சாதிகள் குறித்த தகவல்களும் அடையாளம் கண்டு பதிவுசெய்யப்பட்டன. விடுதலை பெற்ற இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பிலிருந்தே (1951) பட்டியல் சாதி, பழங்குடி தவிர மற்ற சாதிகள் குறித்த தகவல்கள் தவிர்க்கப்பட்டன. கடைசியாக, 2011இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு, ‘சமூகப் பொருளாதார ஆய்வு’ நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அறிக்கைக்கு ஏற்ப அரசு இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதும், அரசின் மீது குறிப்பிட்ட பிரிவினர் அதிருப்தி அடையச் சாத்தியம் இருப்பதுமே ஆளுங்கட்சிகள் இதைத் தவிர்த்ததற்குக் காரணமாக இருக்க முடியும். இன்னொரு புறம், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுவடைந்துகொண்டே வந்திருக்கிறது. 2015இல் காங்கிரஸ் அரசு கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொண்டாலும், அறிக்கை வெளியாவதற்குக் கர்நாடக மக்கள் 2025வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஐக்கிய ஜனதா தளம் - ஆர்ஜேடி - காங்கிரஸின் கூட்டணி ஆட்சியின்கீழ் 2023இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியதன்மூலம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, முடிவுகளை வெளியிட்ட முதல் மாநிலமாக பிஹார் ஆனது. தெலங்கானாவிலும் காங்கிரஸ் அரசால் சாதிவாரிக் கணக்கெடுப்பு 2024இல் நடத்தப்பட்டுள்ளது. அறிக்கை முடிவுகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோரின் தற்போதைய எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அங்கே உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய அளவிலோ, மாநில அளவிலோ சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை எனத் தமிழ்நாட்டிலும் கோரிக்கைகள் தொடர்ந்து ஒலிக்கின்றன.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்குவது அனைத்துச் சாதியினருக்கும் பாரபட்சமின்றிப் பலனளிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவு அவசியமானது. தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனப் பல்வேறு சாதியினர் முறையிட்டு வருகின்றனர்.

மக்கள்தொகையில் அவர்களின் விகிதம் உண்மையில் எவ்வளவு என்பது தெளிவாக அறியப்படாத நிலையே தொடர்கிறது. முக்கியமான துறைகளில் கோரிக்கைகளும் விவாதங்களும் யூகங்களின் அடிப்படையில் நிகழும் குழப்பமான நிலைக்கு, பாஜக அரசின் இந்த முன்னெடுப்பு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும்.

இன்னொருபுறம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என 2021இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாஜக அரசு, தற்போது நடத்தப்போவதாக அறிவித்திருப்பதன் பின்னணியில், விரைவில் நடைபெறவிருக்கும் பிஹார் சட்டமன்றத் தேர்தல் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மத்தியிலும் மாநிலங்களிலும் பொறுப்பு வகிக்கும் கட்சிகள் மேற்கொள்ளும் பெரும்பாலான நடவடிக்கைகள் தேர்தல் அரசியல் கணக்குகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த நடவடிக்கைகள் மக்களுக்குப் பலன் அளிக்கின்றனவா என்பதே அரசுக்கு நிலையான ஆதரவைப் பெற்றுத்தரும். சாதிவாரிக் கணக்கெடுப்பை அறிவித்துள்ளதோடு, அதற்கு அனைத்துத் தரப்பினரையும் தயார்ப்படுத்துவதிலும் கணக்கெடுப்பை நேர்த்தியாகச் செய்து முடிப்பதிலும் மத்திய அரசு தன் பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT