கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள் தொய்வின்றிச் செயல்படுத்தப்பட்டுவருவதாகச் சட்டமன்றத்தில் தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வரும் கல்வி ஆண்டுக்கான பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி இரண்டிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், தமிழகத் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை என அமைச்சர் தெரிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் கலைத் திட்டம், பாடத்திட்டம், பாட நூல்கள் மாற்றியமைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் காலத்துக்கேற்ற முன்னெடுப்புகள். பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல், 6 முதல் 8ஆம் வகுப்பு வரைக்குமான மாணவர்களின் கணிதம், ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த ‘திறன்’ என்கிற முனைப்பு இயக்கம் தொடங்குதல், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஏற்ற விளையாட்டுக் கருவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறன்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல், சுகாதாரப் பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொலைதூரக் கிராமங்கள் - மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
நாடு விடுதலை பெற்ற பிறகு 1950 முதல் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி சீரான வளர்ச்சி பெற்றுவருகிறது. தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி, இலவச சைக்கிள், மடிக்கணினி, நிதிநல்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்ததுடன் இடைநிற்றலையும் தடுத்தன. 2021 – 22 நிலவரப்படி, தமிழகத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 98.8% என்கிற அளவில் இருந்தது.
ஆனால், சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பராமரிப்பில்லாக் கட்டிடங்கள், குடிநீர், கழிப்பறை இல்லாத நிலை போன்றவை மாணவர்களின் கல்வித் தரத்தையும் மாணவர் சேர்க்கையையும் பாதிக்கின்றன. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் இடைநிற்றலும் நிகழ்கிறது. இவை பள்ளிக் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் அரசு கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
பள்ளிகளில் கல்வியின் தரத்துக்கு நிகராக மாணவர் பாதுகாப்பும் பேணிக் காக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவியர் மீது நிகழ்த்தப்படும் பாலியல்ரீதியான துன்புறுத்தலைத் தடுக்கவும் கண்காணிக்கவும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி, பள்ளிக் கல்வித் துறை உதவி எண் எனப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவரும் நிலையிலும், மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது.
அண்மைக் காலமாக, பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிரீதியான மோதலும் அது சார்ந்த வன்முறையும் அதிகரித்துவருகின்றன. மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் இதுபோன்ற செயல்களையும் அரசு முற்றாக ஒழிக்க வேண்டும். கல்வி, பாதுகாப்பு, மனநலன், கலைத்திறன் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியே மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கான அடித்தளம் என்பதை மறந்துவிடக் கூடாது.