‘குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்’ என்னும் நிகழ்வு, ஜூலை 30ஆம் தேதி சின்னமனூரில் கவிப்பிரியா கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கிரீஷ் எழுதிய ‘நான் நானாக இருப்பேன்’ என்கிற சிறார் நூல் குறித்துப் பள்ளி மாணவர் முத்துப்பாண்டி பேசுகிறார்.
இவர் உள்பட மாணவர்கள் பதினெட்டு பேர், தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள நூல்கள் உள்பட பல நூல்கள் குறித்துப் பேச இருக்கிறார்கள். சின்னமன்னூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சிறார் செயற்பாட்டாளர் இனியன் தன் ‘பல்லாங்குழி’ அமைப்பு வழியாக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்.
கோவை புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ப் பதிப்பகம்
கோவை மாவட்ட நிர்வாகம், பபாசி, கொடீசியா இணைந்து ஒருங்கிணைக்கும் 2022ஆம் ஆண்டுக்கான கோவை புத்தகக்காட்சி நேற்று (ஜூலை 22) கொடிசியா அரங்கில் தொடங்கியுள்ளது. ஜூலை 31 வரை நடைபெறும் இந்த புத்தகக்காட்சியில், ‘இந்து தமிழ் திசை’ப் பதிப்பகமும் (கடை எண்: 196) இடம்பெறுகிறது.
‘இந்து தமிழ் திசை’ப் பதிப்பக வெளியீடுகளில் பரபரப்பாக விற்பனையாகும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘திருமந்திரம்’, ‘குறள் இனிது’ உள்ளிட்ட பல புத்தகங்கள் ‘இந்து தமிழ் திசை’ப் பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். இந்தப் புத்தகக்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை புத்தகக்காட்சிக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சியான இதில் ‘இந்து தமிழ் திசை’ உட்பட 330 பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளன.
ஸ்டால் எண் 196
ஆங்கிலத்தில் ‘அறம்’
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பு ‘Stories of the True’ என்னும் தலைப்பில் பிரியம்வதா மொழிபெயர்ப்பில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.
மலையாளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன்!
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் மலையாளத்தில் மாத்ருபூமி பதிப்பக வெளியீடாக வர உள்ளது. இந்த நாவல், ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.
இந்த நாவலுக்காக டால்ஸ்டாயின் வாழ்க்கை பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸுக்கு முன்பு பெய்யும் ஓர் மழையுடன் கவித்துவமாகத் தொடங்கும் இந்த நாவல், டால்ஸ்டாயின் பரந்துபட்ட வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. தமிழில் இந்த நூலை தேசாந்திரிப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள்
துருவம் பதிப்பக வெளியீடான புதுமடம் ஹலீம் எழுதியுள்ள ‘நைல் முதல் ஃபுராத் வரை’, ‘கால் நூற்றாண்டுக் கலவரக் கதைகள்’ ஆகிய இரு நூல்கள், ஜூலை 24இல் வெங்கட் நாராயணா சாலையில், ‘தி.நகர் சோஷியல் கிளப்’பில் மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
ஈழத்து இலக்கிய ஆளுமை ‘என்.கே.ரகுநாதம்’ நூல் அறிமுக நிகழ்வு ஜூலை 24இல், 293, ராயப்பேட்டை சாலையில் அகமது வணிக வளாகத்தில் உள்ள ‘கருப்புப் பிரதிகள்’ விற்பனையகத்தில் நடைபெற உள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர் கற்சுரா, எழுத்தாளர்கள் ஜமாலன், யாழன் ஆதி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.