திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமான் மீது பாடிய பாடல்களே தேவாரம் ஆகும். சைவ சமய நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரமே. சம்பந்தர் இயற்றியவை மூன்று திருமுறைகள் அப்பர் இயற்றியவை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரர் இயற்றியவை ஏழாம் திருமுறையாகவும் அறியப்படுகின்றன. இந்த ஏழு திருமுறைகள் முழுவதும் மூலமும் உரையுமாகத் தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மூவரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், தேவாரப் பாடல்களின் வழியே உரையாசிரியர் கண்டறிந்த செய்திகள், புதிய பார்வைகள், விளக்கங்கள் ஆகியவையும் இந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஏழு நூல்களில் உள்ள 8,227 தேவாரப் பாடல்களுக்கும் உரை எழுதியிருப்பவர் சு.சடையப்பன்.
அவர் பிறந்த திருப்பனந்தாளில் குடிகொண்டிருக்கும் ஈசனின் பெயரே அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சடையப்பன் பல மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர், சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் பலமுறை படித்துப் புலமை பெற்றவர்.
தமிழிலும் சைவத்திலும் ஆழ்ந்த புலமையும் தீராப் பற்றுக்கொண்ட சடையப்பன், இதற்கு முன் ‘சிவனடியார் அறுபத்து மூவர் வரலாறு’ என்னும் நூலையும் எழுதியுள்ளார். சமய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் அருணா பதிப்பகம், இந்த ஏழு நூல்களைக் கொண்ட தொகுப்பைக் கெட்டி அட்டையில் சிறப்புற வெளியிட்டுள்ளது.
- கோபால்
தேவாரம் (ஏழு நூல்கள்)
உரையாசிரியர்: புலவர் சு.சடையப்பன்
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 049
மொத்த விலை: ரூ.2,125 (தனித்தனியாகவும் வாங்கிக்கொள்ளலாம்)
தொடர்புக்கு: 044 2650 7131, 94440 47790