இலக்கியம்

360: கோலாகலமாகத் தொடங்கியது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா

மு.முருகேஷ்

புத்தகக்காட்சி, நாட்டுப்புறக் கலை நிகழ்வு, நவீன இலக்கியப் பகிர்வு எனும் மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து நெல்லையில் நடைபெறும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா, ஐந்தாம் ஆண்டாகக் கடந்த மார்ச் 17 அன்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்க, சட்டமன்ற உறுப்பினர்கள், நெல்லை மாநகராட்சி மேயர், துணை மேயர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்புடன் கோலாகலமாக ஆரம்பமானது புத்தகத் திருவிழா. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வகையில், ‘நெல்லை நீர்வளம் - தூய பொருநை நெல்லைக்குப் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கு தவிர, அரங்குகளுடன் தொடங்கியிருக்கும் புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளிக் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெறுகின்றன.

மாலையில் கலை, பண்பாட்டுத் துறையின் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளோடு தொடங்கி, உரையரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், நூல் வெளியீடுகளும் நடைபெறுகின்றன. விழாவில் நாள்தோறும் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி கருணாநிதி, நூலகத் துறை இயக்குநர் க.இளம் பகவத், செய்தி - மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோரோடு, எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன், ஜெயமோகன், வண்ணநிலவன், சோ.தர்மன், உரையாளர்கள் கு.ஞானசம்பந்தன், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

தொல்லியல் துறை சார்பில் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை விளக்கும் தொல்பொருட்கள் கண்காட்சியில், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. வனத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 27 வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் ஞெகிழிப் பைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும், தினமும் இரவு 7 மணிக்குத் தனி அரங்கில் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவதும் இவ்விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன.

புத்தகச் சீர்வரிசை

சாத்தூர் அருகே உள்ள எதிர்க்கோட்டையில் மார்ச் 13 அன்று நடந்த பொறியாளர் நவநீதக்கண்ணன்-அனிதா ஆகியோரின் திருமணம் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மணமக்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்க விரும்பிய நண்பர்கள் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தாம்பூலத் தட்டுகளில் சீர்வரிசையாகக் கொண்டுவந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். புத்தகங்களால் நிறைந்த மணவிழா மேடை ஒரு முன்னுதாரணமாக விளங்கட்டும். வாசிப்பில் ஆர்வம்கொண்ட
மணமக்களுக்கு வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT