சு.வெங்கடேசனின் வாசகர்கள் இணைந்து ஆண்டுதோறும் ஒரு இலக்கிய மலரைக் கொண்டுவருகிறார்கள். முதலாம் ஆண்டு மலர் ‘ஏழிலைப்பாலை’ என்கிற பெயரில் வந்தது. இரண்டாம் ஆண்டு மலர் தற்போது ‘சந்தனவேங்கை’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. மூத்த படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் என்று பலரும் இந்த மலரில் பங்களித்திருக்கிறார்கள். பாசக்காரப் பாசறையை உருவாக்கியிருப்பார்போல சு.வெ!
ஒசூர் எனும் இலக்கியப் பிராந்தியம்
தஞ்சை எழுத்தாளர்கள், திருநெல்வேலி எழுத்தாளர்கள், கோவில்பட்டி எழுத்தாளர்கள் போல ஒசூர் எழுத்தாளர்கள் என்று பெரும் படையே உருவாகியிருக்கிறது. ஒசூர் எழுத்தாளர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் சிறப்பிக்கும் நிகழ்வொன்று இன்று மாலை நடைபெறுகிறது. ஆதவன் தீட்சண்யா, ஸ்ரீனிவாச ராகவன், லா.ச.ரா. சப்தரிஷி, எழில் வரதன், கருமலை தமிழன், கமலாலயன், பத்மபாரதி, வணங்காமுடி, செம்பரிதி, சாந்தி நாராயணன், ந.பெரியசாமி, ரமேஷ் கல்யாண், முருக குமரன், முகிலன், சம்பு, பாலசுந்தரம் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். கூடவே, பா.வெங்கடேசனின் ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. அத்துடன் ‘வையம்பட்டி முத்துசாமி நினைவு புத்தகக் காட்சி-2022’ம் நடைபெறுகிறது. இடம்: ஹோஸ்ட்டியா ஹால், சிப்காட் தொழிற்பேட்டை, ஒசூர். நேரம்: மாலை 5.30 மணி.
காமிக்ஸில் பல்லவ மன்னன்
கம்போடியாவில் பிறந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு காஞ்சியின் அரசனாக மூடிசூட்டப்பட்டதாகக் கருதப்படுபவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவன். இந்த அரசனின் கதை இப்போது காமிக்ஸாக வெளியிடப்பட்டிருக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த ‘டைகர் காமிக்ஸ்’ இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. பல்லவ மன்னனின் காமிக்ஸ் அவதாரத்துக்கு வாழ்த்துகள்!
மாத்ருபூமி 90-ல் தூயன்!
மலையாளத்தின் பிரபல இதழான மாத்ருபூமி தனது 90-வது ஆண்டைச் சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது. இதை முன்னிட்டுச் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றிலுமிருந்து, குறிப்பாக போஜ்பூரி போன்ற புறக்கணிக்கப்படும் மொழிகளிலிருந்து, சிறுகதைகள் மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலிருந்து தூயனின் ‘டார்வினின் வால்’ சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கதையை மொழிபெயர்த்திருப்பவர் காசர்கோடு ரியாஸ். வாழ்த்துகள் தூயன்!
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - ஜிஎம்பி இலக்கிய விருது
ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும்-ஜிஎம்பி குழுமமும் சேர்ந்து நாவல் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முதல் பரிசு: ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு: ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு: ரூ.25 ஆயிரம். நான்காம், ஐந்தாம் பரிசுகள்: தலா ரூ.10 ஆயிரம். முதல் பரிசு பெறும் நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கால் வெளியிடப்படும். இந்த விருதுகளுடன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும். இதற்கான பரிசுத் தொகை: ரூ. ஒன்றரை லட்சம். விருதுகள் குறித்து தொடர்புக்கு: zerodegreeaward@gmail.com
21 வயது… 600 பக்க வரலாற்று நாவல்…
வில்லரசன். பெயரிலேயே வரலாற்று நாவலுக்குரிய அம்சத்தைக் கொண்டிருக்கும் இந்த 21 வயது இளைஞர் 600 பக்கத்தில் ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார். ‘வேங்கை மார்பன்’ என்ற இந்த நாவலை ‘கௌரா பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது. வெகுசன வாசிப்பில் வரலாற்று நாவல்களுக்கான மவுசு ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் இந்தக் காலத்தில் வில்லரசனின் வரவு இந்த வகைமைக்குப் புத்துயிர் ஊட்டட்டும். வாழ்த்துகள் வில்லரசன்!