எழுத்தாளரும் ஓவியருமான சீராளன், ஜெயந்தனின் ‘கோடு’ ஓவியக் கூடம் ஒருங்கிணைப்பில் 8 ஓவியர்களின் குழு ஓவியக் காட்சி 23.12.2021 வியாழன் அன்று ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சோழமண்டல ஓவியக் கிராமத்தில் தொடங்கியது. வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழாவில், மூத்த ஓவியரும் சோழமண்டல ஓவியக் கிராமத் தலைவருமான கோபிநாத் தலைமை வகிக்க, திரைக்கலைஞர், சமூகச் செயல்பாட்டாளர் ரோகிணி குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். எழுத்தாளர் அஜயன் பாலா ஓவியர்களை வாழ்த்திப் பேசினார்.
டால்ஸ்டாயைப் பற்றி எஸ்.ரா.வின் நாவல்
எஸ்.ராமகிருஷ்ணனின் பத்து புதிய நூல்களின் வெளியீடு இன்று ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பம்சம் டால்ஸ்டாயைப் பற்றி எஸ்.ரா. எழுதியிருக்கும் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல்தான். “தமிழில் ரஷ்ய எழுத்தாளர் ஒருவரைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல் இது” என்கிறார் எஸ்.ரா. இந்நிகழ்ச்சியில் எஸ்.ராவின் ‘ஐந்து வருட மௌனம்’ சிறுகதைத் தொகுப்பு, ‘டான்டூனின் கேமிரா’ சிறார் நாவல், ‘காந்தியின் நிழலில்’ கட்டுரைத் தொகுப்பு போன்ற நூல்களும் வெளியாகின்றன. இந்நிகழ்ச்சியில் பி.தங்கப்பன், ஜெனாடி ரோகலேவ், திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., அகரமுதல்வன், சரவணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். நேரம்: மாலை 6 மணி. இடம்: ரஷ்யக் கலாச்சார மையம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
பிரபஞ்சன்-77
பிரபஞ்சன் நினைவைப் போற்றும்விதமாக ‘பிரபஞ்சன் 77’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 அன்று சிறப்பான விழா ஒன்றை ‘பிரபஞ்சன் அறக்கட்டளை’ முன்னெடுக்கிறது. இதனையொட்டி, ‘பிரபஞ்ச கானம்' என்ற பெயரில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரபஞ்சன் குறித்த கட்டுரைத் தொகுப்பு தயாராகிவருகிறது. இதில் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் கட்டுரைகள் இடம்பெறும்.
பாரதிபாலன், பா.ரவிக்குமார், புதுவை சீனு தமிழ்மணி, மு.வேடியப்பன், கவிஞர் மு.பாலசுப்பிரமணியன், புதுவை இளவேனில், பி.என்.எஸ்.பாண்டியன் ஆகியோர் இந்தத் கட்டுரைத் தொகுப்பின் தயாரிப்புக் குழுவினர். கட்டுரைகளை prapanchanfoundation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31, 2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலதிகத் தொடர்புக்கு: பி.என்.எஸ்.பாண்டியன், தலைவர், பிரபஞ்சன் அறக்கட்டளை, 98946 60669.
புத்தகக்காட்சிகள்
கே.கே.நகர் புத்தகக்காட்சி: சென்னை கே.கே.நகரில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இந்தப் புத்தகக்காட்சியின் ஒரு பகுதியாக ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது. 8668134540 என்ற வாட்ஸப் எண்ணுக்கு ஓவியங்களை அனுப்பலாம். பரிசுகளும் சான்றிதழ்களும் உண்டு. புத்தக்காட்சி நடைபெறும் இடம்: ஸ்ரீவிஸ்வகர்மா மினி மஹால், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884515879.
அரூர் புத்தகக்காட்சி: தகடூர் புத்தகப் பேரவை, அரூர் அரிமா சங்கம், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் அரூர் புத்தகத் திருவிழா வரும் டிசம்பர் 31-ம் தேதி தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: காமாட்சி அம்மன் திருமண மண்டபம், அரூர். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.
மரமல்லி பூக்கும் விழா
பொன்.விமலா எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் ‘மரமல்லி’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தப் புத்தகத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பெற்றுக்கொள்கிறார். வெய்யில், ப்ரியா தம்பி, அதிஷா, மு.வேடியப்பன், ப்ரீத்தா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இடம்: தக்கர் பாபா வித்யாலயா, தியாகராய நகர், சென்னை. நேரம்: மாலை 5.30.
தேவசீமா எழுத்துரு
கவிஞர் தேவசீமாவின் ‘நீயேதான் நிதானன்’ கவிதை நூல் கடந்த வியாழன் அன்று வேளச்சேரி Be4 புக்ஸில் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை நூலுக்காக ‘தேவசீமா யூனிக்கோட்’ என்ற பிரத்தியேக எழுத்துரு உருவாக்கப்பட்டதுதான் இதில் விசேஷம். இந்த எழுத்துருவைக் கவிஞர் வெய்யில் வெளியிட, கவிஞர் அமிர்தம் சூர்யா பெற்றுக்கொண்டார். களமிறங்கும் லஷ்மி பாலகிருஷ்ணன்
லஷ்மி பாலகிருஷ்ணன் தனது தந்தையின் நினைவாக எழுதிய ‘அப்பா' என்ற நூலும் ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் வகையில் எழுதிய ‘எழுதாப் பயணம்' நூலும் பரவலான கவனம் பெற்றவை. இப்போது அவர் ‘ஆனந்தவல்லி’ (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்ற தன் முதல் நாவலுடன் களமிறங்குகிறார். தஞ்சையை ஆண்ட மராட்டியர் கால வரலாற்று நாவல் இது. ‘ஆனந்தவல்லி’யின் வெளியீட்டு விழா வரும் 29-ம் தேதியன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அ.மார்க்ஸ், தமயந்தி, கரு.ஆறுமுகத்தமிழன், இளங்கோ கிருஷ்ணன், கவின் மலர், க.நாகராஜன், சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இடம்: தக்கர் பாபா வித்யாலயா, தியாகராய நகர், சென்னை. நேரம்: மாலை 6 மணி.
களமிறங்கும் லஷ்மி பாலகிருஷ்ணன்
லஷ்மி பாலகிருஷ்ணன் தனது தந்தையின் நினைவாக எழுதிய ‘அப்பா' என்ற நூலும் ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் வகையில் எழுதிய ‘எழுதாப் பயணம்' நூலும் பரவலான கவனம் பெற்றவை. இப்போது அவர் ‘ஆனந்தவல்லி’ (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்ற தன் முதல் நாவலுடன் களமிறங்குகிறார். தஞ்சையை ஆண்ட மராட்டியர் கால வரலாற்று நாவல் இது. ‘ஆனந்தவல்லி’யின் வெளியீட்டு விழா வரும் 29-ம் தேதியன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அ.மார்க்ஸ், தமயந்தி, கரு.ஆறுமுகத்தமிழன், இளங்கோ கிருஷ்ணன், கவின் மலர், க.நாகராஜன், சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இடம்: தக்கர் பாபா வித்யாலயா, தியாகராய நகர், சென்னை. நேரம்: மாலை 6 மணி.