தமிழில் குழந்தை இலக்கியம் செழித்திருந்த காலமொன்று இருந்தது. குழந்தை இலக்கியத்திற்கென்றே பல இதழ்கள் வெளிவந்தன. 1950-ல் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா தொடங்கிய ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பு, ஆண்டுதோறும் குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி, தங்கப் பதக்கங்களைப் பரிசாக வழங்கியது.
குழந்தை இலக்கிய மாநாடுகளையும், குழந்தைகள் நாடக விழாவையும் நடத்தியது. அந்த மரபின் தொடர்ச்சி சற்றே தேங்கிய நிலையில், தமிழில் குழந்தை இலக்கியம் மீண்டும் தளிர்முகம் காட்டி வளரத் தொடங்கியுள்ளது. தமிழில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறை, படித்துறை புத்தக அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘சிறார் இலக்கிய மாநாட்டை’ வரும் டிசம்-22, 23 (புதன், வியாழன்) ஆகிய இரு நாட்கள் வாணியம்பாடியிலுள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடத்துகின்றன. கருத்தரங்கு, நூல் வெளியீடு, உரையரங்க நிகழ்வுகளில் பாரதி கிருஷ்ணகுமார், ராசி அழகப்பன், சுப்ரபாரதி மணியன், கி.பார்த்திப ராஜா, சுந்தரபுத்தன், மோ.அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். மீண்டும் செழிக்கட்டும் சிறார் இலக்கியம்!
‘வாசகசாலை’யின் முப்பெரும் விழா
வாசகசாலை இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும்,‘முப்பெரும் விழா’ என்கிற பெயரில் அதன் ஆண்டுவிழா, நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை நடத்திவருகிறது. இவ்விழா நாளை மதியம் மூன்று மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையில் தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் சாரு நிவேதிதா, தாமரைச் செல்வி, எம்.கோபாலகிருஷ்ணன், ஏ.ஆர்.முருகேசன், முகமது யூசுப், அனுராதா ஆனந்த், ஐ.கிருத்திகா, அருண்பாண்டியன் மனோகரன், இளங்கோ கிருஷ்ணன், லதா போன்ற படைப்பாளிகள் விருது பெறுகிறார்கள். எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, மானசீகன், ஜா.தீபா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இலக்கிய வாசகர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
தருமபுரியில் புத்தகத் திருவிழா
தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா தருமபுரி மதுராபாய் சுந்தராஜாராவ் திருமண மண்டபத்தில் டிசம்பர் 23 தேதி முதல் 26 வரையில் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. தினமும் மாலை நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் உண்டு.