அஞ்சலி: மேடைத் தமிழை ஆராய்ந்த அமெரிக்கர்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பெர்னார்ட் பேட் (56) இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் காலமாகிவிட்டார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர் பேட். 1982-ல் ஆய்வுப் பணிக்காக மதுரை வந்தவர், அங்கேயே தங்கித் தமிழ் மொழியைப் பயின்றார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாகத் தமிழகத் தொடர்புடன் இருந்தவர். இறுதியாக சிங்கப்பூர் யேல் தேசியப் பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். மொழியிலாளர், மானுடவியலாளர் போன்ற அடையாளங்களும் இவருக்கு உண்டு. பாரதி குறித்து மூன்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஏ.கே.ராமானுஜத்துடன் இணைந்து சுந்தர ராமசாமியின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

உரைநடைத் தமிழைக் கற்றறிந்தாலும் அவரது ஆர்வம் பேச்சுத் தமிழ் மீதுதான். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் பேச்சுத் தமிழை ஆர்வத்துடன் கவனித்துவந்தார். அவருடைய ஆய்வு வழிகாட்டியும் பேராசிரியருமான தொ.பரமசிவன், “உசிலம்பட்டிப் பேச்சுத் தமிழ், மதுரைப் பேச்சுத் தமிழ், திருநெல்வேலி பேச்சுத் தமிழ் ஆகியவற்றுக்கு இடையிலான உச்சரிப்பு வேறுபாட்டைத் துல்லியமாக உள்வாங்கிப் பேசும் ஆற்றல் அவரிடம் இருந்தது” என்கிறார். பேச்சுத் தமிழ் மீது அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக அதையே முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருளாகக் கொண்டார் எனலாம். அவரது ஆய்வு ‘Tamil Oratory and the Dravidian Aesthetic’ என்னும் பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டின் மக்கள் புழங்கு மொழிக்கும் மேடைத் தமிழுக்கும் உள்ள இடைவெளிக்கான விடையை அவர் தன் ஆய்வின் வழியாகக் கண்டுபிடிக்க முயன்றார். அவரது ஆய்வு, சுதந்திரப் போராட்டக் கால மேடைத் தமிழ், அதன் வழியாகத் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையில், அரசியலில் சினிமா வசனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் விரிகிறது.

ஆன்மிகச் சீர்திருத்தத்தின் இரு துருவங்களாக இருந்த ஆறுமுக நாவலரும் வள்ளலாரும்தாம் மேடைத் தமிழ் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் எனலாம். அதற்கு முன்பு தமிழ்ச் செவ்விலக்கியத்தில் மேடைத் தமிழ் குறித்த பதிவுகளே இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுதேசித் தலைவர்கள் மீண்டும் மேடைத் தமிழைக் கையிலெடுத்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் (அவர்கள் ஆட்சிக்கு எதிரான) மேடைப் பேச்சுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மேடைப் பேச்சின் வளர்ச்சி தடைபட்டது. அதன் பிறகு வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தரனார். பெரியார் ஈ.வே.ரா. ஆகியோர் மூலம் மீண்டும் மேடைப் பேச்சு புத்துணர்வு பெற்றது என்கிறார் பேட். இவர்களில் பெரியாரின் பேச்சு மட்டும் மக்கள் புழங்கு மொழியில் இருந்தது.

பெரியார் புறக்கணித்த சினிமாவின் வசனங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் விளைவித்த தாக்கத்தையும் ஆய்வுபூர்வமாக அணுகியுள்ளார் பேட். சமீபத்தில் மறைந்த திராவிட ஆய்வாளர் எம்.எஸ்.பாண்டியனும் சினிமாவை ஆய்வுப் பொருளாகக் கொண்டு அதன் அரசியல், கலாச்சாரத் தாக்கத்தைப் பற்றி முக்கியமான ஆய்வை நல்கியுள்ளார். பேட்டின் துணிபும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ஆய்வுடன் உடன்படுவது எனலாம். திராவிட அரசியலின் வளர்ச்சிக்கு சினிமா என்னும் வெகு மக்கள் ஊடகம் பெரும் பங்காற்றியுள்ளது என்பது வெளிப்படையானது.

சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ போன்ற திராவிட அரசியல்வாதிகள், மேடைப் பேச்சை வேறு தளத்துக்குக் கொண்டுபோனார்கள். மக்கள் புழங்கு மொழி கொச்சைத் தமிழாக இருக்கும்போது மேடைத் தமிழும், சுவரொட்டிகளும், கோஷங்களும் ஏன் செந்தமிழாக இருக்க வேண்டும் என்னும் கேள்விக்கு, இழந்த பொற்காலத்தை, இழந்த தமிழ்ப் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிதான் இது என்கிறார் பேட். ஜாதி, மதங்களால் பிரிவுபட்டிருந்த மக்களை ‘தமிழர்’ என்னும் ஒற்றை அடையாளத்துக்குள் ஒன்று திரட்டியதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த மேடைச் செந்தமிழ் என்றும் கூறுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை கொண்ட தமிழ்ப் பண்பாட்டுப் பெருமிதம் பற்றிய கற்பனைகளை உருவாக்குவது அன்றைய காலகட்ட திராவிட அரசியல் வளர்ச்சிக்கு அவசியமாக இருந்திருக்கிறது. இந்தத் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றைத் தக்கவைத்துகொள்ளாததுதான் காங்கிரஸ் போன்ற பெரும் தேசியக் கட்சிகளின் தோல்விக்குக் காரணம் எனலாம். இன்றும் தமிழ்ப் பெருமையை நினைவூட்டி உணர்வுகளைத் தூண்டுவது வெற்றிக்கான உத்தியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. கேளிக்கை வடிவமாக அரசியல் மாறிவரும் இன்றைய சூழலில் பேட்டின் ஆய்வு முடிவுகள் நமக்குப் பல தெளிவுகளை உணர்த்துகின்றன.

இந்தத் தேர்தலில் தி.மு.க. தனது பிரச்சார உத்தியை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளது. தெருமுனைப் பிரச்சாரத்தின் மூலம் வளர்க்கப்பட்ட கட்சியின் தலைவர்கள், குளிரூட்டப்பட்ட உள்ளரங்குகளுக்குள் உரை நிகழ்த்துகிறார்கள். விளம்பரங்கள் செந்தமிழிலிருந்து மக்களின் புழங்கு மொழிக்கு மாறியிருக்கிறது. இவையெல்லாம் கவனிக்கதக்க மாற்றங்கள்; ஆய்வுப் பொருள்கள். ஆனால் இந்த மாற்றங்களை ஆராய பேட் இன்று இல்லை. அவர் இயங்கிய இந்த ஆய்வுத் துறையில் அவர் மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE