இலக்கியம்

நூல்நோக்கு: இன்றைய அரசியல் தேவை

செய்திப்பிரிவு

இந்தியப் புரட்சி: இன்றைய பரிமாணங்கள்
து.ராஜா
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை-98.
தொடர்புக்கு:
044 – 26251968
விலை: ரூ.50

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்த கரோனா காலத்தில் எண்ணற்ற இணையவழிச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தது. இந்த மெய்நிகர் சந்திப்புகளின் இரண்டு மைல்கல் தருணங்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் து.ராஜா உரையாற்றினார். அந்த இரண்டு உரைகளும், அந்த உரைகளுக்குப் பின்பாக நடந்த கலந்துரையாடல்களும் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. மெய்நிகர் சந்திப்புகளின் 100-வது கூட்டத்தில் பேசியது முதலாவது. இதில் நம்முடைய இன்றைய சூழலை மையமாக வைத்து து.ராஜாவின் உரை அமைந்திருந்தது. எல்லா இடதுசாரிகளும் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை இந்த உரை அடிக்கோட்டிட்டுச் சொல்கிறது. 150-வது கூட்டத்தில், மார்க்ஸை முழுமையாக்கியதில் எங்கெல்ஸின் பங்கு குறித்து உரையை அமைத்துக்கொண்டார். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் நட்பில் தொடங்கி மார்க்ஸியத்தை எங்கெல்ஸ் எடுத்துச்சென்ற விதத்தையும், அதற்குப் பிறகு லெனின் அதை விரிவுபடுத்தியதையும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்ஸியம் எப்படி வளர்கிறது என்பதையும் இந்த உரை பேசுகிறது. இரண்டு உரைகளுமே இன்றைய அரசியல் தேவை என்ன என்பதை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டு உரைகளுமே து.ராஜாவின் இத்தனை ஆண்டு அரசியல் அனுபவங்களையும், வாசிப்பு அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவருடைய பரந்துவிரிந்த வாசிப்பானது எப்படிக் களத்தோடு பிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு பதம். மிகப் பெரும் அறிஞர்களின், ஆளுமைகளின் சிந்தனைகளை மக்கள் மொழியில் வெளிப்படுத்துகிறார் அவர். அதன் வழியாக, பெரும் ஆளுமைகளின் சிந்தனைகளை விரிந்த தளத்துக்கு எடுத்துச்செல்கிறார்.

- ரா.பாரதி

SCROLL FOR NEXT