தொடுகறி: பிரபஞ்சன் 55

By செய்திப்பிரிவு

பிரபஞ்சன் 55:

கடந்த 27-ம் தேதி தனது 73-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் எழுத்தாளர் பிரபஞ்சன். இது அவருக்கு எழுத்துலகில் 55-வது ஆண்டும்கூட. இதையொட்டி ‘எழுத்துலகில் பிரபஞ்சன் -55’ என்ற விழா ரஷ்ய கலாச்சார மையத்தில் முழுநாள் விழாவாக இன்று காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரபஞ்சனின் மொத்தச் சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப் படுகின்றன. ரூ. 1,500 மதிப்புள்ள இந்தத் தொகுப்புகள் விழா அரங்கில் ரூ. 1,000-த்துக்குக் கிடைக்குமாம். மேலும், கருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடல், முக்கியமாக வாசகர்களிடமிருந்தும் அன்பர்களிடமிருந்தும் திரட்டிய பத்து லட்சம் ரூபாய் நிதியை பிரபஞ்சனிடம் அளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறுகின்றன. இந்த விழாவில் தமிழின் முக்கிய ஆளுமைகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் கலந்துகொள்கிறார் என்பது கூடுதல் விசேஷம். எழுத்தாளரைக் கவுரவிப்பது என்றால் இதுதான்!

காசம் வெல்லும் பெண்மை!-

உலக நாடுகளில் காசநோயின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது. உலக சுகதார மையத்தின் ஆய்வுகளின்படி, ஓர் ஆண்டில் 28 லட்சம் பேர் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். காசநோயின் விளைவுகளில் மோசமானது சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது.

அதுவும் இந்த சமூகப் புறக்கணிப்புகளில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சரியான மருத்துவ வசதியில்லாமல் குடும்பங்களாலும் கைவிடப்படுகின்றனர். காசநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த ஒன்பது பெண்களின் கதையை ‘நைன் லைவ்ஸ்: விமன் அண்ட் ட்யூபர்குளோஸிஸ் இன் இண்டியா’என்ற புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. சுகாதார ஆர்வலர் சப்பல் மெஹ்ராவும் எழுத்தாளர் ஜாரா உத்வாதியாவும் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றனர். இந்தப் பெண்களின் அனுபவங்கள் காசநோயை எதிர்கொள்வதற்கான மனஉறுதியை அளிப்ப தாக இருக்கின்றன.

புத்தகத் தாத்தா

புத்தக தினத்தன்று அண்ணா சாலையின் அண்ணா சுரங்கப் பாதையில் கண்ணில் பட்ட காட்சி இது. முதியவர் ஒருவர், மிகவும் வறிய தோற்றம் கொண்ட ஒருவர் ‘பேஸேஜ் டூ ம்யூட்டினி’ என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது ‘என் பெயர் சி. ரங்கநாதன். புத்தகம்தான் தம்பி என் வாழ்க்கை. 26 ஆண்டுகளாக நான் செய்த தொழில் கல்லூரி புத்தக விற்பனை. பைகிராஃப்ட்ஸ் சாலையில் கடைவைத்துக்கொண்டிருந்தேன்.

கடையை விட்டுப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ரொம்பவும் நொடித்துப் போய்விட்டேன். இப்போது புத்தகங்கள்தான் துணை. சமீபத்தில் 15 புத்தகங்களை யாரோ திருடிப்போய்விட்டார்கள். நான் அதிகம் பேச விரும்பவில்லை தம்பி’ என்று காதுக்கே கேட்காத குரலில் சொன்னார். மதிய வெயிலுக்கும் அண்ணா சாலையின் போக்குவரத்துச் சந்தடிக்கும் அடியில் இப்படி ஒரு வாசகர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE