நடைவழி நினைவுகள்: அசோகமித்திரன் - சாமானியர்களின் பிரபஞ்சம்

By சி.மோகன்

அசோகமித்திரன் சிறுகதை வெளியில் அதிகபட்ச சாத்தியங்களை வசப்படுத்திய படைப்பு மேதை. இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதுமைப்பித்தனுக்கு இணையானவர். புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் பரிபூரண நவீனத்துவக் குழந்தைகள். அதேசமயம், வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை. நவீனத்துவ வெளிக்குள் பிரவேசித்து அதன் எல்லைகளுக்குள் ஊடாடியபடியே தன்னியல்பாக அதன் எல்லைகளை மீறி விரிந்து விகாசம் கொள்ளும் படைப்புலகம் புதுமைப்பித்தனுடையது;

எனில், நவீனத்துவ வெளியின் விரிந்து பரந்த எல்லைகளுக்குள் நின்று நிதானமாக ஊடாடியபடியே அதன் பரிபூரண நுட்பங்களுக்குள் தன்னிறைவெய்தும் படைப்புலகம் அசோகமித்திரனுடையது. காலம் கடந்தும் பொலிவு குன்றாத புதுமைப்பித்தனின் தனித்துவப் படைப்பு மொழியோ, அறியாத பிரதேசங்களிலும் பிரவேசிக்கும் புதுமைப்பித்தனின் அதீதக் கற்பனைச் சிறகுகளோ அற்றவர் அசோகமித்திரன்.

அவருடைய படைப்புக் கற்பனை என்பது அறிந்த நிஜங்களிலிருந்து அறியாத நிஜங்களைக் கண்டடைந்து, அவ்விரண்டையும் புனைவில் கூடிவரச் செய்வது. நடுத்தர வர்க்க மனிதர்களின் அக-புற நிதர்சனங்களின் புனைவுகளே அவருடைய கதைகள். ஒரு பெருநகரின் சைக்கிள் பயணி அவர். புறம் சார்ந்து மட்டுமல்ல, அகம் சார்ந்தும் அதன் இண்டு இடுக்குகளை அறிந்தவர். அவருடைய கதை உலகம், சாமானியர்களின் பிரபஞ்ச வெளி.

அசோகமித்திரன் சிறுகதைகளின் சிறப்புத் தன்மைகளை ஜி.நாகராஜன் துல்லியமாகக் கோடிட்டிருக்கிறார்: “பெரும்பாலான தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் அரிதே காணக்கூடிய சொற்செட்டு, புறநிலை உணர்வு, வலிந்து எதையுமே புகுத்தாத போக்கு, வாழ்க்கையின் சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலையுணர்வுக்கு அப்பாற்பட்ட ‘நோக்கங்களி’லிருந்து பூரண விடுதலை இவையனைத்தும் அசோகமித்திரனின் சிறப்புத் தன்மைகளாக எனக்குப் படுகின்றன.”

1956-ல் தன்னுடைய 25-வது வயதில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அசோகமித்திரன், தொடர்ந்து 60 ஆண்டுகள் சீராக இயங்கி 2016 வரை 272 சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்திய மத்தியதர வர்க்க வாழ்க்கைப் பாடுகளின் வெவ்வேறு பரிமாணங்கள் அவை. ஒரு மகத்தான நாவலின் கலைத்துப் போடப்பட்ட அத்தியாயங்கள். “என் வரையில் ஒரு சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் பரிமாணங்கள் அதே எழுத்தாளனின் நாவலில் வருவதில்லை” என்கிறார் அசோகமித்திரன்.

மேலும், ‘தந்தைக்காக’ என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், “வரிசைப்படுத்தலுக்காக இந்தப் பதினெட்டு கதைகளை மீண்டுமொரு முறை படித்தபோது ஒன்று புலப்பட்டது. இவை தனித்தனி தலைப்புகள் கொண்டிருந்தாலும் தனிக்கதைகள் அல்ல. வரிசையை ஒரு குறிப்பிட்ட விதமாக மாற்றினால் எல்லாம் சேர்ந்து ஒரு நீண்ட கதையாக மாறிவிடுகிறது.

பாத்திரங்கள் பெயர் மட்டும் பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கும். ஆனால், இக்கதைகளும் பாத்திரங்களும் வாசிப்பவர் நினைவில் இருக்குமானால் அது பெயர்க் காரணம் கொண்டு இருக்காது.”

அசோகமித்திரன் பிறந்து வளர்ந்த பால்யகால நகரம், செகந்திராபாத். தந்தையின் மரணத்துக்குப் பின், அவருடைய 21-வது வயதில், 1952-ல் அவர்களுடைய குடும்பம் சென்னைக்குக் குடிவந்தது. அவருடைய பால்யகால நினைவுகளைக் களனாகக் கொண்ட 31 கதைகளை அவர் எழுதியிருப்பதாக ராஜேஷ் என்ற வாசகர் பட்டியலிட்டிருப்பதாக அசோகமித்திரனே ஒரு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய பிற கதைகள், அதற்குப் பின்னான 65 ஆண்டுகால சென்னை வாழ்க்கையைக் களனாகக் கொண்டவை. அவர் பணியாற்றிய ஜெமினி ஸ்டூடியோ அறியத் தந்த திரைப்பட உலகம், குடும்பம், உறவுகள், நட்புகள், நகர மத்தியதர வாழ்வியல் நெருக்கடிகள், வாசிப்புகள், இலக்கியப் பரிச்சயங்கள், கண்டதும் கேட்டதும் என்றான அவதானிப்புகளிலிருந்து புனைவு பெற்ற உலகம்.

சிறுகதை எனும் சாதனத்தில் இவர் முழு நிறைவாகப் பயணித்தவர். அதன் சாத்தியங்களை அபாரமாகவும் எளிமையாகவும் வசப்படுத்தியவர். அவருடைய கதைகளில் மனித மனங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு இடமில்லை. சமச்சீரான உணர்வுத்தளத்தில் இயங்குபவை. கதைசொல் முறையில் எவ்வித அலங்காரங்களுக்கும் இடமில்லை. அதேசமயம் நுட்பமான தொனி உள்ளுறைந்தவை.

விவரிப்பு நடையும் உரையாடலும் கதைக்களன்களுக் கேற்பவும் கதாபாத்திரங்களுக்கேற்பவும் எளிமையானவை. அவருடைய படைப்புலகமே சாதாரணமானவர்களை மையமாகக் கொண்டு இயங்குவதால் மொழியும் சாதாரண எளிமையின் அழகுடன் பொலிகிறது. அவருடைய கதைகள் அவற்றின் சகஜமான பயணத்தில் எவ்வித பாவனைகளுமின்றி ஒரு உச்சத்தைத் தொட்டு முடிகின்றன. அத்தருணத்தில் அதுவரை சாதாரணச் சித்தரிப்பு கொண்டிருந்த கதை, ஓர் அசாதாரணமானதாகத் தன்னெழுச்சி கொள்கிறது. கதையின் அந்த உச்ச எழுச்சி வாசகனைச் சுழற்றும் வல்லமை கொண்டது.

அவருடைய 60 ஆண்டுகாலக் கதைவெளிப் பயணத்தில் அவருடைய சாதனைச் சிறுகதைகள் அநேகம். பால்யகால செகந்திராபாத் பின்புலத்தில் உருவாகியிருக்கும் கதைகளில் ‘வாழ்விலே ஒரு முறை’; இலக்கிய வாசிப்புகளிலிருந்து உருப்பெற்ற கதைகளில் எர்னெஸ்ட் ஹெமிங்வே குறித்தான, ‘பறவை வேட்டை’; திரைத் தொழில் அனுபவக் கதைகளில் ‘புலிக்கலைஞன்’; மத்தியதரக் குடும்பங்களில் பாரம் சமந்து அல்லலுறும் பெண்கள் பற்றிய கதைகளில் ‘விமோசனம்’, ‘மாலதி’, ‘பார்வை’;

தன் காலம் மற்றும் வாழ்க்கை பற்றிய தீர்க்கமான பார்வை கொண்ட கதைகளில் ‘பிரயாணம்’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘காட்சி’, ‘காந்தி’; மத்தியதர வாழ்வின் அன்றாட இடர்களோடு வாழும் மனிதர்கள் பற்றிய பல படித்தான கதைகளில் ‘மாறுதல்’, ‘காத்திருத்தல்’ போன்றவை இவருடைய மகத்தான சிறுகதைகளில் சில. ஒரு படைப்பாளியாக இவருடைய வாழ்க்கைப் பார்வை என்பது வாழ்வின் நிதர்சனங்களாக எதிர்கொள்ள நேரிடும் சங்கடம், துயரம், கசப்பு, வெறுமையை வாழ்ந்து தீர்ப்பது என்பதாகவே பரிவுடன் வெளிப்படுகிறது.

அவருடைய பிரசித்தி பெற்ற ‘புலிக்கலைஞன்’ கதையில் வரும் அந்த சாமானியன், புலிக்கலைஞனாக உருமாற்றம் கொண்டு கலைவெளியில் பிரவேசித்து விஸ்வரூபம் கொண்டு தன் கலை ஜாலத்தில் திளைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிலிருந்து மீண்ட தருணத்தில் சாமானியனாகத் தன் வாழ்வின் அவல இருப்புக்குத் திரும்புவான். இக்கதையில் நிகழும் கலை மாயம்தான் அசோகமித்திரனின் புனைவு மாயமும்கூட.

அவர் தன் படைப்புவெளியில் பிரவேசித்து சஞ்சரிக்கும்போது ஓர் அலாதியான படைப்பாளியாக உருமாற்றம் கொள்கிறார். ஒரு தேர்ந்த கலைஞனுக்குரிய லாவகங்களோடு அப்பணியில் தன்னைக் கரைத்துக்கொள்கிறார். படைப்பாக்க எக்களிப்பில் திளைத்துப் படைப்பை நிறைவு செய்துவிட்டுப் புனைவுவெளியிலிருந்து மீண்டதும் தன் சாமானிய வாழ்வை வாழும் தன்னியல்புக்குத் திரும்புகிறார். இந்தத் தொடர் பயணத்தில் எவ்விதத் தேக்கமும் இல்லாது நகர்ந்துகொண்டே இருந்தவர் அசோகமித்திரன்.

- தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE