சுகுமாரன் கதைகள், 1983இல் தொடங்கி இந்த 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் பயணித்திருப்பவை. இந்தக் காலகட்டத்திற்குள் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள், சுகுமாரன் என்கிற தனிமனிதனின் உள்ளுக்குள் நடந்த மாற்றங்கள் ஆகிய இரு அம்சங்களையும் பிரதிபலிப்பவையாக இந்தக் கதைகள் உள்ளன. தன்னுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத, பாதிக்காத ஒரு சம்பவத்தைக் கதைப் பொருளாகக் கொள்ள சுகுமாரனுக்கு விருப்பம் இல்லை. சுகுமாரன் குறைவாக எழுதியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
புதுமைப்பித்தன் தொடங்கிய தமிழ் நவீனச் சிறுகதையின் தொடர்ச்சி என இவரது கதைமொழியை வரையறுக்கலாம். கதையைச் சட்டெனத் தொடங்குவதில், அதை எடுத்துச் செல்வதில் சுகுமாரனின் சிறுகதை மொழிக்கு தயக்கமே இல்லை. சுகுமாரனின் காதல் கவிதைகளில் வெளிப்படும் நினைவேக்கம், இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளில் பல்வேறு உணர்வு சார்ந்து ஏற்படுகிறது.
அந்திக்குப் பின்புறம் மறைந்திருக்கும் ஒளியைப் போல் அந்த உணர்வை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. கதைகளின் பிரதான நோக்கமே அந்த உணர்வை எழுப்புவதுதான். சமூக விழுமியங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த சில கதாபாத்திரங்களின் உணர்வு அழுத்தங்கள், அடுப்படிப் புகையாகக் கதைகளுக்குள் கமறுகின்றன.
‘அரண்’ நெடுங்கதை, சுகுமாரனின் புனைவாற்றலுக்குச் சான்று. அசோகமித்திரனின் ‘அவனுக்கு மிகப் பிடித்தமான நக் ஷத்ரம்’ கதை, 1960 காலகட்டத்தில் நிலவிய அம்மை நோய்ப்பரவல் அனுபவத்தில் எழுதப்பட்டது. பெருந்தொற்றுக் காலத்தில் மக்களும் அரசு அமைப்புகளும் எப்படி மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இயந்திரத்தனமாகச் செயல்படும் என்பதை அசோகமித்திரன் சொல்லியிருப்பார்.
சுகுமாரனின் இந்தக் கதை, கோவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் எழுதப்பட்டது. ஆனால், இது கோவிட் தொற்று குறித்தது அல்ல. இங்கிலாந்தில் ‘இயாம்’ என்கிற சிறு கிராமத்தில் நிகழ்வதாகும். ஒரு தேவாலயம், அதன் பாதிரியார், அவர் மனைவி, தெய்வ விசுவாசிகளான மக்கள் எனப் பின்னப்பட்டது இந்தக் கதை. ஒரு பெருந்தொற்று, மனித மனங்களில் உண்டாக்கும் விகாரங்களை இந்தக் கதை விவரிக்கிறது.
‘உஸ்தாத்’தும் சுகுமாரனின் கற்பனா சக்திக்கு உதாரணமான கதை. சுகுமாரன் என்கிற தனி ஆளுமையின் அம்சம் இந்தக் கதையில் மறைமுகமாக வெளிப்படுகிறது. கருநாடக இசைப் பாடகர் மதுரை சோமுவை தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் எதேச்சையாகச் சந்தித்த அனுபவத்தை சுகுமாரன் கட்டுரையாக எழுதியிருக்கிறார். ஒரு கீர்த்தனையை சுகுமாரனுக்காக சோமு பாடிக் காட்டியிருப்பார். புகழ்பெற்ற ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லாகானின் ஒரு நாளில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தைப் பற்றியது.
தெய்வம் அவதரிக்கும் கதை இது. கையாள்வதற்குச் சிக்கலான கதைப் பொருளை, சுகுமாரன் லாவகமாகக் கையாண்டுள்ளார். இந்தக் கதையில் பிஸ்மில்லாகான் இருமுறை ஷெனாய் வாசிக்கிறார். ஒரு புதிய ராகம் அது. கதைக்குள் வாசிக்கப்படும் அந்த இசையின் ராக பாவங்களை சுகுமாரன் தன் எழுத்தின் வழி வாசகர்களுக்கு உணரச் செய்திருப்பார்.
கேரளப் பின்னணியில் எழுதப்பட்ட ‘சர்ப்பம்’ கதை, துள்ளல் நடையில் எழுதபட்டுள்ளது. ஒரு மெக்கானிக் ஷாப்புக்குள் பாம்பு புகுந்து விடுகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அங்கதச் சுவையுடன் எழுதியிருக்கிறார். மலையாள மொழிக்கே உரித்தான எள்ளல் பாணியை சுகுமாரனின் இந்தக் கதை அதன் போக்கிலே சுவீகரித்துக் கொண்டுள்ளது.
ஒரு மெல்லிய உணர்வைச் சுற்றியே பெரும்பாலான கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. அதை வாசகர்களுக்குக் கடத்தும் விதத்தில் இந்தக் கதைகள் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அதைக் கடந்து முடிவு நோக்கிச் செல்லும் வழியில் இந்தக் கதைகள், வாசக விருப்பத்துக்காகத் திருப்பங்களில் ஒளிந்துகொள்ள விரும்புகின்றன. இதிலுள்ள கதைகளை, அவை எழுதப்பட்ட காலகட்டத்தைச் சார்ந்து மதிப்பிட வேண்டும். அந்த விதத்தில் பல கதைகள் அந்தக் காலகட்டப் போக்கை வெளிப்படுத்தியுள்ளன.
உஸ்தாத்
சுகுமாரன்
நூல்வனம் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9276549991
- தொடர்புக்கு: jeyakumar1027@gmail.com