பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், தமிழ்க் கவிதையும் அவ்வப்போது சட்டையை உரித்துக்கொள்வதற்கு உதாரணம் யுகன் கவிதைகள். இவற்றில் எந்த கூடுதல் செய்நேர்த்தியும் இல்லை. மனதில் தோன்றும் கீற்றொளியைத்தான் அவர் எழுதிப் பார்க்கிறார்.
அது கவிதைதான் என நம்பத் தொடங்கியதில் இருந்து அவருக்கு கவிதை வசப்படத் தொடங்கிவிடுகிறது. அதில் பலவும் வெறும் ஸ்டேட்மென்ட்தான் என்று நினைத்திருப்பார் என்றால், கவிதை குறித்து மட்டுமல்ல; வாழ்க்கை குறித்து மெல்லிய நகைச்சுவை இழையோடும் பார்வை ஒருவருக்கு இருப்பதே கூட நமக்கு தெரிந்திருக்காது.
காத்திருக்கும் குழந்தையிடம் ஊஞ்சலைக் கொடுக்காமல், பூங்காவில் யாரோ ஒரு எருமை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பதில், தானும் வளர்ந்த குழந்தை என்று நினைத்திருந்தாலும், அது அந்த எருமையின் தவறுதான் என்கிறார். இதில் உள்ள அறச்சீற்றம், வளர்ந்த ஆளை, ‘‘எருமை’’ என அழைக்க வைக்கிறது.
கிராமத்தில், மாடிமுற்றத்தில் மயில் பறந்துவந்து அமர்ந்தபோது, நாம் முருகனைத்தான் கும்பிடுகிறோம் அதனால் தான் வீட்டுக்கு மயில் வந்துள்ளது எனப்பேரனிடம் கூறி “இறகு போட்டு விட்டுப்போ” என மயிலிடம் கேட்க, இரண்டு மூன்று இறகுகள் போட்டுவிட்டுப் பறந்துபோவது அழகான சித்திரம். துரோகங்கள், இழப்புகளுக்குப் பிறகு, ராசிபலன் தெரிந்து கொள்ள சோதிடம் பார்க்கப்போன கவிதைகள் எல்லாம் சிரிப்பில் ஆழ்த்தக்கூடியவை. ‘கிரகங்களைத் துரத்துபவன்’ நல்ல சுயபகடி கவிதை.
பழைய காதலி பற்றிய கவிதைகள் ஆங்காங்கே வருகின்றன, அதைவிட கூடுதலாக, சாதாரண வீட்டுப் பிரச்சினைகளில் உருவாகும் மனைவியுடனுனான அன்பின் சண்டைகளும் கவிதையாகியுள்ளன.
ஒரு கவிதையில் பழைய காதலிகள் பற்றியப் பேச்சில் மனைவி கோபித்துக்கொள்ள, கல்யாணத்துக்கு முன்பும் பின்பும் எனக்கு ஒரேகாதலி; அது நீதான் என முடித்துவைக்கும்போது, மனைவியின் புன்னகையால் பிரச்சினையும் முடிகிறது. பாசாங்குகள், நல்லவன் முகமூடிகள் ஏதுமின்றி, வாழ்க்கையை லகுவாக எடுத்துக்கொள்வது யுகனின் பொதுவான அம்சமாக இருக்கிறது.
கிரகங்களைத் துரத்துபவன்
யுகன்
நன்றிணை பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9486177208
- தொடர்புக்கு: sridharan.m@hindutamil.co.in