இலக்கியம்

பெண் விடுதலைக்கான கல்வி | நூல் நயம்

செய்திப்பிரிவு

ஆணாதிக்கப் பார்வையோடு பெண் கல்வி எதிர்ப்பும் மேலோங்கி இருந்த 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுக்கோட்டை சமஸ் தானத்தில் பிறந்தவர் முத்துலெட்சுமி. பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்த முத்துலெட்சுமி, பெரும் போராட்டங்களுக்கிடையே படித்து முன்னேறியவர். புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதியைப் பெற்று, மாமன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவியான இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று, ஆசியாவின் முதல் பெண் மருத்துவர் எனும் சிறப்பினையும் பெற்றார்.

பெண் கல்விக்காகவும், பெண் சமூக விடுதலைக்காகவும் போராடிய முத்துலெட்சுமி, மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் துணைத்தலைவராகவும் செயலாற்றினார். ஆங்கிலேய அரசு காந்தியை முறையற்ற வகையில் சிறையிலடைத்ததை எதிர்த்து, தனது மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தேவதாசி முறையை ஒழிப்பதில் பெரும்பங்காற்றினார். டாக்டர் முத்துலெட்சுமி பற்றி பலரும் அறிந்திராத அரிய செய்திகளைத் திரட்டி, அக்காலப் புகைப்படங்களோடு தந்திருக்கும் நூலாசிரியரின் பணி பாராட்டுக்குரியது. - மு.முருகேஷ்

மாதர் குல மாணிக்கம் பத்மபூசண்
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி – தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்
திலகவதியார் திருவருள் ஆதீன வெளியீடு, புதுக்கோட்டை.
விலை: ரூ.150/- தொடர்புக்கு: 9789182825

விழிப்புணர்வு நூல்: இன்று மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது நாய்க்கடி. திடீரென்று நாய்க்கடிக்கு உள்ளானால் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. பெரிய காயம் இல்லை என்று மருத்துவமனைக்குச் செல்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். நாய் கடித்தவுடன் பதற்றத்தில் செய்யக் கூடாததைச் செய்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நாய் கடித்ததும் அது எந்த மாதிரியான நாய் என்பதைக் கவனிக்க வேண்டும்.

கடித்த இடத்தை 15 நிமிடங்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது வைரஸின் பாதிப்பு குறையும். பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தகுந்த மருத்துவத்தைச் செய்து கொள்ள வேண்டும். ரேபிஸ் தொற்று நாய்க்கடியால் மட்டும் ஏற்படுவதில்லை, வெளவால், பூனை, செம்மறி ஆடு போன்றவற்றாலும் ஏற்படும். நாய்க்கடிக்கு எங்கெல்லாம் மருத்துவம் செய்யலாம் என்பது போன்ற பல தகவல்களையும் தருகிறது இந்த நூல். மொத்தத்தில் நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, சாகுல் என்கிற சிறுவன் மூலம் கதை பாணியில் இந்த விழிப்புணர்வு நூல் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. - திலகா

புல்லட் வைரஸ்
திருநாவுக்கரசு தர்மலிங்கம்
அறிவியல் வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9751456001, 9789321056

SCROLL FOR NEXT