இலக்கியம்

தாலி கட்டும் சடங்கு குறித்த வரலாறு | நம் வெளியீடு

செய்திப்பிரிவு

டாக்டர் மா.இராசமாணிக் கனார் எழுதிய நூல்களில் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நூற்றாண்டுகள் கடந்தாலும், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழரிடையே தாலி கட்டும் வழக்கம் தோன்றிய வரலாறு குறித்து அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஓர் ஆர்வம் எழுகிறது.

அன்றைய திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி இன்றளவும் விவாதங்களில் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. தமிழகம் போற்றும் அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார், இலக்கிய ஆராய்ச்சியிலும் பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் மிகுந்த புலமை மிக்கவர். பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றியவர்.

சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, சிலப்பதிகாரக் காட்சிகள், தமிழ் மொழி இலக்கிய வரலாறு, தமிழ் அமுதம், தமிழகக் கலைகள் உள்ளிட்ட அரும்பெரும் தமிழ் நூல்களை பொக்கிஷமாக அளித்தவர். அவர் அளித்த நூல்கள் பலவும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், வரலாற்றை அறிய விரும்புவோருக்கும், இலக்கிய சுவையில் நாட்டம் கொண்டோருக்கும் பயன்பட்டு வருகிறது.

‘தமிழர் திருமணத்தில் தாலி’ எனும் இந்நூல், சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், 19ஆம் நூற்றாண்டு என வரலாற்று அணுகுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தமிழர் பண்பாட்டில் முக்கிய இடம்பிடித்துள்ள தாலி கட்டும் சடங்கு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.

தமிழர் திருமணத்தில் தாலி
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.100
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

தமிழ் நூல் விற்பனையில் உச்சம் தொட்ட சாகித்ய அகாதமி | திண்ணை: நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் சாகித்ய அகாதமியின் சென்னை அலுவலகம் ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்பிலான நூல்களை விற்றுள்ளதாக அகாதமியின் செயலாளர் கே. சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். இது, ஏனைய மொழிகளுக்கான நூல் விற்பனைத் தொகையைவிடப் பல மடங்கு அதிகமானது.

சென்னை அலுவலகத்திற்கு அடுத்து கொல்கத்தா மண்டல அலுவலகம் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால், அங்கு விற்கப்பட்ட நூல்கள் அசாமி, பெங்காலி, போடோ, மணிப்புரி, ஒடியா, ஆங்கிலம், திபேத்தியன் என ஏழு மொழிகளுக்குரியவை.

சென்னை அலுவலம் தமிழ் நூல்களை மட்டுமே விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி தலைமை அலுவலகத்தில் ரூ.56 லட்சத்துக்கும், பெங்களூர் மண்டல அலுவலகத்தில் ரூ.7 லட்சத்துக்கும், மும்பை மண்டல அலுவலகத்தில் ரூ.9 லட்சத்துக்கும் நூல்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ஆறு மாத காலத்தில் சென்னை அலுவலகம் 91 நூல்களை மறுபதிப்பு \ பதிப்பு எனும் நிலையில் வெளியிட்டுள்ளது.

- இரா.தாமோதரன் (எ) அறவேந்தன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஆலோசனைக்குழு.

SCROLL FOR NEXT