இலக்கியம்

மீண்டெழும் இயற்கை சார்ந்த வாழ்வின் கதை | நூல் வெளி

பால்நிலவன்

நல்ல புத்தகங்களை குறைந்த விலையில் தரமாக சில பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவ்வரிசையில், Cotton candy books பதிப்பகம், ஜாக் லண்டனின் மிகச்சிறந்த நாவலான 'கானகத்தின் குரல்' நூலை மக்கள் பதிப்பாக ரூ.50க்கு வெளியிட்டுள்ளது. தமிழில் பெ.தூரன் மொழிபெயர்த்துள்ள, 120 பக்கங்கள் கொண்ட இந்நூல், குறுகிய காலத்திலேயே 2000 படிகள் விற்றுத் தீர்ந்துள்ளது.

பிரபஞ்சன் தனது அமெரிக்க பயணத்தில் ஜாக் லண்டனின் நினைவில்லத்தைச் தேடிச் சென்று, கல்லறையைப் பார்க்க மட்டுமே வாய்ப்பு கிடைத்ததைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஜாக் லண்டன் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளத்தில் விரிவாக ஆற்றிய உரையும், சமூக வலைதளத்தில் பதிவு செய்த கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. புதுமைப்பித்தன், பெ.தூரன், நா.ஜெகந்நாதன், லதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மொழியாக்கத்தில் ஜாக் லண்டன் கதைகள் தமிழில் வெளியாகியுள்ளன.

இந்நாவல், ஒருகாலத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட மனிதர்களுக்கு துணையாகச் சென்ற நாய்களைப் பற்றியது; குறிப்பாக ‘பக்’ என்னும் நாயைப் பற்றியது. சாண்டா கிளாரா பள்ளத்தாக்கில் ஒரு ஜட்ஜ் வீட்டில் சொகுசாக வாழ்ந்த பக், திருடப்பட்டு ஒரு சந்தையில் விற்கப்படுகிறது.

முதலில் கனடா அரசாங்கத்தின் சார்பில், தபால்களை சுமந்துகொண்டு பனிச்சறுக்கு பார வண்டியை இழுத்துச் செல்லவேண்டிய கட்டாயம். சோபா மெத்தைகளில் படுத்துறங்கிய நாய், உறைபனி பாதையில் மூவாயிரம்மைல்கள் வண்டியை இழுத்துச் செல்கிறது. அது வாங்கிய சாட்டையடிகளும், சக நாய்களின் கோரைப்பல் கடிகளும் பக்கின் வாழ்க்கையையே மாற்றியமைத்து விடுகின்றன.

அந்த நாய் பின்னர் தங்க வேட்டைக்கு செல்பவர்களுக்கு உதவியாயிருக்கிறது. வெல்லுவதற்கு உடல்வலு வேண்டுமென்ற உணர்வுபெற்று, அதற்கேற்ப உடல் வலுப்பெற்று, மற்றவற்றை வென்று, காட்டு நாய்களுக்கும், ஓநாய்களுக்கும்கூட சிம்மசொப்பனமாக மாறுகிறது. கானகத்தில் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த காட்டு வாழ்க்கையை, மனிதர்களுக்கு அடங்கி நடக்காத அந்த ஆதிகாலத்தை உணர்ந்து, அதை நோக்கிச் சென்றுவிடுகிறது.

கானகத்தின் குரல், உறைபனியில் சிக்கிய நாய் ஒன்றின் யதார்த்த கதையாகவும், அச்சுஅசலாக, சவால்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனின் கதையாகவும் இருக்கிறது. பெரும் சக்தியாகிக் கொண்டிருக்கும் மனிதன், ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டு, தன் பூர்வீகத்தை நோக்கி நகர்வதை உண்ர்த்துவதாகவும் இந்நாவலை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

‘பனிக்கட்டியில் கட்டுண்டு கிடந்த யூக்கான் ஆறு, இப்போது அந்தக் கட்டை உடைத்தெறிய முயன்று, பனிக்கட்டியின் அடிப்பாகத்தை தகர்த்தது; கதிரவன் மேல் பாகத்தைத் தகர்த்தான்’ என்று பெ.தூரனின் மொழியாக்கத்தில் உருவாகும் தமிழின் அழகு சொல்லிமாளாது.

ஜாக் லண்டனின் இந்நாவலில் இடம்பெறும் வடப்பிரதேச நிலப்பரப்பு சார்ந்த பதிவுகள், புவியியல் ஆய்வாளர்களுக்கு அளப்பரிய தகவல்களை அளிக்கக்கூடும். யூக்கான் ஆறு, டாக்கீனா ஆறு, டாஸன் நகரம், அவிந்த எரிமலைகள் என அவர் பல்வேறு இடங்களைக் குறிப்பிடுகிறார். இயற்கை என்னும் பேருருவத்திற்கு எதிரே மனிதனை சிறு அணுவாக அவர் குறிப்பிட்டாலும், மனிதன் தன் இருப்பின் தேடலையும் அவர் உணர்த்தத் தவறவில்லை.

கானகத்தின் குரல் ஜாக் லண்டன் (தமிழில் பெ.தூரன்)
விலை ரூ.50
Cotton Candy Books
தொடர்புக்கு: 9629008192.

- தொடர்​புக்கு: sridharan.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT