இலக்கியம்

வரலாற்றுப் பொக்கிஷம் | நம் வெளியீடு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ. ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூலில், வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்
தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி இந்நூல் தெரிவிக்கிறது.

புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள். இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம் நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக நூலில் கூறப்பட்டுள்ளது.

கி.பி.300 முதல் கி.பி.590 வரையிலான களப்பிரர்கள் ஆட்சி, முதல் பாண்டியப் பேரரசு, பல்லவர்கள் காலம், பிற்காலச் சோழப் பேரரசு என காலவரிசைப்படி புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை வரிசைப்படுத்தியுள்ள நூலாசிரியர், பாண்டியப் பேரரசு வீழ்ச்சி பற்றியும், அதற்குப் பின் விஜயநகர ஆட்சியின் கீழ் புதுக்கோட்டை ஆளப்பட்டது பற்றியும் அழகியல் தன்மைகளோடுத் தொகுத்துத் தந்துள்ளார்.

புதுக்கோட்டைத் தொண்டைமான் பரம்பரையினர் தோற்றுவித்த புதுக்கோட்டை சமஸ்தானம் பற்றிய வரலாறு, இந்நூலின் இரண்டாம் பகுதியாக வந்துள்ளது. கி.பி.17ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல், இந்திய ஒன்றியத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானம் 1948இல் இணைக்கப்பட்டது வரையிலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முழுமையான வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல், சமூக, பொருளாதார, இலக்கியத் தளங்களிலும், நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு பற்றி நூலில் ஏராளமான தகவல்கள் உள்ளன. தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உட்பட நாட்டுக்கு புதுக்கோட்டை தந்த தலைவர்கள் பற்றியும், விராலிமலை, சித்தன்னவாசல், திருமயம், பொன்னமராவதி என வரலாற்றுச் சிறப்பு மிகுந்த மாவட்டத்தின் ஊர்களைப் பற்றிய தகவல்களும் இந்நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.

விலங்கியல் துறையில் பயின்றவரான நூலாசிரியர் ஜெ. ராஜாமுகமது, வரலாற்று ஆய்வை இவ்வளவு நேர்த்தியாக செய்துள்ளது வியப்பளிக்கிறது. அவரிடம் நிறைந்திருக்கும் அறிவியல் கண்ணோட்டம் காரணமாகவே இவ்வளவு சிறப்பு மிகுந்த வரலாற்று நூலை அவரால் எழுத முடிந்துள்ளது.

காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட, உறுதியான ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூல், ஒரு வட்டார வரலாறு எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் நூல் என்றே சொல்ல வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை மட்டுமன்றி, தமிழ்நாட்டின் வரலாற்றையும் கூட துல்லியமாக புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
டாக்டர் ஜெ.ராஜா முகமது
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.500
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

நூல் வெளியீடு | திண்ணை: ‘சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்' நூல் வெளியீட்டு விழா, இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில், 26-10-2025 (ஞாயிறு) மாலை 5.30க்கு திருச்சி, ஹோட்டல் அருண் வசந்தம் ஹாலில் நடைபெற உள்ளது. கவிஞர் கோ. நவமணி சுந்தரராஜ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் தங்கம் மூர்த்தி, இரா.விஜயலட்சுமி, சூர்யா சுப்பிரமணியன், யோகா விஜயகுமார், ஜனனி அந்தோணிராஜ், கவிஞர் பா.தென்றல் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். நூலின் தொகுப்பாசிரியர் சண் தவராஜா ஏற்புரை ஆற்றுகிறார்.

உரையாடல் | ‘திராவிட சினிமா: திரையாடல் உரையாடல்' நிகழ்வு, தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையம் ஆகியவை சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 27-10-2025 முதல் 31-10-2025 வரை நடைபெற உள்ளது.

துணைவேந்தர் இரா.சுப்பிரமணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், எஸ்ஆர்எம் அறிவில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் கோவி.கனக விநாயகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பாவேந்தர் பாரதிதாசன் இருக்கைப் பொறுப்பாளர் பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் செ.சௌந்தரி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நல்லி - திசை எட்டும் விருதுகள்: ‘நல்லி நிறுவனம்’, ‘திசை எட்டும்’ மொழியாக்கக் காலாண்டிதழ் ஆகியவை சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனிவாச ராமானுஜம் (அசோகா் - ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம்), சையது ரபீக் பாஷா (ஃகாலிப் கவிதைகள் - உருதில் இருந்து தமிழ்), அனுராதா ஆனந்த் (அழிக்க முடியாத ஒரு சொல் - ஆங்கிலத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (ஆகாசம் நா வசம் - தமிழிலிருந்து தெலுங்கு), ஜமுனா கிருஷ்ணராஜ் (பாரதி கி காவ்ய மாலா - தமிழிலிருந்து ஹிந்தி) ஆகிய முதல்நிலை மொழிபெயா்ப்பாளா்கள், சுகுமாரன் (தாத்தாவின் மூன்றாவது டிராயா் - ஆங்கிலத்திலிருந்து தமிழ்), டாக்டா் டி.ராஜேந்திரன் (கிராண்ட் ஃபாதா் ஆப் தி உட்- தமிழிலிருந்து ஆங்கிலம்) ஆகிய சிறாா் இலக்கிய மொழிபெயா்ப்பாளா்கள் என 7 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்நிலை மொழிபெயா்ப்பாளா்களுக்கு விருதுடன் ரூ.20 ஆயிரம், சிறாா் இலக்கிய மொழிபெயா்ப்பாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா, சென்னை டி.டி.கே. சாலையிலுள்ள நாரத கான சபா சிற்றரங்கில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT