இலக்கியம்

காயங்களின் கலைமொழி | நூல் நயம்

செய்திப்பிரிவு

பிரித்தானியர்களின் காலனிய ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது மியான்மர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட பர்மாவும் ஒன்றாகும். பர்மாவில் காலனி ஆட்சியிலிருந்து 1948இல் சுதந்திரம் பெற்றபிறகு சில ஆண்டுகள் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்தாலும், பல இனப்பிரிவினரிடையே மோதல்கள், அரசியல் நிலைகுலைவு இருந்த வண்ணமே இருந்தன. அதன்பிறகு, 1962இல் ஜெனரல் நெய் வின் தலைமையில் பர்மாவில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ராணுவ ஆட்சியின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது ‘காயங்களால் மறைக்கப் பட்டவர்கள்’ என்னும் இக்கவிதை நூல். 13 கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் இத்தொகுப்பை பா.இரவிக்குமார் மற்றும் ப.கல்பனா தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

இக்கவிதை நூல் வெறும் தனிமனித வேதனைகளை வெளிக்காட்டும் நூல் அல்ல. அது ஒரு கூட்டு சமூகத்தின் காயங்களைக் கலைமொழியாக்குகிறது. இந்தக் கவிதைகளில் ராணுவ அடக்குமுறைக்கு எதிரான பர்மிய மக்களின் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள், மரணம் மற்றும் சோகம் போன்றவற்றை திட்ஸர் நி அவர்களின் பெயரிடப்படாத கவிதையில் உணர முடிகிறது. ‘என் கனவில்கூட வாழ்க்கை சமதளமற்றதாகிறது / பரிசளிக்கப்பட்ட காலணிகள் / பாதங்களில் பொருந்துவதில்லை’ என்று கவிதையில் அவர் வெளிக்காட்டுகிறார்.

நவீன இலக்கியத்தில் பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பேசும்போது, புத்தர் எனும் படிவத்தைக் கையாண்டு, அதன்மூலம் கருத்தைக் கூறும் பாணி தொடர்ச்சியாகக் காணப்பட்டு வருகிறது. அவ்வாறே அன்பைப் போதிக்கும் புத்தரின் பெயரால் அடக்குமுறை செய்யப்படுவதை ‘புத்தருடன் ஒரு சந்திப்பு’ கவிதையில், ‘பர்மிய ராணுவத்தின் / அனைத்துக் குற்றங்களுடனும் / ஒருபோதும் சிறையிலிருந்து / வெளியேற முடியாது புத்தரால்/’ என டின் மோ கவிதை வழியே அறிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பர்மியமக்களின் துயரங்களை அறிந்துகொள்ளும் வகையில் இத்தொகுப்பை வாசகர்கள் அணுகலாம். - து.லோகபிரியா முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை மாநிலக் கல்லூரி.

காயங்களால் மறைக்கப்பட்டவர்கள்
பர்மியக் கவிதைகள்
தமிழில்: ப.கல்பனா,
பா.இரவிக்குமார்
பரிசல் புத்தக நிலையம்
விலை ரூ.200
தொடர்புக்கு: 93828 53646

துயரம் தரும் முதலீடு: தலைப்புக்கு ஏற்றாற்போல, பேராசையால் விளையும் பெருநஷ்டங்களைப் பேசுகிறது இந்த நாவல். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களில் பலர், உழைப்பினில் இருந்து அல்லாமல் வேறு வழிகளில் பணப் பலன்கள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் என்பதனை இதில் சுட்டுகிறார் நாவலாசிரியர் இல.அம்பலவாணன். அதன் பின்னே இருக்கும் அவர்களது துயரங்களையும் தேவைகளையும் கூடச் சொல்லிச் செல்கிறார்.

நிதி நிறுவனம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் பலர் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பார்களே என்ற நம் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிற வகையில், வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு மனிதர்கள் பற்றி கதை பேசுகிறது. புதுச்சேரி, காரைக்கால் வட்டாரங்களை, அவற்றின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களைத் தமது எழுத்தில் விவரித்த நாவலாசிரியர், பிற்பாடு கோவை, சேலம் என வெவ்வேறு ஊர்களின் பின்னணியில் சம்பவங்களை அடுக்கியிருக்கிறார்.

ஏமாற்றிய ஒன்று அல்லது சில நபர்கள் தவிர, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பல நிலைகளில் இருப்பதையும் அவர்கள் படும் பாட்டையும் பேசுகிறது இந்நூல். அவ்வனுபவங்களை அறிய விரும்புவோருக்கு ‘இவ்வுலகம்’ பிடிபடும்! - பா.உதயசங்கரன்

ஆசைக்கோர் அளவில்லை
இல.அம்பலவாணன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9840480232

காலத்தின் தேவை பெளத்தப் பேரறம்: கி.மு. 6ஆம் நூற்றாண்டில் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பெளத்த சிந்தனைகளும் அறிவுசார் கோட்பாடுகளும் நடைமுறையில் இருந்தன. இவை பல்வேறு பெளத்த அறநூல்கள் தோன்ற காரணமாக இருந்தன. அப்படி வந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் உலகம் போற்றும் துறவற நூலான மணிமேகலை. தமிழில் தோன்றிய முதல் பெளத்த அறவுரை நிறைந்த காப்பியமும் இதுதான் என்கிறார் நூலாசிரியர்.

தமிழகத்தில் பெளத்த மதம் கிளைபரப்பி செழித்திருந்ததை இந்த நூல் ஆதாரத்துடன் விவரிக்கிறது. பெளத்த தத்துவமான தீகநிகாயம் கூறும் கருத்துகளை உட்கட்டமைப்பாகக் கொண்டதே மணிமேகலை காப்பியம். அசோதர நகரத்தை ஆண்ட ரவிவர்மன், அமுதபதி தம்பதியரின் மகள் இலக்குமியும் சீதரன், நீலபதி தம்பதியின் மகன் ராகுலனும் மணமுடித்த நிலையில் பாம்பு தீண்டி ராகுலன் இறந்துவிட, மறுபிறப்பில் இலக்குமி மணிமேகலையாகவும், ராகுலன் உதயகுமாரனாகவும் பிறக்கின்றனர். முன்ஜென்மக் காதலனை தெரிந்ததும், இல்வாழ்வை புறக்கணித்து துறவறம் பூணுகிறாள் மணிமேகலை.

இதில் வரும் சுதமதி, பசு வளர்த்த ஆபுத்திரன், காயசண்டிகை உள்ளிட்ட பல பாத்திரங்களும், அன்னம் தந்த அமுதசுரபியும் அறம் பேசும் தனித்துவ மிக்கவையாக உள்ளன. இவை நம்மை மீண்டும் சீத்தலைச் சாத்தானரின் மணிமேகலையை வாசிக்க தூண்டுகின்றன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்த மதம் துடைத்தெரியப்பட்ட காலத்தில் அதனை மீட்டுருவாக்கம் செய்வதி்ல் அயோத்திதாசரின் பங்களிப்பை இந்நூல் நினைவூட்டுகிறது. புத்தர் கூறும் அறவுரைகள் கிட்டத்தட்ட வள்ளுவர் நெறிகளுக்கு ஒத்ததாக இருக்கிறது. பெளத்தம் போதித்த அன்பும் அறமும் இன்று காலத்தின் தேவையாக இருக்கிறது. - பா.அசோக்

மணிமேகலையின் பெளத்தப் பேரறம்
ஆசிரியர்: அரங்கமல்லிகா
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் வெளியீடு
விலை: ரூ.300, தொடர்புக்கு: mythforg@gmail.com

SCROLL FOR NEXT