தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்புகள் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. பல்வேறு நாடுகளின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என வருவதைப் போல மலையாளம், கன்னடம், வங்கமொழி உள்ளிட்ட இந்திய மொழி இலக்கியங்களும் அதிகமாகவே மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சாகித்ய அகாதமி சமீபத்தில் வெளியிட்டிருக்கிற மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று, ‘ஒரு பெண்மானின் கண் - மேலும் பிற கதைகள்’ எனும் பஞ்சாபி சிறுகதைகள் தொகுப்பு.
'பஞ்சாபின் செக்காவ்' எனப்படும் எழுத்தாளர் மோஹன் பண்டாரி எழுதியுள்ள கதைகள் இவை. சாகித்ய அகாதமி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவரின் அழுத்தமான ஏழு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது என்றாலும், ஒவ்வொரு கதையும் அதன் உள்ளடக்கம், கதைபேசும் பொருள், அதன் போக்கு என அனைத்திலும் ஒரு நாவலுக்கான அடர்த்தி யையும் விஷயங்களையும் கொண்டுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளிலுமே, எண்பதுகளின் பிற்பகுதியில் பஞ்சாப் சந்தித்த காலிஸ்தான் பிரச்சினை, அது மக்களிடம் ஏற்படுத்திய தாக்கங்கள், பிரிவினை மோதல்கள் உள்ளிட்டப் பிரச்சினைகள் ஏதோ ஒரு ரூபத்தில் கண்முன் வந்து நிற்கின்றன. வன்முறை உண்டாக்கும் அச்சத்தை எதிர்கொள்கிற ஆண், பெண் கதாபாத்திரங்களின் வழியே அவர்களின் உணர்வுகளை ஆழமாகவும் அதிர்ச்சியோடும் சித்தரிக்கப்பட்டுள்ள சூழல், இக்கதைகளின் வீரியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
முதல் கதையான ‘புறா’, ஒரு நாட்டுப்புறக் கதையின் தொனியுடன் தொடங்குகிறது. நம்மூர் பொட்டுக் கட்டும் பழக்கத்தை ஞாபகப்படுத்தினாலும், இக்கதை காட்டும் நிலமும் சூழலும் பண்பாடும் வேறானது. சிறுவயதிலேயே வற்புறுத்தப்பட்ட துறவறத்துக்கு உட்படுத்தப்படும் சக்தி தேவி எதிர்கொள்கிற அகச்சிக்கல்கள், வன்முறையாக மாறுவதையும், அவளின் ஆன்மா ஒரு புறாவுக்குள் இருக்கிறதென நம்பும் அவளின் நம்பிக்கையும், ஒரு கட்டத்தில் அப்புறா கொல்லப்படும்போது அவள் கேட்கிற கேள்வியுடன், அவள் ஆன்மாவைப் போலவே கதையும் முடிந்து விடுவது, வாசகனுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இக்கதையின் பின்னணியில் விவரிக்கப்படும் சூழல் நாம் அறியாதது.
தலைப்புக் கதையான ‘ஒரு பெண்மானின் கண்’ மதக்கலவரங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் பெண், உயிர் பயத்தில் நடுங்கியபடி ராணுவ அதிகாரியிடம் உதவி கேட்டு வருகிறார். அந்த இரவில் வெளியே வன்முறை நடந்து கொண்டிருக்க, சக அதிகாரிகளுடன் மது அருந்தியபடி இருக்கிற அவர், அவளுக்கு உதவ முன் வருகிறார்.
தனது படுக்கையறையில் அவளைத் தூங்க வைக்கிறார். கையில் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் அதிகாரி, கடைசியில் எதிர்பாராத சம்பவத்தின் வழியே குற்ற உணர்ச்சியில் தவிப்பதை அக்கதைக் கடத்துகிறது. கதை முடிந்த பின்னும் அந்த இரக்கம் கொண்ட அதிகாரியின் வேதனையை, அவர் எதிர்கொள்ள இருக்கிற பிரச்சினையை விட, அழுத்தமாகச் சொல்லிப் போகிறது.
‘என்கிற...’ என்ற கதை, தீவிரவாதத்துக்கும் போலீஸுக்குமான மோதலில் நல்மனம் கொண்ட அப்பாவிகளும் இரக்கமின்றி கொல்லப்படுவதைச் சொல்கிறது. இக்கதையை வாசித்து முடித்ததும், பிரபு தயாள் சிங் என்கிற அந்தக் கதாபாத்திரம் மீது நமக்கு ஏற்படுகிற அனுதாபமும் ஆச்சரியமும்தான் இக்கதையின் வெற்றி.
‘உடைப்பு’ கதை, முஸ்லிம் எதிர்ப்பு என்பதில் தொடங்கி, 1984இல் நடந்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்கள் வரை நடக்கிறது. இக்கலவரங்களால் இரட்டைப் பாதிப்புக்குள்ளாகும் நாயகன் ஹர்சந்த்தின் போராட்டத்தைப் பேசுகிறது. இதேபோல ‘தலையை வாரிக் கொள், என் கண்ணே!’, ‘பகிர்வு’, ‘காயம்’ ஆகிய கதைகளும் கனமான விஷயங்களை அழுத்தமாகச் சொல்லுகின்றன.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிற பென்னேசனின் மொழிநடை, கதைகளைத் தடையின்றி வாசிக்க உதவுகிறது. நாம் பார்த்திராத வாழ்வையும் சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பு வேறொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
ஒரு பெண்மானின் கண் மேலும்
பிற கதைகள்
மோஹன் பண்டாரி
சாகித்ய அகாதமி
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044-24311741
- தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in