காந்தியச் சிந்தனையாளரும் சமூகத் தத்துவவியலாளருமான தரம்பால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் செயல்பாடு குறித்து நீண்ட கால ஆய்வில் ஈடுபட்டவர். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகே இந்தியாவின் வரலாறு பேசப்படுவதாகச் சொல்லும் இவர், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக – சிலவற்றில் மேற்கத்திய நாடுகளையே விஞ்சக்கூடிய வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்று உறுதிபடஉரைக்கிறார்.
40 ஆண்டுகளாக இவர் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய கட்டுரைகள், அளித்த நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பே ‘இந்தி யாவைக் கண்டடைதல்’ எனும் நூல். 2003இல் வெளியான இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த் திருக்கிறார் தர் திருச்செந்துறை.
லண்டனில் உள்ள இந்தியா அலுவலக நூலகம், பிரிட்டிஷ் நூலகம், எடின்பரோவில் உள்ள ஸ்காட்லாந்து தேசிய நூலகம் உள்ளிட்ட பல்வேறு நூலகங்கள் - ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தன் கருத்துக்கு வலுசேர்த்திருக்கிறார் தரம்பால். இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், வானியல், கணிதம் போன்றவை குறித்து மேற்கத்திய நாட்டினரே பெரும் மதிப்புக் கொண்டிருந்ததாக தரம்பால் குறிப்பிட்டிருக்கிறார்.
மன்னராட்சி முறையில் இருந்த நிலப்பிரபுத்துவம், வர்ணாசிரம பாகுபாடு போன்றவை மக்களைச் சுரண்டியதையும் அடிமைப்படுத்தியதையும் பெரிதாகக் கவனப்படுத்தாமல், கிராம வளர்ச்சி - மேம்பாடு போன்றவை குறித்த தரவுகள் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள வரலாறுகள் பலவகை என்றால் இந்நூல் அதில் ஒரு வகை. ஆனால், முழுமையான இந்திய வரலாற்றை இந்த நூலின் மூலமாக மட்டுமே கண்டடைந்துவிட முடியாது. - ப்ரதிமா
இந்தியாவைக் கண்டடைதல்
தரம்பால்
தமிழில்: தர் திருச்செந்துறை
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 8148066645
ஒரு மனசாட்சியின் வரலாறு: திராவிட இயக்கம் குறித்து அறிய விரும்புபவர்கள் ‘வாலிபப் பெரியாரை’த் தவிர்க்க முடியாது. பெரியார் ஈ.வெ.ராவின் கருத்துகளை இளம் வயதிலேயே அத்தனை உயிர்ப்புடன் விளக்கும் திறன் பெற்றிருந்த ஏ.வி.பி.ஆசைத்தம்பிதான் இந்த அடைமொழிக்கு உரியவர்; திமுகவை உருவாக்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவர்.
இனம், மொழி, சமூக உரிமைகளைச் சற்றும் விட்டுக்கொடுக்காத ஆசைத்தம்பி, திமுகவுக்கு மனசாட்சியாக விளங்கினார் என்றால் மிகையில்லை. திமுக துணைப் பொதுச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தாலும், திமுகவை அரண் செய்த வன் தொண்டராகத்தான் திராவிட இயக்க ஆளுமைகளின் நினைவுகூரல்களில் ஆசைத்தம்பி பதிவாகி யுள்ளார்.
1924இல் பிறந்த ஆசைத்தம்பியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு விரிவான அளவில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளரும் ஆய்வாளருமான செ. அருள்செல்வன் இப்பணியைச் செய்துள்ளார். ஆசைத்தம்பியின் குடும்ப வரலாறு, பொறுப்புகளிலிருந்து விலகாத இளமைக்கால வாழ்க்கை, அரசியல் அனுபவங்கள், அவர் நடத்திய ‘தனி அரசு’ நாளிதழ் தலையங்கங்கள், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவர் ஆற்றிய உரைகள், சக உறுப்பினர்களுடனான வாதங்கள், அரிய புகைப்படத் தொகுப்பு போன்றவற்றை மூன்று பாகங்களாக இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெறுதல், பட்டியல் சாதியினரின் கோயில் நுழைவு முயற்சிகள், மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆகப் பெயர் சூட்டப்பட்டதுபோன்ற நிகழ்வுகள் அன்றைய தலைவர்களால் எதிர்கொள்ளப்பட்ட விதத்தையும் இந்நூல் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. - ஆனந்தன் செல்லையா
வாலிபப் பெரியார்
ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாழ்க்கை வரலாறு; செ.அருள்செல்வன்,
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-78
விலை: ரூ.660
தொடர்புக்கு: 9940446650.