இலக்கியம்

பாண்டிய நாட்டின் வியப்பூட்டும் வணிக வரலாறு | நூல் வெளி

ம.சுசித்ரா

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்வதில் கீழடி அகழாய்வு முந்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், நகரமயமாதல், பொது நிர்வாகம், வணிகம் முதலானவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகத் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனர் என்பதையும் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் உரக்கச் சொல்லும் சான்றாக இது அமைந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள்’ புத்தகம் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் முனைவர் வெ.வேதாசலம், தொல்லியல், கலை, வரலாற்றாய்வில் மூன்று தசாப்தங்கள் அனுபவம் மிக்கவர்.

கரூர், கோவலன்​பொட்​டல் (மதுரை), திருத்​தங்​கல், மாங்​குடி, தொண்​டி, அழகன்​குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்​களில் உள்ள தொல்​லியல் தலங்​களில் நடை​பெற்ற அகழாய்​வு​களில் ஈடு​பட்​ட​வர். பாண்​டிய நாடு என சங்​க​காலம் தொட்டு அறியப்​படும் புதுக்​கோட்​டை, திண்​டுக்​கல், தேனி, மதுரை, சிவகங்​கை, இராம​நாத​புரம், விருதுநகர், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களை அடக்​கிய பகு​தி​களின் வணிக பண்​பாட்​டினை உள்​ளும் புற​மு​மாக ஆராய்ந்து இந்​நூலை எழு​தி​யுள்​ளார்.

செழித்​தோங்​கிய மக்​கள்: தமிழ் பிராமி எழுத்​துகள், அசோகன் பிராமி எழுத்​துக்​கள் இவற்​றில் எது காலத்​தால் முந்​தி​யது என்​கிற தேடலும் மோதலும் நெடுங்​கால​மாக நீடித்து வந்​தது. இந்​நிலை​யில், கீழடி அகழாய்​வில் கி.​மு. 6ஆம் நூற்​றாண்​டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்​துகளின் வடிவங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. இதன் வழி​யாகத் தமிழ் பிராமி எழுத்​துக்​களின் பழமை நிரூபிக்​கப்​பட்டு இருக்​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக இந்​நூலில், ‘பண்​டு​தொட்​டுப் பாண்​டிய​நாடு’ என்​கிற சொற்​கள் அசோகன் (கி.​மு.273-236) கல்​வெட்​டு​களி​லேயே காணக்​கிடைப்​ப​தாக பதிவு செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இதன் வழி​யாகத் தமிழின் தொன்மை மீண்​டும் உறுதி செய்​யப்​பட்​டிருக்​கிறது. தமிழ் பிராமி கல்​வெட்​டு​கள் உள்ள குகைத்​தளங்​கள் பாண்​டிய நாட்​டில்​தான் அதி​கம் காணப்​படு​வ​தாக ஆசிரியர் அறு​தி​யிட்​டுக் கூறுகிறார். இந்​தக் கல்​வெட்​டுக்​களில் வணி​கம், வணி​கர்​கள் பற்​றிய குறிப்​பு​கள் காணப்​படு​கின்​றன.

அவை வெற்று பழம்​பெருமை பேச​வில்​லை. மக்​களின் வாழ்​வியலை, அவர்​களைச் செழித்​தோங்​கச் செய்த உப்​பு, இரும்​பு, ஆடை, பச்​சைக்​கற்​பூரம் சார்ந்த வார்த்​தகத்​தைப் பறை​சாற்​றுகின்​றன. அதி​லும் சங்​க​காலத்​தில் கீழடி நெசவுத் தொழில் கூட​மாக விளங்​கி​யிருக்​கிறது. கீழடி​யில் உற்​பத்தி செய்​யப்​பட்ட ஆடைகள் வட இந்​தி​யா​வுக்​கும், ரோமானிய நாடு உள்​ளிட்ட அயல்​நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்​யப்​பட்​டிருக்கின்றன.

‘பள்​ளி’ எனும் தமிழ்ச்​சொல்​லின் ஆணிவேர் சமண சமயத்​தில் உள்​ளது. இது​போல் ‘நியமம்’, ‘ஆவணம்’ முதலான சொற்​களின் ஊற்​றுக்​கண்​ணைத் தேடிச் செல்​கிறது இந்​நூல். மதுரை​யில் நாகமலைப் புதுக்​கோட்​டைக்கு அரு​கில் உள்ள பெரு​மாள்​மலை சமணர் குகைத்​தளம் நாடறிந்த பண்​பாட்​டுப் பீடம் ஆகும். இத்​தகைய சமய அடிப்​படையி​லான தொடர்பு தவிர, வணிக ரீதி​யிலும் சமண மக்​களு​டன் தமிழர்​கள் தொடர்​பில் இருந்​துள்​ளனர்.

நாணய​மும் இலக்​கிய​மும்: பண்​ட​மாற்று முறை​யில் வணி​கம் நடை​பெற்று வந்த காலத்​திலேயே தங்​கம், வெள்ளி முதலிய நாண​யங்​கள் மூலம் வர்த்​தகம் செய்​யும் முறை பாண்​டிய​ நாட்​டில் நடை​முறைக்கு வந்​து​விட்​டது. இதற்கு ஆதா​ர​மாக கி.​மு.3, 2, 1 ஆம் நூற்​றாண்​டு​களைச் சேர்ந்த சங்க இலக்​கிய பாடல்​கள், சங்​க​காலப் பாண்​டிய மன்​னர்​கள் வெளி​யிட்ட காசுகள் ஆதா​ர​மாகத் திகழ்​கின்​றன.

அதி​லும் சங்​க​காலப் பாண்​டிய மன்​னர்​கள் வடநாட்​டினருட​னும், கிரேக்க, ரோமானிய நாட்​டினருட​னும் அதிக அளவில் வணி​கம் செய்து வந்​திருப்​பது வியப்​பூட்​டு​கிறது. சங்​க​காலம் தொட்டு 15ஆம் நூற்​றாண்டு வரை பாண்​டிய நாட்​டில் பல பரி​மாணங்​களைக் கண்ட வணிக வளர்ச்​சி​யை, பறைசாற்றும்​​ நூலாக இது ​திகழ்​கிறது.

‘பாண்டிய நாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள் (கி.மு.400-கி.பி.1400)’
முனைவர் வெ.வேதாசலம்
தனலட்சுமி பதிப்பகம்
விலை:ரூ.400, தொடர்புக்கு: 9894578440

- தொடர்​புக்கு: susithra.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT