இலக்கியம்

வெகுண்டு எழுந்த ஏழு குடும்பங்கள்

நிவேதிதா லூயிஸ்

ராமச்சந்திரகுடி என்னும் கிராமத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை ‘அனிதா’ என்னும் ஆசிரியர் மனதுக்குள் அசைபோட்டு, தன் வாழ்க்கையைப் பகிர்வதே ‘இருளி’ நாவல். அனிதா தன் வாழ்க்கையை முன்னும் பின்னுமாக சென்று பார்த்து அலசும் ‘நனவோடை’ உத்தியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

மனிதக் கைகளால் மலம் அள்ளி அப்புறப்படுத்தும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களும் ஆண்களும்தான் கதை மாந்தர்கள். 1993ஆம் ஆண்டு இந்தியாவில் கையால் மலம் அள்ள தடை விதித்து சட்டம் வருவதற்கு முன்பாக கிராமம் ஒன்றில், மலம் அள்ள ‘விதிக்கப்பட்ட’ ஏழு குடும்பங்களின் கதையை சொல்கிறது இருளி.

மலம் வழித்து, தலையில் சுமந்து செல்லும்போது, தங்கள் கூந்தலில் மலமும் சிறுநீரும் சிந்தும் அருவருப்பை உதற, அனிதாவின் சுற்றத்துப் பெண்கள், தலையை எப்போதும் மொட்டை அடித்துக்கொள்வார்கள் என்று படிக்கும்போது அதிர்ந்து போகிறோம். படிக்கச் செல்லும் இவர்களின் குழந்தைகளைப் படிக்கவிடாமல் ஆதிக்க சாதி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒதுக்க, ‘இனி இந்த இழிவேலை செய்யமாட்டோம்’ என்று ஏழு குடும்பங்களும் வெகுண்டு எழுகின்றன. கிராமம் நாறிப் போகிறது.

இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக்கி கொடுமைப்படுத்தும், எகிப்தின் பார்வோன் மன்னனின் கொட்டத்தை அடக்க, மோசே வழியாக கடவுள் ஏவிய வெட்டுக்கிளிகள் போல, இந்த கிராமத்தில் ஈக்களின் படையெடுப்பு நிகழ்வது விவரிக்கப்படுகிறது.

இது, விவிலியத்தின் நியாயத் தீர்ப்பை கிராமத்துக்குக் கடவுள் வழங்குவதுபோல உள்ளது. மலம் அள்ளும் குடும்பங்கள் தங்கள் உரிமைகளை மீட்டுக் கொண்டனர் என்று மகிழ முடியவில்லை. வாயில்லா ஜீவன் களான பன்றிகளை வரவழைத்து, அவற்றை மனித மலத்தைத் தின்ன வைப்பது என்று ஊர்த்தெரு முடிவெடுக்கிறது.

இது எவ்வளவு பெரியக் கொடூரம்? ‘இருள் கவியும்போதெல்லாம் விடியல் வந்தே தீரும்’ என்பதே வாழ்வின் உண்மை. அனிதாவுக்கும் நந்தினி டீச்சர், ஆலிஸ் சிஸ்டர் மூலம் விடியல் வருகிறது. பெண்ணுக்கான விடுதலையைப் பெண்களே கொண்டு வருவார்கள் என நூலில் உணர்த்துகிறார் சாரோன். திண்டிவனம் விடுதியில் தங்கிப் பயிலும் அனிதா, வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.

ஆனால் அவர் பின்னாளில் சந்திக்கும் ராமச்சந்திரகுடியின் ஆதிக்கசாதிக் குடும்பத்தினன், அவரைப் பழைய நினைவுகளில் தவிக்கவிடுகிறான். அந்த இன்னலை எப்படி பன்றியின் துணை கொண்டு அனிதா வென்றெடுக்கிறார் என்பதே கதை. இருளி என்றால் பன்றி என்று பொருள். சக மனிதனின் கைகளால், தனதுமலத்தை அள்ளச் சொல்கிற காட்டுமிராண்டித்தனம் என்பது சாதிய இழிவின் அப்பட்டமான அத்துமீறல்.

அதை எப்போதோ அனுமதித்தவர்கள், அதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர்கள், அதைத் தட்டிக்கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் என, சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும், வழித்தோன்றலும் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆண்டாண்டு காலமாக இங்கு நடந்து கொண்டிருக்கும் சாதிய அநீதிக்கு எதிராகக் குறைந்தபட்ச குரலையாவது எழுப்பவேண்டும். அதைத்தான் இருளி நமக்குச் சொல்கிறது.

இருளி
சாரோன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9942511302

- தொடர்​புக்கு: niveditalouis@gmail.com

SCROLL FOR NEXT