இலக்கியம்

உறவாடும் ஹைக்கூ | நூல் நயம்

செய்திப்பிரிவு

ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ, தமிழிலும் தனக்கென்ற வாசகர் பரப்பைக் கொண்டுள்ளது. அன்றாட நிகழ்வுக்கும் அதிலிருந்து வெளிப்படும் செய்திக்குமான முரண்பாட்டைக் கவிஞர் சராசரியாக மூன்று வரிகளில் கூறுவதுதான் தமிழ் ஹைக்கூவாக இருக்கிறது. திரைப்பட இயக்குநரான என். லிங்குசாமிக்கும் ஹைக்கூ கவிதைகளுக்குமான உறவு பரவலாக அறியப்பட்ட ஒன்று.

‘இஸ்திரி போடும்/தொழிலாளியின் வயிற்றில்/சுருக்கம்’ என்கிற முதல் கவிதையிலேயே வாசகர்களது கவனத்தை அவர் ஈர்த்தார். ’லிங்கூ’ என்கிற தலைப்பில் அவரிடமிருந்து இதுவரை இரண்டு ஹைக்கூ தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தற்போது ‘லிங்கூ-3: பெயரிடப்படாத ஆறுகள்’ வெளியாகியுள்ளது. ஹைக்கூ மீது தேவையற்ற சலிப்புக் கொண்டிருப்பவர்களைக் கூட எளிதில் தன்வசப்படுத்திக்கொள்கிற வகையில் பல கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இயற்கை நிகழ்வுகளின் மீது ஒருபோதும் தீராத ஆச்சரியம்தான், லிங்குசாமியின் பல கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது. ‘கிளையிலிருந்து வழியும் மழைத்துளி/ஒரு சூரியனையும்/சேர்த்து உதிர்க்கிறது’ என்கிற ஹைக்கூ, கதிரவனின் வெம்மை தணிந்த மழைக்கால அனுபவங்களை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறது. இயற்கையான நிகழ்வும் மனித முயற்சியும் முரண்பட்டு நிற்கும் சந்தர்ப்பங்கள் சில கவிதைகளில் காட்சி வடிவம் பெறுகின்றன.

‘தூண்டிலில் சிக்கிய மீன்/உற்றுப் பார்க்கிறது/கொக்கு’ என்கிற ஹைக்கூ, குளத்தைக் கடந்து கரைக்கு வந்து சக மனிதர்களுக்கு இடையேயான போட்டிகளையும் உணர்த்துகிறது என்றே கூறலாம். கவிஞர் கலாப்ரியாவின் அணிந்துரை, ஹைக்கூ கவிஞனாக லிங்குசாமி கொண்டுள்ள ஆளுமையைக் கூறுகிறது. இயக்குநர் லிங்குசாமி ஏன் கவிதை எழுத வேண்டும் என்கிற கேள்வி சிலருக்கு எழலாம்.

திரைக்கதை எழுத்தாளர் பிருந்தாசாரதி எழுதியுள்ள மதிப்புரையில் இதற்குப் பதில் இருக்கிறது. (பாரம் சுமந்து நடக்கிறது/வீரனை இழந்த/குதிரை) ஒவ்வொரு கவிதைக்கும் திண்டுக்கல் தமிழ்பித்தன் வரைந்துள்ள ஓவியங்கள் இந்த நூலைக் கூடுதல் சிறப்பானதாக மாற்றுகின்றன. ஹைக்கூ எழுதுபவரே அதற்கான படமும் வரைகிற ஜப்பானிய மரபைப் பின்பற்றி லிங்குசாமி முதல் தொகுப்பில் ஓவியராகவும் வெளிப்பட்டார்.

அவரது திரைப்படங்களில் இடம்பெறும் கவிதை போன்ற வசனங்கள், காட்சிகள் ஆகியவற்றில் ஹைக்கூ மனநிலையே அடிநாதமாக இருப்பதை இந்தத் தொகுப்பின் மூலம் புரிந்துகொள்ள முடியும். முன்னோடி இயக்குநர்களின் படங்களில் இடம்பெற்றுள்ள முக்கியமான காட்சிகள் தனக்குக் கவிதையாகத் தோன்றுவதாக முன்னுரையில் லிங்குசாமி கூறுகிறார். ஹைக்கூ வாசகர்களுக்கு மட்டுமல்ல, மொழியும் காட்சியும் உறவாடும் ஊடகமாகத் திரைப்படங்களை அணுக விரும்புகிறவர்களுக்கும்கூட இந்தத் தொகுப்பு சில செய்திகளைக் கொண்டுள்ளது. - ஆனந்தன் செல்லையா

லிங்கூ-3: பெயரிடப்படாத ஆறுகள்
என்.லிங்குசாமி
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.499
தொடர்புக்கு: 7338897788

யதார்த்தத்தில் காலூன்றும் கவிதைகள்: ‘‘ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தப் போல… '’ போன்ற உள்ளம் தொடும் பாடல்களுக்கு சொந்தக்காரர் கவிஞர் ஏகாதசி. புதுக்கவிதைத் தொகுப்புகள், ஹைகூ கவிதை நூல்கள், தனியிசைப் பாடல் தொகுப்புகள், நாவல், சிறுகதை என பல்வேறு நூல்களை அவர் தந்துள்ளார். 'பூவென விரிந்த மீனின் முள்' கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில், முற்போக்கு மேடைகளில் நேரடித் தன்மையோடு ஒலிக்கும் வகைக் கவிதைகள்கூட மெல்லிய தொனியில் வெளிப்பட்டுள்ளன.

இத்தொகுப்பின் சில படிமங்கள் கவிதைகளை செழுமையாக்குகின்றன. 'ஒரு தையல் பெண்ணின் காலடியில் கிடக்கும் வண்ணவண்ண துண்டுத் துணிகளென பூத்துக்கிடந்த அந்த வனம்’, 'விற்றுக்கொண்டு செல்லும் கலர்க்கோழிக் குஞ்சுகள் என உதிரும் கருவேலம்பூக்கள்’, 'பெருங் குளத்திற்கும் வளையல்கள் போட்டுவிடும் தட்டானுக்கு முன்பின் ஒத்திகை அதுநிமித்தம் இருந்ததில்லை…' போன்றவை சில உதாரணங்கள். மேலும் ஒரு கவிதையில், 'புத்தகத்திற்குள் வைக்கும் மயிலிறகுகள் இப்போதெல்லாம் குட்டிப் போடுவதில்லை மாறாக, படிக்கத் தொடங்கிவிட்டன' என்று வாசிப்பின் நேசத்தைப் பேசுகிறார்.

காதல் கவிதைகளில் உயர்வு நவிற்சிமிகுந்திருப்பதால், தொகுப்பிலிருந்து தனியே தெரிகின்றன. என்றாலும், பூனைகளின் அணுகுமுறை, வேப்பம்பழங்களை விதைக்கும் காக்கைகள், எப்பேர்பட்ட ஆடைகளும் கரித்துணியாகும் நிலை, பக்கங்களை ஒன்றிணைக்கும் ஸ்டேப்ளர் பின்கள், பிணமாய் இருத்தலின் சௌகரியங்கள், அரிவாளுக்குக் காத்திருக்கும் ஆசையாய் வளர்த்த ஆடு, மனைவிகளின் வீட்டுழைப்பு என புதிய பாடுபொருள் சார்ந்த நகர்வுகளிலும், யதார்த்தத்தில் காலூன்றுவதை உறுதி செய்துள்ளார் கவிஞர் ஏகாதசி. - பால்

பூவென விரிந்த மீனின் முள்
ஏகாதசி
விலை ரூ.160
வேரல் புக்ஸ்,
தொடர்புக்கு: 9578764322

SCROLL FOR NEXT