இலக்கியம்

கம்பன் தந்த புதையல் | நூல் வெளி 

ஆனந்தன் செல்லையா

பல்வேறு வகையான பண்பாடுகளைக் கொண்டுள்ள இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இலக்கியமாக ராமாயணம் உள்ளது. வடமொழியில் வால்மீகி எழுதியதை மூல நூலாகக் கொண்டு, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் எழுதப்பட்ட ராமாயணம் ஒவ்வொரு மொழிக்குமான தனித்தன்மையைப் பிரதிபலிக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் இயற்றிய ‘ராமாவதாரம்’ என்கிற நூல், ‘கம்பராமாயணம்’ எனப் பெயர் பெற்றமை கம்பரின் கவித்திறனுக்குச் சான்றாகும்.

இந்நூலைப் பயில்வதையும் உலகம் முழுவதும் பரப்புவதையும் தங்கள் வாழ்நாள் கடமையாகக் கருதிய சான்றோர்களால் 1974இல் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘சென்னை கம்பன் கழகம்’. நீதியரசர் மு.மு.இஸ்மாயில் இதன் முதல் தலைவராகவும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பதிப்பாசிரியர் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்.

கம்பராமாயணத்தின் மூலப் பிரதியைப் பதிப்பித்தல், கம்பன் விழா, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமண்டபம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துதல், கம்பராமாயண வகுப்பு நடத்துதல் போன்ற கம்பன் கழகத்தினரின் பணிகளுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோலத் தற்போது வெளியிடப்பட்ட கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு மலரைக் கூறலாம்.

கம்பனின் கவித்திறனில் தம் மனதைப் பறிகொடுத்த 133 சான்றோர்களின் செய்யுள்கள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பான இந்நூல் ‘கம்பன் கலைக்களஞ்சியம்’ எனப்படுவது மிகவும் பொருத்தமானது. 832 பக்கங்களில் நேர்த்தியான நூல் கட்டுமானத்தில் அமைந்த இந்தக் கலைக்களஞ்சியம், கம்பராமாயணத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிறது. கம்பன் கழகத்தின் தற்போதைய தலைவரான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.

பாரதியார், உ.வே.சா., வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட தமிழ் இலக்கிய முன்னோடிகள் ஒரு பக்கம்;  சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், சுவாமி சித்பவானந்தர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற சமயப் பெரியோர் இன்னொரு பக்கம்; ராஜாஜி, சி.பி.ராமசுவாமி ஐயர், ஜீவா, ம.பொ.சி. போன்ற தலைவர்கள் மற்றொரு பக்கம்; கவிமணி தேசிகவிநாயகம், நாமக்கல் வெ. ராமலிங்கம் போன்ற தேச விடுதலைக்காகப் பாடிய கவிஞர்கள்; கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்கள்; ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் போன்ற தமிழ் வரலாற்றாய்வுப் பெருந்தகைகள்; மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம், வ.ஐ.சுப்பிரமணியம், இரா. இளங்குமரன், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியன், அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழறிஞர்கள்; புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள்; அசலாம்பிகை அம்மையார், பத்மாசனி அம்மையார் போன்ற பண்டிதைகள் ... இப்படி இலக்கியத் தேட்டத்தை மேன்மேலும் தூண்டுகிற ஒரு பெருங்கூட்டமே கம்பராமாயணக் கடலில், தான் கண்டெடுத்த முத்துப்போன்ற அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளது.

பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவரான கம்பர் மூலமாகவே ராமாயணம் தமிழருக்கு அறிமுகமானது எனக் கருதப்படுகிறது. ஆனால் சங்க காலத்துக்கு முன்பே ராமாயணம் தமிழகத்தில் பயிலப்பட்டு வந்ததைத் தொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம் போன்ற நூல்களின் பழமையான உரைகளைச் சான்றாகக் கொண்டு ‘கம்பன் அடிப்பொடி’ சா. கணேசன் கூறுகிறார்.

அயோத்தியிலிருந்து இலங்கை வரைக்குமான ஒவ்வொரு களமும் கம்பனின் எழுத்தாற்றலால் தமிழ் நிலத்துக்கான வர்ணனையைப் பெறும் அற்புதம் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. வால்மீகியின் சித்தரிப்பில் சராசரி உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக வலம்வரும் ராமனும், சீதையும், மற்ற கதாபாத்திரங்களும், கம்பனின் பார்வையில் பேரன்பில் கனிந்த மாந்தராக, துன்பத்தை முதிர்ச்சியால் கடந்து செல்வோராக உருவெடுக்கின்றனர்.

இலக்குவனின் சீற்றம், அனுமனின் பேச்சுத்திறன், வாலி மனைவி தாரையின் முதிர்ச்சி, ராவணனின் சதிக்கு முதலில் மறுப்புத் தெரிவிக்கிற மாரீசனின் நியாயம் என ஒவ்வொருவர் மீதும் கட்டுரைகள் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. உவமைகள், எதுகை மோனைகள், இசைக்குறிப்புகள், பெண்கள் மனநிலை, இயற்கையின் போக்கு என வெவ்வேறு பரிமாணங்களில் கம்பராமாயணத்தை ஆய்வு செய்யும் இந்த நூல் ஓர் இலக்கியப் புதையல்.

கம்பன் கலைக்களஞ்சியம்
எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.
ஆழ்வார்கள்
ஆய்வு மையம்
விலை: ரூ.1200.
தொடர்புக்கு: 90423 81129

- தொடர்​புக்கு: anandchelliah@hindutamil.co.in

SCROLL FOR NEXT